கொரோனா மற்றும் அதன் புதிய திரிபான ஒமிக்ரானை
எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பு மருந்தை கட்டாயமாக்க வேண்டும் என ஐரோப்பிய
ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“தீவிரமாக
பரவக்கூடிய” கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தடுப்பூசிகள்
முக்கியமானதாக இருக்கும்” என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுளா வான்டேர் லெய்ன்
தெரிவித்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட
நாடுகளில் ஒமிக்ரான் தோன்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியுள்ளது.
தற்போதைய சூழலில்
ஒமிக்ரான் பாதிப்பு மிதமானதாகவே உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதன் கிழமை
பிரஸ்செல்சில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வான்டேர் லெய்ன், “ஐரோப்பிய
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.எனவே கட்டாய தடுப்பூசி குறித்து விவாதிப்பது, “பொருத்தமானது
மற்றும் புரிந்து கொள்ளத்தக்கது” என்றார்.
கட்டாய தடுப்பூசியை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனிப்பட்டமுறையில் செயல்படுத்த முடியும். ஏற்கனவே, சில நாடுகள்
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. வரும் பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி கட்டாயம்
என்று ஆஸ்திரியா அறிவித்துள்ளத்து. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
கிரீஸ் அபராதம் விதிக்கிறது.
ஜெர்மனியின்
அடுத்த அதிபர் ஒலாப் ஸ்கேல்ஸ், கட்டாய தடுப்பூசியை தான் ஆதரிப்பதாக தொலைக்காட்சி பேட்டியில்
தெரிவித்துள்ளார். “வரும் மார்ச் மாதம் முதல் கட்டாய தடுப்பூசியை விரும்புகிறேன்.பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு
வருவது அவசியம்,” என்றார்.
முதன்முறையாக
தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது , ஒமிக்ரானை கவலைக்குரிய திரிபாக உலக
சுகாதார நிறுவனம் அறிவித்தது. புதிய திரிபு குறித்து அடுத்த சில நாட்களில் அறிய முடியும்
என்றும் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில்
ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை புதன் கிழமை இரு மடங்காக பதிவாகியுள்ளது. இந்த திரிபு
இன்னும் தாக்கத்தை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில்,
தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய திரிபைத் தடுக்கும் என்று நம்புவதாக ஏற்கனவே உலக சுகாதர
நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘தடுப்பூசி
வேலை செய்யாது என்பதற்கு ஆதாரமில்லை’
ஒமிக்ரான் பரவுவதைத்
தடுக்க பல நாடுகள் எல்லைகளில் நுழைவு அனுமதியைக் கடுமையாக்கியுள்ளன. நைஜீரியா, நார்வே,
தென் கொரியா ஆகிய நாடுகளில் ஒமிக்ரான் பதிவாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமையன்று
அமெரிக்காவிலும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஏற்கனவே 8 நாடுகளுக்கு
பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாடுகளுக்கு சென்றவர்களின் விபரங்களை விமான
நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.