உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு கூட்டுப்பாலியல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றநீதிபதி பவன் குமார் ராய் இந்த தீர்ப்பை வழங்கினார்.
குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மாநில சுரங்கத்துறை அமைச்சர் பதவி வகித்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள், சித்ரகூட் பகுதியில் மைனர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் காயத்ரி பிரஜாபதியுடன் சேர்த்து ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரி, விகாஸ் வர்மா, ரூபேஸ்வர், அமரந்தர் சிங், பின்டூ, சந்தரபால் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதில், ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரிக்கும் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
தண்டனைக்குள்ளான சந்திரபால், காயத்ரி பிரஜாபதியின் துப்பாக்கி ஏந்திய காவலர். வழக்கில் குற்றம்சாட்டிருந்தவர்கள் பிரஜாபதியின் நெருங்கிய உதவியாளர்கள் ஆவர்.
இந்த கூட்டுப்பாலியல் சம்பவம் 2017ஆம் ஆண்டு லக்னெளவில் உள்ள கெளதம்பள்ளியில் உள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடந்தது. வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தலையீட்ட பிறகே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அதே ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.
2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அவரது அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருந்தது.
அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சுரங்கத்துறையில் முறைகேடு நடந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் காயத்ரி பிரஜாபதிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காயத்ரி பிரஜாபதியின் கோடிக்கணக்கான சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கி நடவடிக்கை எடுத்தது.