You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நெதர்லாந்து சென்ற விமானப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நெதர்லாந்து சென்ற விமானப் பயணிகளுக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு

    தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸுக்கான சோதனை செய்த 61 பயணிகளில் அவர்களும் அடங்குவர். கொரோனாவின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    ஒமிக்ரான் திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடந்த புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்கா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

  2. கவுதம் கம்பீருக்கு ஒரே வாரத்தில் மூன்றாவது கொலை மிரட்டல்: காவல்துறை

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தலைவருமான கெளதம் கம்பீருக்கு கடந்த 6 நாட்களில் மூன்றாவது முறையாக 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நள்ளிரவு 1.37 மணிக்கு வந்த அந்த மின்னஞ்சலில், "எங்கள் உளவாளிகள் டெல்லி காவல்துறையில் உள்ளனர். உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் பெறப்படுகின்றன." என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

    முன்னதாக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது.

    இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    "கௌதம் கம்பீருக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.32 மணிக்கு அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கில் முதல் கொலை மிரட்டல் வந்தது. உன்னையும் உன் குடும்பத்தையும் கொல்வோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்று கம்பீர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கம்பீருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  3. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் ஒருநாள் தாமதம்

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்திருக்கும் நிலையில், அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிர்பார்த்ததைவிட ஒருநாள் தாமதமாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திங்கட்கிழமையன்று அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன் பிறகு, அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது ஒரு நாள் தாமதமாக 30-ஆம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  4. ஒமிக்ரான் அச்சம்: வெளிநாட்டினருக்கு தடை விதிக்கிறது இஸ்ரேல்

    புதிய கொரோனா திரிபு பரவி வருவதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோர் நாட்டுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் 14 நாள்கள் தடைவிதிக்க இருக்கிறது.

    அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் திரிபு இஸ்ரேலில் ஒருவருக்கு தொற்றியிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    புதிய திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வருவோருக்கு பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

    50 பிறழ்வுகளைக் கொண்ட இந்தத் திரிபை "கவலைக்குரிய திரிபு" என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

  5. திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்ற பாஜக - முக்கிய எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ்

    திரிபுராவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அனைவரையும் அச்சர்யப்படுத்தும் வகையில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாமிடத்தைப் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மூன்றாமிடத்துக்கு தள்ளியுள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் வெகு சமீபத்தில் தான் திரிபுராவில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. 15 வார்டுகளைக் கொண்ட தலாய் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பசா நகராட்சிக்கு உட்பட்ட வார்ட் ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களோடு முதல் முறையாக தேர்தல் களம் கண்ட 'தி இண்டிஜீனியஸ் ப்ராக்ரசிவ் ரீஜனல் அலையன்ஸ்' என்றழைக்கப்படும் மலைவாழ் மக்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன. மீதமுள்ள 12 வார்டுகளையும் பாஜக வென்றுள்ளது.

    அகர்தலா நகராட்சியிலுள்ள 51 வார்டுகளில், முடிவுகள் வெளியாகியுள்ள 22 வார்டுகளில் பாஜகவினர் வெற்றி பெற்றாலும் பெரும்பாலான இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஆளுங்கட்சி தேர்தல் முறைகேடு செய்வதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார் கூறி வரும் நிலையிலும் திரிணாமூல், பாஜகவினருக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    ஒட்டுமொத்தமாக திரிபுராவில் 334 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 13 நகராட்சி கவுன்சில்கள், 6 நகர பஞ்சாயத்துக்களும் அடக்கம்.

  6. நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதா வாபஸ்பெறும் சட்டம் நாளை தாக்கல்

    வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் சட்டத்தை நாளை (நவம்பர் 29, திங்கட்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார் இந்திய அரசின் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

    கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் போராடத் தொடங்கினர். பல கட்ட போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஒப்புக் கொண்டது.

    நாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது என விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

  7. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    தெற்கு அந்தமானில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் ராமேஸ்வரம் உட்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.