இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டுக் கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது மோதியதில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டியெடுத்து உடல்கூராய்வு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மீனவர் ராஜ்கிரணின் மனைவி சுகந்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று நடைபெற்றது.
இதையடுத்து மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, "நவம்பர் 18 ம் தேதி தாசில்தார், காவல் துறையினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும்.அதே இடத்தில், மறு உடல் கூராய்வு மேற் கொள்ள வேண்டும்," என்று உத்தரவிட்டார்.
மேலும், அரசு மருத்துவர்கள் சரவணன், செல்வகுமார் குழுவினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மீனவர் ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவியல் அதிகாரிசேவியர் செல்வ சுரேஷ் மறு உடற்கூராய்வின் போது உடன் இருப்பார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மீனவர் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மறு உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
முன்னதாக, இது தொடர்பாக ராஜ்கிரணின் மனைவி கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம்கோட்டைப்பட்டினம்
விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3
பேரும் படகில் நடுகடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை
தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின்
படகை இடித்ததில் மீனவர்களின் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு
நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்," என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய
கடற்படையிடம் ஒப்படைத்தது.
இந்த உடலை, ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உட்பட உறவினர்களிடம் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல்
அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம்
என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது.
எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
ராஜ்கிரன், உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு
இறந்தார் என கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரி தரப்பில் விசாரணை செய்ய
உத்தரவிட வேண்டும்." என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.