சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,நவம்பர் 17ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் தொடர்பில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு

    அர்ஜுன் சம்பத்

    பட மூலாதாரம், INDU MAKKAL KATCHI OFFL TWITTER

    நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

    இது தொடர்பாக காவல்துறை அளித்திருக்கும் பத்திரிகை செய்தியில், “விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு 1001 வழங்கப்படும் என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.

    அர்ஜுன் சம்பத்தின் கருத்து அமைதி மீறுதலைத் தூண்டும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் இருப்பதால், அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. காஷ்மீர் காங்கிரஸுக்கு நெருக்கடி: 20 தலைவர்கள் கூண்டோடு பதவி விலகல்

    காங்கிரஸ்

    பட மூலாதாரம், HINDUSTAN TIMES

    படக்குறிப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 முன்னாள் அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் உட்பட 20 காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து கருத்து தெரிவிக்க கட்சி அவகாசம் அளிக்கவில்லை என்று கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கூட்டாக அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் இந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராஜிநாமா செய்த தலைவர்கள் முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

    தலைவர்கள் ராஜிநாமா செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

    தலைவர்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை. சோனியா காந்தி மட்டுமின்றி ராகுல் காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸின் செயலாளர் ரஜினி பாட்டீலுக்கும் இந்த தலைவர்கள் பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளதாக மாநில காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

    கட்சித் தலைமையின் "விரோத மனப்பான்மை" காரணமாக, கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்தத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மாநில பிரச்னைகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும், ஆனால் நேரம் கொடுக்கவில்லை என்றும் அவர் எழுதினார்.

    இருப்பினும், ஆதாரங்களின்படி, முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட சில தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் இந்தத் தலைவர்களிடம் இருந்து விலகி உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் இங்கு தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் காங்கிரசை விட்டு 20 தலைவர்கள் ஒன்றாக வெளியேறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  4. கர்தார்பூர் குருத்வாராவை அடைந்த இந்திய யாத்ரீகர்களுக்கு வரவேற்பு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கர்தார்பூர் பாதை மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, இந்திய சீக்கியர்களின் முதல் குழு புதன்கிழமை அங்குள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பை அடைந்தது.

    இந்தக் குழுவில் மொத்தம் 50 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    குருத்வாராவிற்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை பாகிஸ்தான் வரவேற்பதாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளது.

    சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 55ஆம் பிறந்தநாளை முன்னிட்டு (நவம்பர் 19) இந்த சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப்பை அடைந்துள்ளனர்.

  5. கள்ளக்குறிச்சியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த மூவர் கைது - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முறையிட்ட மனைவி, நடராஜ் சுந்தர்

    கள்ளக்குறிச்சி
    படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் மனு அளித்த புவனேஸ்வரி

    கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பரவலான கவனத்தை பெற்று வருகிறது.

    குறவர் சமுதாயத்தை சேர்ந்த எங்களின் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்னணியை காரணமாக வைத்து எங்கள் சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கைது செய்தவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தில்லைநகரைச் சேர்ந்த புவனேஸ்வரி. இவர் தனது கணவர் உட்பட உறவினர்கள் 5 பேரை காவல் துறையினர் எந்த காரணமும் இன்றி‌ அடித்து அழைத்துச் சென்றதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்ட பிரகாஷ் என்பவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், தனது கணவர் பிரகாஷ்(25), உறவினரான தர்மராஜ்(35), செல்வம்(55) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவல் துறையினர், தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றனர். காரணம் கேட்டபோது கூட கூற மறுத்துவிட்டனர்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது காவல் துறையினர் அழைத்துச் சென்றவர்கள் அங்கில்லை என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதாக கூறினர்.

    இதனிடையே நேற்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் எங்களது உறவினர்களான பரமசிவம்(42) மற்றும் சக்திவேல்(29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்," என்கிறார் அவர்.

    "எனது கணவர் மற்றும் உறவினர்கள் இருவரும் எந்த குற்றமும் செய்யாத நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களது உயிருக்கும் உடமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் நாங்கள் பட்டியலின குறவர் சாதியை சேர்ந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவும், படிப்பறிவில்லாத ஏழ்மை நிலையில் வசிக்கின்ற எங்களின் மிகவும் பின்தங்கிய பொருளாதார பின்னணியையும் காரணமாக வைத்து எங்கள் சமூகத்தைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத சுமார் 15 காவலர்கள் மீது சட்ட ரீதியாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என புவனேஸ்வரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினரை பிபிசி தொடர்பு கொண்டு கேட்டது.

    அப்போது பேசிய காவல் துறையினர், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக மூன்று பேர்களின் கை ரேகைகள் ஒத்துப் போனது. அந்த மூன்று பேரும் குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மீதம் இருவரை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டோம்.

    இவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கு பற்றிய முழு விவரமும் விரைவில் தெரிவிக்கப்படும்," என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

  6. இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வர ராஜீய பேச்சுவார்த்தை தொடக்கம்: டக்ளஸ் தேவானந்தா, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கை தமிழர்கள்

    பட மூலாதாரம், DOUGLAS DEVANANDA

    படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழில் அமைச்சர்

    இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாய் நாட்டிற்கு மீள வருகைத் தர விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதை குறிப்பிட்டார்.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்படாமல் வாழ்ந்து வரும் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக 1259 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,200 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிதித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

    நாட்டிற்கு வருகைத் தர விரும்புவோரை, நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் குறித்து, இந்திய அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, யாழ்ப்பாணம் − காங்கேசன்துறை இறங்குத்துறை அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    இந்த துறைமுகம் அபிவிருத்தி அடையும் பட்சத்தில், வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிருந்து நேரடியாக கொண்டு வர முடியும் என்றார் அவர்.

    அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில், இலகுவாக கொள்வனவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

  7. சொல்லிக் கொள்ளாமல் சென்னையை விட்டுப் புறப்பட்டார் சஞ்சீப் பானர்ஜி

    நீதித்துறை

    பட மூலாதாரம், MHC

    படக்குறிப்பு, சஞ்சீப் பானர்ஜி

    மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடையயைும் தவிர்த்து விட்டு சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

    கார் மூலமாக தமது குடும்பத்தினருடன் சென்ற அவர் அவரது பூர்விகமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறாரா அல்லது தனக்கு இடமாற்றல் வழங்கப்பட்ட மேகாலயா மாநிலத்துக்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.

    அதே சமயம், அவர் கையெழுத்திட்டு சக நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளர், உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் நீதிபதிகள் சமூகம், உயர் நீதிமன்ற பதிவாளர், ஊழியர்கள் என பலரையும் குறிப்பிட்டு அவர் உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. ஸ்டாலினின் மழை வெள்ள கள ஆய்வு: குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரபுராவ் ஆனந்தன்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழக மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட செல்லும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சரியான முறையில் கள ஆய்வு மேற்கொள்வதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம்:

    "மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசுவிவசாயிகளுக்கு 1-ஹெக்டருக்கு 20-ஆயிரம் ரூபாய்நிவாரண நிதி கொடுப்பதாக கூறி உள்ளார் ஆனால் இதை முதல்வர்தான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயல் ஏற்பட்டபோது 1-ஏக்கருக்கு 30-ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

    எதிர்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தற்போதைய முதல்வர் இப்போ எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.

    மத்திய அரசை பொருத்தவரையில் மழை வெள்ள பதிப்புகள் குறித்து ஒரு குழு அமைத்து அவர்கள நேரில் கள ஆய்வு மேற்கொண்டபின் மத்திய அரசுக்கு தேவையான நிதியை வழங்கும்," என்றார் அண்ணாமலை.

    எதிர்கட்சி தலைவராக இருந்தபோது குறைகள் கூறிய தற்போதைய தமிழக முதல்வர், தற்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு நிவாரணத்தை குறைத்து கொடுத்து கொண்டு இருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

    மேலும் தமிழக முதல்வர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வரும்நிகழ்ச்சியினை ஒரு டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி செய்கின்றனர் மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்வர் விவசாய நிலத்தில் அழுகி கிடக்கும் பயிர்களை இறங்கி கையில் எடுத்து பார்த்தால்-தான் விவசாயின் வேதனை புரியும் அவர்களுக்கு நிவாரண உதவி குறையாக வழங்காமல்கூடுதலாக வழங்க வேண்டும் என்ற என்னம் வரும் தமிழக முதல்வர் தனது தவறை திருத்தி கொள்வார் என்று நம்புகின்றேன் என்றார்

    மேலும் வரும் 22-ம்தேதி அனைத்து மாவட்டத்திலும் பாஜக சார்பாக பெட்ரோல் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்-

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, மதுரையில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது, ஜி. மணிவண்ணன், திருச்சி

    மதுரை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த கோரி கடந்த இரு தினங்களாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைத

    இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தொடர்பாக மாநில உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லூரிகள் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் மாணவர்களை விரட்டி கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை சொக்கிகுளம் மற்றும் கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரி முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    தொடர்ந்து மாநகரில் கவால்துறையினர் கல்லூரி மாணவர்களை போராட்டத்தை கட்டுப்படுத்த ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலைகழக கல்லூரி, மதுரா கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 710 கல்லூரி மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேர்த்தல், தவறான கருத்துகளை பதிவிடும் முயற்சி என 3பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம், தல்லாகுளம் ஆகிய காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    5 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மீதும் தனிதனியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

    இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் தமுக்கம் மைதானம், நரிமேடு, செல்லூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் நாளை 18ஆம் தேதி எட்டு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து, தென் மேற்கு வங்க கடல் பகுதியிலும் அதை ஒட்டிய மத்திய மேற்கு கடல் பகுதியிலும் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் கடல் பகுதியிலும் நாளை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவுகிறது என்று கூறினார்.

    மேலும், மழை நிலவரம் மற்றும் எதிர்வரும் வானிலை கணிப்பு விவரத்தையும் அவர் பட்டியலிட்டார்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிகழம், புதுச்சேரியில் அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் திருமூர்த்தியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது.

    அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன மழையும் பிற மாவட்டங்கலில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    நாளை 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, வெள்ள சேத மதிப்பீடு: தமிழகத்துக்கு ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது மத்திய அரசு

    தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்யவும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக ஆராயவும் மத்திய குழு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உடனடி நிவாரணமாக ரூ. 500 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது கடிதத்தை அமித் ஷாவிடம் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு வழங்கி, அரசின் கோரிக்கைகளை விளக்கினார்.

    அப்போது அமித் ஷா தன்னிடம் அரசு கோரிய ரூ. 500 கோடி நிதியை மத்திய குழு ஆய்வு செய்து திரும்பியவுடனேயே விடுவிப்பதாக கூறினார் என்று டி.ஆர். பாலு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்துக்கு உடனடியாக ரூ. 550 கோடி நிதி தேவை: அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாட்டில் மழை பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ. 550 கோடி நிதி தேவை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் அளித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நவம்பர் 8 முதல் 14ஆம் தேதிவரை வழக்கத்தை விட 49.6 சதவீதம் அதிகமாக பெய்ந்துள்ளதாக ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டுக்கு இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்த நிரந்தர நிதியாக ரூ. 2,079 கோடி வழங்க வேண்டும் என்றும் இதில் உடனடியாக ரூ. 550 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பேரிடர் காலத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி, ஏற்கெனவே தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றை கையாளும் நடவடிக்கைக்காக செலவாகி விட்டதாகவும் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 49,757 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதையும் தமது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

  13. யுகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஐஎஸ் தாக்குதல் - 3 பேர் பலி

    யுகாண்டா

    பட மூலாதாரம், Reuters

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகே, நவம்பர் 16ம் தேதி செவ்வாய்கிழமை தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

    குண்டுகளை கட்டிக்கொண்டு வந்க மூன்று தற்கொலை குண்டுதாரிகள் நாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் உள்ள நகர காவல்துறை தலைமையகம் பகுதிக்கு சில அடி தூரத்தில் மூன்று நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

    யுகாண்டா

    இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றிருப்பதாகவும் அமாக் முகமையின் செய்திகள் கூறியுள்ளது.

    இந்த சம்பவத்துடன் தொடர்புடையாக சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் பொருத்தி இருந்த வெடிபொருள் ஆடையை வெடிக்க வைப்பதற்கு முன் அவரை பிடித்ததாக காவல்துறை கூறுகிறது.

  14. இலங்கை கல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டால்பின்கள் - அரிய படங்கள், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கை டால்பின்கள்
    படக்குறிப்பு, கல்பிட்டி கடலில் துள்ளிக்குதிக்கும் டால்பின்கள்

    இலங்கை கல்பிட்டி கடலில் அரிய நிகழ்வாக டால்பின்கள் தென்பட்டன. உற்சாகத்துடன் காலை வேளையில் துள்ளிக்குதிக்கும் அந்த டால்பின்களின் சில படங்கள் இங்கே உங்களுக்காக.

    இலங்கை

    கொழும்பில்இருந்து வடக்கு நோக்கி 130 வதுகி.மீ(81மைல்) தூரத்தில் கடல்நீரேரியைத்தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம்.

    கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது.

    புத்தளம் நகரிற்கும்,கல்பிட்டிக்கும்இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு.

    உள் நாட்டிற்குள் அமைந்த மிகப் பெரிய நீர்ப்போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும்.

    இலங்கை
    இலங்கை
  15. இன்றைய நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இன்றைய நேரலை பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்