தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆக்டோபர் 6ஆம் தேதியும் அக்டோபர் 9ஆம் தேதியும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில் சுமார் 27,000 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்தத் தேர்தலில் போட்டியிட, 98,151 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 2,981 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, நிலுவை வழக்கு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
ஆகவே, மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
இந்த ஒன்பது மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் 1,577 கிராம ஊராட்ச தலைவர் பதவியிடங்களுக்கும் 12252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தமாக 14,662 இடங்களுக்கு இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலுக்கென 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளை அளிக்க வேண்டும். ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் கட்சி சின்னம் ஒதுக்கப்படும். ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களே ஒதுக்கீடு செய்யப்படும்.
இன்று காலை ஏழு மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியது.
வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரொனா அறிகுறி உள்ளவர்களுக்கும் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள உள்ளாவூர் என்ற இடத்தில் வேட்பாளர் ஒருவரது பெயர் தவறாக இடம்பெற்றுள்ளதால் அதற்கு வேட்பாளர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் வாக்குப் பதிவு தடைசெய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியில், அ.தி.மு.கவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிக்கு அருகிலேயே தி.மு.கவினர் வாக்குச் சேகரித்ததாக அ.தி.மு.கவினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பத்திலிருந்து துத்திப்பட்டு கிராமத்தை தனியாகப் பிரித்து தேர்தல் நடத்த வேண்டும் என கோரி பொன்னங்குப்பம் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இதனால், அங்கு வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இரண்டாம் கட்டத் தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி முடிந்த பிறகு, அக்டோர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும்.