கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பரவலான கவனத்தை பெற்று வருகிறது.
குறவர் சமுதாயத்தை சேர்ந்த எங்களின் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்னணியை காரணமாக வைத்து எங்கள் சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கைது செய்தவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தில்லைநகரைச் சேர்ந்த புவனேஸ்வரி. இவர் தனது கணவர் உட்பட உறவினர்கள் 5 பேரை காவல் துறையினர் எந்த காரணமும் இன்றி அடித்து அழைத்துச் சென்றதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்ட பிரகாஷ் என்பவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், தனது கணவர் பிரகாஷ்(25), உறவினரான தர்மராஜ்(35), செல்வம்(55) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவல் துறையினர், தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றனர். காரணம் கேட்டபோது கூட கூற மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது காவல் துறையினர் அழைத்துச் சென்றவர்கள் அங்கில்லை என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினர்.
இதனிடையே நேற்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் எங்களது உறவினர்களான பரமசிவம்(42) மற்றும் சக்திவேல்(29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்," என்கிறார் அவர்.
"எனது கணவர் மற்றும் உறவினர்கள் இருவரும் எந்த குற்றமும் செய்யாத நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களது உயிருக்கும் உடமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் நாங்கள் பட்டியலின குறவர் சாதியை சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவும், படிப்பறிவில்லாத ஏழ்மை நிலையில் வசிக்கின்ற எங்களின் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்னணியையும் காரணமாக வைத்து எங்கள் சமூகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத சுமார் 15 காவலர்கள் மீது சட்ட ரீதியாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என புவனேஸ்வரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினரை பிபிசி தொடர்பு கொண்டு கேட்டது.
அப்போது பேசிய காவல் துறையினர், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக மூன்று பேர்களின் கை ரேகைகள் ஒத்துப் போனது. அந்த மூன்று பேரும் குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மீதம் இருவரை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டோம்.
இவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கு பற்றிய முழு விவரமும் விரைவில் தெரிவிக்கப்படும்," என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.