விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: கைப்பற்றப்பட்டது என்ன?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்களின் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதவிர, விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்கள் என்ற வகையில் புதுக்கோட்டையில் உள்ள 32 இடங்களிலும் திருச்சி, மதுரை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என ஐம்பது இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராசி எண்டர்பிரைசஸ், அன்யா எண்டர்பிரைசஸ், ராசி புளூ மெட்டல்ஸ் என்ற பெயர்களில் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஆறு கோடி ரூபாயாக இருந்த விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு, 58.64 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டவுள்யூ கார், மிக்ஸர் வாகனங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள், விவசாய நிலங்கள், 14 கோடி மதிப்பில் சென்னையில் வீடு என சொத்துகள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோதனையில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கமும் 4.87 கிலோ தங்கமும் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வழக்குக்குத் தொடர்புடைய பணம் மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.