You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிங்கு எல்லை படுகொலை பற்றி அரசுக்கு தெரியும்: குற்றம்சாட்டும் விவசாயிகள்

சம்பவ பகுதியில் போலீஸ் தடுப்பு இருக்கிறது. அங்கு ஒரு படுகொலை நடக்கப் போகிறது என்பது காவல்துறை உளவுப்பிரிவுக்கு எப்படி தெரியாமல் போனது என்று கேள்வி எழுப்புகிறார் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. சிங்கு எல்லையில் விவசாயி படுகொலை பற்றி அரசுக்கு முன்பே தெரியும்: விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் குற்றச்சாட்டு

    டெல்லி - சிங்கு எல்லையில் விவசாயி லக்பீர் சிங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசுக்கு முன்பே தெரியும் என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் ராகேஷ் திகெய்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

    அந்த படுகொலை சம்பவத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

    இதில் தேவையின்றி விவசாய அமைப்புகளை அரசு தொடர்புபடுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் ராகேஷ் திகெய்த் கூறுகையில், "இது ஒரு மத சம்பவம். சம்பந்தப்பட்ட நிஹாங்கும் இது தங்களுடைய உள்விவகாரம் என்று கூறியிருக்கிறார்.

    இப்படியொரு சம்பவம் நடக்கிறது என்றால் அரசின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவ பகுதியில் போலீஸ் தடுப்பு கூட இருந்திருக்கிறது. இதை பார்க்கும்போது போலீஸாருக்கு தெரிந்தே அச்சம்பவம் நடந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது," என்றார்.

  3. டெல்லி சிங்கு எல்லையில் விவசாயி கொல்லப்பட்டது முதல் இதுவரை - கள நிலவரம் என்ன?

    டெல்லியை அடுத்த ஹரியாணா எல்லையில் உள்ள சிங்குவில் விவசாயி ஒருவரது கை துண்டிக்கப்பட்டு அவரது சடலம் தொடங்க விடப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீளவில்லை. அங்குள்ள கள நிலவரத்தை பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா.

    நிஹாங் சீக்கியர்களின் குழுவான அகாலி நிர்பையர் கால்ஸாவின் குருத்வாராவுக்கு வெளியே செய்தியாளர்களின் கூட்டம் நடந்தது. அதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான், பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சீக்கியரான லக்பீர் சிங்கின் சடலம் அதே குருத்வாராவுக்கு வெளியே உள்ள தடுப்பில் வெள்ளிக்கிழமை காலை தொங்கவிடப்பட்டிருந்தது.

    இந்த குருத்வாராவில் வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் புனித புத்தகத்தை லக்பீர் சிங் அவமதித்ததாகவும், பின்னர் அவர் பிடிக்கப்பட்டு அந்த செயலுக்கான தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் நிஹாங் சீக்கியர்கள் கூறுகின்றனர்.

    இங்குள்ள நிஹாங் சீக்கியர்களும், அவர்களின் தலைவரும், அதை நிஹாங் சீக்கியர்களின் "நடவடிக்கை" என்று அழைத்தனர்.இது குறித்த விரிவான கள தகவலை அறிய இங்கே சொடுக்கவும்.

  4. காப்பீட்டு திட்டங்கள் எந்த அளவுக்கு தேவை?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்

    காப்பீடு திட்டங்கள் நமக்கு எந்த அளவுக்கு அவசியம்? பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் அளிக்கும் விரிவான விளக்கம் இதோ.

    காப்பீடு என்பதும் முதலீடு என்பதும் வேறு வேறு. காப்பீடு என்பது பாதுகாப்பு. முதலீடு என்பது லாபத்தை எதிர்பார்த்து செய்யப்படுவது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்துமே முதலீட்டையும் காப்பீட்டையும் சேர்த்து வழங்குகின்றன. இதில் நுகர்வோருக்கு எந்த லாபமும் கிடைக்காது. வெறும் காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் வழங்கினால் தங்களுக்கு லாபமில்லையென காப்பீட்டு நிறுவனங்கள் நினைக்கின்றன. அதனால், முதலீட்டுத் திட்டங்களையும் சேர்த்தே வழங்குகின்றன.

    ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களுக்கு பெருந்தொகையை மொத்தமாக அளிப்பது Term Policy எனப்படும். வாடிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு அதற்கான ப்ரீமியத்தை மட்டும் கட்டினால் போதும். ஆனால், எந்த நிறுவனமுமே வெறும் Term Policyஐ தர மாட்டார்கள். பல திட்டங்களை அதனோடு சேர்த்துத்தான் தருவார்கள்.

  5. குமரி மாவட்டத்தில் அணைகள் திறப்பு: ஆறுகளில் வெள்ளம், வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பத்து தினங்களாக அவ்வப்போது மழைபெய்து வந்ததால் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிபாறை , பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கபட்டு வந்தது.

    இந்நிலையில் வெள்ளிகிழமை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை நீடித்ததால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது இதனால் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து அணைகளில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கபட்டது.

    இதனால் கோதையாறு , பரளியாறு , தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் திக்குறிச்சி, குழித்துறை , வைக்கலூர்,காஞ்சாம்புரம் , முஞ்சிறை,மங்காடு போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் அப்பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குழித்துறை மேல்புறம் சாலை , அருமனை களியல் சாலை , மங்காடு புதுகடைசாலை , திக்குறிச்சி ஞாறாம்விளை சாலை , உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் துண்டித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    வாழை, மரிச்சினி, ரப்பர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

  6. அதிமுகவில் நிழலுக்கு என்ன வேலை? சசிகலா குறித்து சி.வி.சண்முகம் பேச்சு

    அதிமுகவில் நிஜத்திற்கே வேலை இல்லாதபோது நிழலிற்கு என்ன‌ வேலை என சசிகலா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி‌.சண்முகம் விழுப்புரத்தில் பேசியுள்ளார்.

    அதிமுக பொன் விழாவினை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்ந நிகழ்வில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்சுணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் சண்முகம். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவி.சண்முகம், "அதிமுகவில் நிஜத்திற்கே வேலை இல்லை என்ற போது நிழலுக்கு என்ன வேலை. ஒரு‌ சசிகலா அல்ல ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக இயக்கத்தை துளியும் அசைத்துப் பார்க்க முடியாது. சசிகலாவால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிலைநிறுத்த முடியாத போது அதிமுகவை நீங்கள் காப்பாற்ற நினைப்பதா," என்று பேசினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "என்ன நாடகம் நடத்தினாலும், என்ன வேஷம் போட்டாலும், எந்த உருவத்தில் வந்தாலும் அதிமுக இயக்கம் மீண்டும் ஒருமுறை ஏமாறத் தயாராக இல்லை. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும், "என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.

  7. 'மெட்டி ஒலி' புகழ் உமா திடீர் மரணம்: சோகத்தில் தமிழ் சின்னத்திரை உலகம்

    'மெட்டி ஒலி' சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச்செய்தி சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    அவருக்கு வயது 40. உமா உயிரிழந்த தகவலை அவரது தோழியும் நடிகையுமான அம்மு ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்ற கதாபாத்திரம் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை உமா.

    'மஞ்சள் மகிமை', 'ஒரு கதையின் கதை' உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில படங்களில் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பின்பு அதிகம் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களாவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார்.

    ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."

    இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, கேரள மழை, வெள்ளம் - முதல்வர் பினராயி விஜயனிடம் பேசிய பிரதமர் மோதி

    கேரளாவில் தீவிரம் அடைந்து வரும் மழை, வெள்ளம், நிலச்சரிவு நிலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் தெரிவித்துள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதி கூறியுள்ளார்.

  9. ஆசியான் உச்சி மாநாட்டுக்கு அழைக்கப்படாத மியான்மர் ராணுவ ஆட்சியாளர்

    தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் என்று அழைக்கப்படும் ஆசியான் அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் அந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் இருந்து மியான்மரை ஆளும் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லெய்ங் விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரசியல் சாராத பிரதிநிதி ஒருவரை அழைக்க ஆசியான் கூட்டமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

    10 உறுப்பினர்களைக் கொண்ட இக்கூட்டமைப்பு இப்படி ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவது இதுவே முதல் முறை. மியான்மரை ஆளும் ராணுவக் குழு, ஆசியான் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளது.

    ஆசியான் கூட்டமைப்போ, மியான்மரில் அரசியல் சூழலை சரி செய்ய ராணுவம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பதிலளித்துள்ளது. கடந்த பிப்ரவரியில், மியான்மர் ராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

  10. கேரள மழை, வெள்ளம்: நிலச்சரிவில் 6 பேர் காணவில்லை எனத் தகவல்

    கேரளாவின் பல மாவட்டக்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.

    சூழலை சமாளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் மீட்பு குழுக்கள் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கோட்டயத்தில் நிலச்சரிவில் 6 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுவதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. சபரிமலை கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சூழலில், கேரளாவில் மழை வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை தயார் நிலையில் இருப்பதாகவும் அம்மாநில அமைச்சர் கே ராஜன் கூறியுள்ளார்.

  11. சூடானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கோரும் போராட்டக்காரர்கள்

    சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என்று, போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வெளியே, நேற்று (அக்டோபர் 16, சனிக்கிழமை) இந்த போராட்டம் நடந்தது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து, சூழல் இன்னும் மோசமாகிவிட்டது.

    கடந்த 2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை (Forces of Freedom and Change - FFC) என்று அழைக்கப்படும் கூட்டமைப்புதான் சூடானை ஆட்சி செய்து வருகிறது.

    இந்த கூட்டமைப்பு தான் பஷீருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. “எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டும், தற்போதைய அரசு நீதி மற்றும் சமத்துவத்தை எங்களுக்கு வழங்கவில்லை” என ஒரு போராட்டக்காரர் ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார்.

  12. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கௌதமன் முராரி.