ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு கவலைக்குரியது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் தடுப்பு,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து,இந்திய அரசு கடந்த 28ம் தேதி வெளியிட்ட திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன்படி,சென்னை,திருச்சி,மதுரை,கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு,தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாயம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
“ இந்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதலை முழுமையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள,தென் ஆப்பிரிக்கா, சீனா, நீயூசிலாந்து, ஹாங்ஹாங், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், பிரேசில், வங்கதேசம்,போட்ஸ்வானா,மொரிஷியஸ், ஜிம்பாப்வே,சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தே வெளியே அனுமதிக்கவேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை விமான நிலையத்திலேயே தனியிடத்தில் தங்கும் வசதி தரவேண்டும். பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எட்டாவது நாள் மறு பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதும் தொற்று இல்லை என்றாலும் மேலும் 7 நாட்களுக்கு சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால்,அவர்களுடைய பரிசோதனை மாதிரியை ஜெனோமிக் டெஸ்ட்டிங் செய்ய INSACOG ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றறிக்கை விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கும், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.