டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்று மாசுபாடு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தச் சூழலைச் சமாளிக்க சில காலம் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்புகளை ஆராயும்படி மத்திய அரசுக்கும் என்சிஆர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யோசனை தெரிவித்திருக்கிறார்.
டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தைக் கூட்டுமாறும் மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாக, இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியான என்சிஆரில் அண்டை மாநிலங்களில் குப்பை கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் 10% மாசு ஏற்படுகிறது என்று கூறினார்.
மேலும், 75% மாசு தொழிற்சாலைகள், தூசி, வாகனங்களின் புகையால் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி முழு முடக்கத்தை அமல்படுத்த தயார் என்று கூறப்பட்டிருந்தது.
அதே சமயம், மாசுபாடுக்கு காரணமான தொழிற்சாலைகள், புகை மாசு குறித்து டெல்லி அரசு தெரிவித்த விளக்கங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இந்த விஷயத்தில் டெல்லி அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் இத்தகைய சாக்குப்போக்கு வருமானத்தை தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.
எந்தெந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும், எந்தெந்த வாகனங்கள் மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டும், அதற்கு மாற்று என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய விசாரணையின் போது, சில பகுதிகளில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தவிர, காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வாகன நெரிசல் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது