இலங்கையில் இறந்த தமிழக மீனவர்: மீண்டும் உடல் கூராய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறந்தவரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவில் தமது கணவர் இறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதை சரி செய்வதில் என்ன நேர்ந்து விடப்போகிறது என்று கூறி இறந்தவரின் சடலத்தை மறு உடல்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,நவம்பர் 16ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் தொடர்பில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
தமிழக மழை: வெள்ளம் சூழ்ந்த குமரி கிராமத்தில் உதவிக்காக காத்திருக்கும் கிராமவாசிகள், பிரபுராவ் ஆனந்தன்
குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் அணைகள் நிரம்பியது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் குமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக கிராமத்திற்கு வரவில்லை என்றும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
காணொளிக் குறிப்பு, மழை பெய்து நாலு நாளாச்சு, யாரும் வரலை - விரக்தியில் குமரி கிராம மக்கள்
ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்களாக மணல் பகுதியில் சிக்கிய குடும்பம் மீட்பு
பட மூலாதாரம், Reuters
ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் நான்கு நாட்களாக கேம்பர்வேனில் சிக்கியிருந்த குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த குடும்பத்தின் வேன் சேற்றில் சிக்கியதால் எங்கும் நகர முடியவில்லை.
லிண்ட்சே, ஓரி ஜாவ்ரோஸ் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகளான ஜாய், ஜேன் ஆகியோர் கனமழைக்குப் பிறகு அருகிலுள்ள நகரமான ஓட்னாடாட்டாவிலிருந்து 150 கிமீ தொலைவில் சிக்கிக்கொண்டனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அவர்கள் அவசர உதவி சேவையின் உதவியை நாடினர், ஆனால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ததால் அவர்களை மீட்புக்குழுவினர் அடைய ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, வானிலை சீராக இருந்ததால் இந்த குடும்பத்தை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீட்கப்பட்ட குடும்பத்தினர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டின்பேரில் வீடு திரும்புவர்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், உள்ளூர் நிர்வாகம் அவர்களின் தேவைக்காக அவசரகால பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் வீசியது. அவர்களிடம் தண்ணீர் மற்றும் செயற்கைக்கோள் போன் இருந்தன.
அந்த குடும்பத்திற்கு தேவையான மற்ற பொருட்களும் வேனில் இருந்தன.
பெர்த் குடும்பம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றதுடன், தங்களது பயணம் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், அவர் சமூக ஊடகங்களில், "எங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தொலைதூர பகுதிகளுக்கு நாங்கள் செல்கிறோம்" என்று எழுதியிருந்தார். ஆனால், சென்ற இடத்தில்தான் இதுபோன்ற அசம்பாவிதத்தை அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, அவர்கள் பயணம் செய்த வேன் இன்னும் அதே இடத்திலேயே உள்ளது.
பட மூலாதாரம், Reuters
தமிழக மீனவர் மர்ம சாவு: சொந்த ஊரில் அடக்கப்பட்ட சடலத்தை மறு உடல்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, கடந்த மாத இறுதியில் நடுக்கடலில் ஒப்படைக்கப்படுட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல்.
இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டுக் கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது மோதியதில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டியெடுத்து உடல்கூராய்வு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மீனவர் ராஜ்கிரணின் மனைவி சுகந்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று நடைபெற்றது.
இதையடுத்து மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, "நவம்பர் 18 ம் தேதி தாசில்தார், காவல் துறையினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும்.அதே இடத்தில், மறு உடல் கூராய்வு மேற் கொள்ள வேண்டும்," என்று உத்தரவிட்டார்.
மேலும், அரசு மருத்துவர்கள் சரவணன், செல்வகுமார் குழுவினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மீனவர் ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவியல் அதிகாரிசேவியர் செல்வ சுரேஷ் மறு உடற்கூராய்வின் போது உடன் இருப்பார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மீனவர் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மறு உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
முன்னதாக, இது தொடர்பாக ராஜ்கிரணின் மனைவி கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம்கோட்டைப்பட்டினம்
விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3
பேரும் படகில் நடுகடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை
தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின்
படகை இடித்ததில் மீனவர்களின் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு
நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்," என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய
கடற்படையிடம் ஒப்படைத்தது.
இந்த உடலை, ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உட்பட உறவினர்களிடம் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல்
அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம்
என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது.
எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
ராஜ்கிரன், உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு
இறந்தார் என கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரி தரப்பில் விசாரணை செய்ய
உத்தரவிட வேண்டும்." என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பணி இடைநீக்க நடவடிக்கையை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தாக்கல்
தன் மீது எஸ்பி அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி அளித்த பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்துள்ள அரசின் நடவடிக்கையை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அதன் மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு சமீபத்தில் அந்த நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்ட ராஜேஷ் தாஸ் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு கண்காணிப்பாளர் கண்ணன், அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது நேரில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், குற்றப்பத்திரிகை நகலை படிக்க அவகாசம் தராமல் சம்மன் அனுப்பியதாகவும் தன்னை பணி இடை நீக்கம் செய்துள்ள மாநில அரசின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்தார்பூர் சாஹிப் பாதையில் இந்திய யாத்ரீகர்களை மீண்டும் அனுமதிக்க இந்தியா முடிவு
கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்கும் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் செல்லும் பாதையை மீண்டும் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பாதை 2018ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அது கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது.
இந்த நிலையில், கர்தார்பூர் சாஹிப் பாதை நவம்பர் 17 முதல் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக இந்திய அரசு கூறியுள்ளது.
அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸுக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியிருக்கிறார்.
"கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது, அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்ட தொடர் மழையால் தனித் தீவாக மாறிய கிராமம், பிரபுராவ் ஆனந்தன்
குமரி மாவட்டத்தில் பெய்திருக்கும் தொடர் மழையால் ஒரு கிராமம் தனித்தீவாக மாறியிருக்கிறது.
மழையால் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் குமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளது.
பல கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வசித்து வந்த 150க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மூன்று நாட்களுக்கு மேலாக வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ள நீர் வடியாததால் இக்கிராம மக்கள் தங்களது அதியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக பாதிப்புக்குள்ளான மக்களை அரசு ஊழியர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரும் நேரடியாக சந்திக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசு சட்டத்தை ரத்து செய்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பில் உரிய மக்கள்தொகை கணக்கீடின்றியும் சாதி அடிப்படையிலும் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா போன்ற கேள்விகளுக்கு திருப்தியளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு பதில் தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், இந்த விவகாரத்தில் மாநில அரசு புதிதாக இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் ஏற்கெனவே அமலில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டிலேயே உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற உள் ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு மட்டுமின்றி வேறு ஏழு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின்படி சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்றும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பின்படியே உள்ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நவம்பர் 18இல் தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
குறைந்த காற்றழுத்த தாழுவுப்பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி ஆந்திரா, வட தமிழ்நாடு கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னைக்கு அன்றைய தினம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
போலாந்து எல்லை பிரச்சனை: பெலாரூஸ் மீதான தடையை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, போலாந்துக்குள் நுழையும் எண்ணத்துடன் எல்லையில் கடுங்குளிரில் காத்திருக்கும் குடியேறிகள்
பெலாரூஸ் மற்றும் போலாந்து நாடுகளுக்கு இடையிலான குடியேறிகள் பிரச்னையை பெலாரூஸ் தீவிரப்படுத்தி வருவதால், அந்நாட்டின் மீதான தமது தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்த உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜீய அதிகாரிகளில் ஒருவரான ஜோசஃப் போரெல் இத்தடை விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் குடியேறிகள் பிரச்சனை தீவிரமடைந்து வருவதாகவும், பாதிக்கப்படும் நிலையில் உள்ள குடியேறிகள் இப்போரில் சுரண்டப்படுவதாகவும் கூறினார்.
பெலாரூஸ் மீது, தன் நாட்டுக்குள் இருக்கும் குடியேறிகளை, எல்லையை நோக்கி வெளியேற்றி பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால் அதை பெலாரூஸ் மறுக்கிறது.
குடியேறிகள் ஒரு பக்கம் பெலாரூஸ் நாட்டுப் படை மறுபக்கம் போலாந்து நாட்டுப் படைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் குடியேறிகள் போலாந்து நாட்டுக்குள் நுழைய முடியவில்லை, அதே நேரம் பெலாரூஸ் நாட்டுக்குள் மீண்டும் நுழைவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.
இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி.