You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நீட் முதுநிலை கவுன்சிலிங்: டெல்லியில் போராட்டத்தை விலக்கிக் கொண்ட மாணவர்கள்

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், சேர்க்கை கலந்தாய்வை நடத்த முடியவில்லை. ஜனவரி 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. விரைவில் கலந்தாய்வு தொடங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது." என்று சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உண்டாகியுள்ளது.

    கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர் என பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது..

  2. தொடர்ந்து இணைந்திருங்கள்..

    இந்த நேரலைப் பக்கத்தை இனி தொகுத்து வழங்குவது பிபிசி தமிழின் ஜோ. மகேஸ்வரன்.

    மேலதிகச் செய்திகளுக்கு இணைந்திருங்கள் நேயர்களே.

  3. கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் புதிய விதிகள்

    கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது அமெரிக்க அரசு.

    இந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்றாலும், அமெரிக்காவில் பல தொழில்முனைவோரும், கொள்கை வகுப்பாளர்களும் இவற்றைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறார்கள்.

  4. 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' அமைப்பு வெளிநாட்டு நிதி பெற அனுமதி மறுத்த இந்திய அரசு

    அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு.

    ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிககளைக் கொண்டுள்ள 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்கிற அமைப்பு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மிக மோசமான உடல் நலம் கொண்டோரைப் பராமரிக்கும் இல்லம் போன்றவைகளை நிர்வகித்து வருகிறது.

    "எதிர்மறையான தகவல்கள்" வருவதால் அவ்வமைப்பின் பதிவைப் புதுப்பிக்கவில்லை என இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று அறிவித்தது.

  5. உலகெங்கும் 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து

    கிறிஸ்துமஸ் வார இறுதியில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது.

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இதனால் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை உலக அளவில் உண்டாகியுள்ளது.

    வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பத்தாயிரம் விமானங்களின் புறப்பாட்டு நேரம் தாமதமாகியுள்ளது.

    திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் ரத்தாகின. செவ்வாய்க்கிழமையான இன்று 1100க்கும் அதிமான விமானங்கள் இதுவரை ரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.

  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது விக்னேஷ்.அ. எங்களோடு இணைந்திருங்கள்.