ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையில் ஈடுபடவில்லை - சீனா மறுப்பு

சீன செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், தமது நாட்டில் ஆயுத சோதனை ஒன்று நடத்தப்பட்டதாகவும் அது ஹைபர்சோனிக் ஏவுகனை தொடர்பானது இல்லை என்றும் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: கைப்பற்றப்பட்டது என்ன?

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்களின் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையை நடத்தினர்.

    இந்தச் சோதனையில் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதவிர, விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்கள் என்ற வகையில் புதுக்கோட்டையில் உள்ள 32 இடங்களிலும் திருச்சி, மதுரை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என ஐம்பது இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது.

    இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ராசி எண்டர்பிரைசஸ், அன்யா எண்டர்பிரைசஸ், ராசி புளூ மெட்டல்ஸ் என்ற பெயர்களில் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஆறு கோடி ரூபாயாக இருந்த விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு, 58.64 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டவுள்யூ கார், மிக்ஸர் வாகனங்கள், ஜே.சி.பி இயந்திரங்கள், விவசாய நிலங்கள், 14 கோடி மதிப்பில் சென்னையில் வீடு என சொத்துகள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோதனையில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கமும் 4.87 கிலோ தங்கமும் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வழக்குக்குத் தொடர்புடைய பணம் மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்

    ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

    வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபன்களின் முழு ஆதரவு இருப்பதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

    பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

    கடந்த காலங்களில் தடுப்பு மருந்துகள் செலுத்துவதை கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இழக்க செய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் செய்யும் சதியே தடுப்பு மருந்துகள் என்று தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்

    பட மூலாதாரம், AFP

  3. அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பவல் மரணம்

    அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் கோவிட்-19 தொற்று தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84.

    2001ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க அதிபராக வென்றபின் இவர் அமெரிக்க வெளியுறவுச் செயலரானார்.

    ஆப்ரிக்க -அமெரிக்க பூர்விகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் வெளியுறவுச் செயலர் இவராவார். அரசியலில் நுழையும் முன்னர் காலின் பவல் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர்.

    இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு இவர் வெளிப்படையாக ஆதரவளித்தது இவர் விமசனத்துக்கு உள்ளாகவும் காரணமானது.

    அந்தப் படையெடுப்பு தவறானது என்றும் அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

    சதாம் ஹுசேனின் ஆட்சியின் கீழ் இருந்த இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அங்கு படையெடுத்த அமெரிக்கா, அப்படி எதையும் அங்கு கண்டுபிடிக்கவில்லை.

    குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், 2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு ஆதரவளித்தார்.

    Colin Powell: Former US secretary of state dies of Covid complications

    பட மூலாதாரம், Getty Images

  4. ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை - மறுக்கும் சீனா

    சீனா

    பட மூலாதாரம், Getty Images

    சீனா ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

    இது தொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸில் வெளியான செய்தியை மறுத்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், "எங்கள் நாடு வழக்கமான விண்கல சோதனையில் ஈடுபட்டது என்றும் அதற்கும் ஏவுகனை சோதனைக்கும் தொடர்பு இல்லை," என்று கூறினார்.

    முன்னதாக, சீனாவின் ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனை தொடர்பான செய்தி வெளிவந்தவுடன் அமெரிக்காவில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது.

    அந்த நாட்டின் ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் மைல் கல்லெகர், "சீனாவின் இதுபோன்ற செயல்களுக்கு அமெரிக்காவும் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சீனாவுடனான பனிப்போரில் அமெரிக்கா தோற்று விடும்," என்று கூறினார்.

    இதேவிவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கருத்து கூறுகையில், "சீனாவின் ஆயுத திறன்கள் தொடர்பான நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், இந்த குறிப்பிட்ட தகவல் பற்றி கருத்து வெளியிட முடியாது," என்று தெரிவித்தார்.

  5. அரசியல் கைதிகளை விடுவிக்க மியான்மர் ராணுவ அரசு முடிவு

    பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 5,636 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.

    ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லைய்ங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

    ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் குறைந்தது 1,178 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 7,355 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அரசியல் கைதிகளின் உதவிக்கான அமைப்பு (Assistance Association for Political Prisoners) கூறுகிறது.

    நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்தது.

    ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூச்சி மற்றும் அவரின் கட்சியினர் செய்த "சட்டவிரோத நடவடிக்கைகளே" ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என ஆட்சியைக் கைப்பற்றியபின் அவர் கூறியிருந்தார்.

    2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர்.

    அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

    மியான்மர் - சில குறிப்புகள்

    மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

    2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

    2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

    ஜெனரல் மின் ஆங் லைய்ங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜெனரல் மின் ஆங் லைய்ங்
  6. சாமியாருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

    தேரா சச்சா சௌதா அமைப்பை நிறுவிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

    டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரஞ்சித் சிங் சாமியாரின் பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்த தகவல்களை, பெயர் இல்லாமல், ரகசியக் கடிதங்கள் மூலம் வெளியிட்டதால் அவரை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொன்றதாக சிபிஐ இந்த வழக்கில் குற்றம்சாட்டியது.

    பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்று தேரா சச்சா சௌதாவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரஞ்சித் சிங் என்ற முன்னாள் ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் ராம் ரஹீம் சிங் மற்றும் வேறு 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

    ஒரு பாலியல் வல்லுறவு வழக்கிலும், ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீம் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் ரஹீமுக்கு 31 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

    பாலியல் வல்லுறவு வழக்கு மற்றும் முதல் கொலை வழக்கு

    1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.

    இந்த வழக்கு பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது.

    பாலியல் வல்லுறவு வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று 2017 ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

    நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரின் கொலை வழக்கிலும் இவர் மீது 2019இல் குற்றம் நிரூபணம் ஆனது. பத்திரிகையாளர் சத்ரபதி, மாலை நாளிதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்தார்.

    சாமியார் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதாக செய்தி வெளியிட்டதையடுத்து 2002ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 2019இல் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

  7. வளர்ச்சிப் பணிகளைத் தடுக்க முயலும் எதிர்கட்சிகள்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

    நட்டா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜே.பி. நட்டா

    மத்திய அரசு கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க எதிர்கட்சிகள் முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நட்டா, அரசியல் நலன்களுக்காக மட்டுமல்லாமல் தேசிய நலனை கருத்தில் கொண்டும் சமூக அடிப்படையில் பாஜகவினர் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

    வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, ஏழைகளுக்கு சாதகமான இலவச உணவு தானிய திட்டம் போன்ற பல திட்டங்களை மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு கொண்டு வந்துள்ளது என்றும் அவை கொரோனா பெருந்தொற்று காலத்தில் வறியநிலை மக்களுக்கு பேருதவியாக இருந்தது என்றும் நட்டா கூறினார்.

    எதிர்கட்சியான காங்கிரஸ் பலவீனமடைந்து வருகிறது, ஏனெனில் அது இப்போது மக்களின் அடிப்படை பிரச்னைகளில் செலுத்தாமல் அரசு கொண்டு வரும் திட்டங்களை குறைகூறி அவற்றுக்கு தடங்கலை ஏற்படுத்துவதிலேயே குறியாக உள்ளது என்று நட்டா குற்றம்சாட்டினார்.

  8. கேரள மழை வெள்ளம் - பல அணைகளில் நீர் நிரம்பியதால் அபாய எச்சரிக்கை

    கேரள மழை

    பட மூலாதாரம், ANI

    கேரளாவில் பொழிந்த தீவிர மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள பல அணிகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

    அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 26ஐ எட்டியிருக்கிறது. ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் தற்போதைய நிலவரப்படி நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது.

    இதனால், அந்த அணையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணையின் கொள்ளளவை விட நீர்மட்டம் அதிகமாகி வருவதால் எந்நேரமும் அணையின் மதகுகள் திறக்கப்படும் என்று கேரள மாநில அரசு கூறியுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

    ஷலோயாறு அணையின் மதகுகள் இன்று காலை 10 மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. சாலக்குடி நதிக்கரையோர குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    கேரள அணை
  9. லக்கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து ரயில் மறியல் - உத்தர பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

    விவசாயிகள்

    பட மூலாதாரம், Sat Singh/BBC

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால், பல இடங்களில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    லக்கீம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டும், சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையும் இந்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியலில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு ஐக்கிய கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்தின்போது அவசரகால சேவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் ரயில் மறியலில் மட்டுமே தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட வேண்டும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது.

  10. பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரான்ஸ் தூதர்

    நிகோலஸ் டி லாகோஸ்டேவை

    பட மூலாதாரம், FRENCH FOREIGN MINISTRY

    படக்குறிப்பு, நிகோலஸ் டி லாகோஸ்டேவை

    பெலாரூஸ் நாட்டில் இருந்த பிரான்ஸ் தூதர் நிகோலஸ் டி லாகோஸ்டேவை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மின்ஸ்க் நகரில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    நிகோலஸ் டி லாகோஸ்டே பெலாரஸ் நாட்டை விட்டு ஞாயிற்றுக்கிழமையே வெளியேறிவிட்டதாக தூதரக செய்தித் தொடர்பாளர் ஏ.எஃப்.பி முகமையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    57 வயதான லாகோஸ்டே கடந்த ஆண்டு தான் அந்நாட்டில் தூதராக பணியமர்த்தப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தல் வெளிப்படையாக நியாயமாக நடத்தப்பட்டது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    மேலும் பெலாரூஸின் அதிபராக இருக்கும் லூகஷென்கோவின் ஆட்சி மீது பல தடைகளும் விதிக்கப்பட்டது. நிகோலஸ் டி லாகோஸ்டே தன் விவரங்களை அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோவிடம் காண்பிக்க மறுத்ததாக உள்ளூர் ஊடகங்களில் கூறப்படுகிறது.

  11. முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என தமிழகத்தில் பல பகுதிகளிலும், அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதற்கு முன் அதிமுக அமைச்சர்களான எம் ஆர் விஜய பாஸ்கர், எஸ் பி வேலுமணி, வீரமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. பிபிசி தமிழ் இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.