கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தோவாளை தாலுகா பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக நெல்லை - நாகர்கோவில் இடையே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோரம் உள்ள இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும நல்லூர், திடல், மண்ணடி போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் பழைய ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒழுகினசேரி பகுதியில் இடுப்பளவு வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு இடுகாடு செல்லும் பாதை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் நெசவாளர் காலனி பகுதிகளில் படகு மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஊட்டுவாள் மடம், மீனாட்சி கார்டன் ஒழுகினசேரி வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
கனமழை அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆறுகளில் கடும் வெள்ளம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணைகளில் இருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 4032 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4144 கன அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 804 கன அடி தண்ணீரும், சிற்றாறு இரண்டு அணையில் இருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக தாமிரபரணி ஆறு,பழையாறு,பரளியாற்று பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திற்பரப்பு அருவியில் மழைநீர் மற்றும் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்ததின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கல் மண்டபத்தைத் பாதி அளவுக்கு தண்ணீர் செல்கிறது.
பரளியாற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கரை பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
ரயில்கள் ரத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரணியல் பகுதியில் இரட்டைக்கரை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால்மங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், உள்ளிட்ட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று காலை நாகர்கோவிலில் நிறுத்தபட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் குளங்கள் உடைந்து தண்டவாளங்கள் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.