தொடரும் கன மழையால் திருச்சி மாநகரில் கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், லிங்க நகர், சண்முகா நகர், உய்யகொண்டான் திருமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் படகுகளில் செல்கின்றனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புங்கனூர் பகுதியில் அரியாற்றில் 120 அடி நீளத்திற்கு நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆறு உடைப்பு, வெள்ளத்தில் 1, 200 ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. அரியாறு உடைப்பு சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினருடன் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பிபிசி தமிழிடம் கூறுகையில், "வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து 800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினமும் 3, 400 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அரியாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை இன்று மாலைக்குள் அடைத்து விடுவோம். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடிய வைக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்" என்றார்.