லக்கிம்பூர் சம்பவம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை சீதாபூரில் உள்ள அவரது சகோதரி பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினார். அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. அசத்திய இந்திய ஹாக்கி அணி வீரர்கள்

    ஹாக்கி வீரர்கள்

    பட மூலாதாரம், Getty Images/@13harmanpreet

    சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நட்சத்திர விருதுகளை இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தட்டி சென்றுள்ளனர்.

    டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வருடத்திற்கான சிறந்த பெண் விராங்கனையாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு குர்ஜித் கவுரை தேர்ந்தெடுத்துள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இருவருமே அதிகளவிலான கோல்களை அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் கோல் கீப்பர்கள் சவிதா மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோர் வருடத்தின் சிறந்த கோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் பெயர்

    உலகிலுள்ள அரசத் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் குறித்த, தகவல்களும் இந்த ஆவணத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளளது.

    திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்ஷ ஆகிய தம்பதிகள் தொடர்பிலான ரகசிய தகவல்களே, இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

    நிருபமா ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் குடும்ப உறுப்பினராவார்.

    நிருபமா ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன் என்ற தமிழரை திருமணம் செய்துள்ளார்.

    இந்த இருவர் தொடர்பிலான தகவல்கள், தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, லக்கிம்பூர் வன்முறை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு நிதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கார் மோதியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு நிதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்கிம்பூர் கேரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் செளராசியா, இறந்தவர்களில் இருவர் தமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு நிதிக்கான காசோலை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மற்ற இரண்டு விவசாயிகள் பைராச் மாவட்டத்தில் உள்ளதால் அங்குள்ள குடும்பங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, சீதாபூரில் பிரியங்காவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

    உத்தர பிரதேசத்தின் சீதாபூரில் போலீஸ் காவலில் இருந்து சில மணி நேரத்துக்கு முன்பு விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அவரது சகோதரரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது தலைமையில் உத்தர பிரதேச மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் குழுவினர் சந்தித்துள்ளனர்.

    சீதாபூர் மற்றும் லக்கிம்பூரில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  6. சீனா தைவான் இடையே 40 ஆண்டுகள் இல்லாத பதற்றம்

    சீனா மற்றும் தைவான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இருநாடுகளுக்கும் இடையே தற்செயலமான தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தொடர்ந்து தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ ஜெட்களை ஏவிவருவதை அடுத்து தைவான் அமைச்சரின் இந்த கருத்து இவ்வாறு வெளியாகியுள்ளது.

    தைவான் தன்னை ஒரு இறையாண்மை சுயாட்சி நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது.

    வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பை இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலம், தைவான் ஜலசந்தி மற்றும் சீன பெருநிலப்பரப்பின் ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வற்ற எல்லையை கடப்பதை தைவான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது.

    தைவானை சீனா 2025ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி இருக்ககும் என்றும் தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுகோ செங் தெரிவித்துள்ளார். அவர் தைபேயில் நாடாளுமன்ற கமிட்டியின் சார்பாக பேசினார் அமைச்சர் செங் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பலை உருவாக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான வரைவு ஒன்றையும் பரிசீலுக்குமாறு தெரிவித்துள்ளார்.

    சீனாவிடம் தைவானை ஆக்கிரமிக்கும் திறன் ஏற்கனவே உள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ள அவர் வரும் வாரங்களில் அது மேலும் எளிதானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஆனால் அது எவ்வாறு என்று அவர் விளக்கவில்லை.

    1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது என்றும் அதன் அதிபர் சார் இங்வென் அது நோக்கிய எந்த நடவடிக்கை எடுப்பதையும் தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவின் சமீபத்திய இந்த செயல் குறித்து தைவானுடன் நெருக்கமாக இருக்கும் பல மேற்கத்திய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளது.

  7. மருந்து தயாரிப்பில் சாதனை கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

    விஞ்ஞானிகள்

    பட மூலாதாரம், NOBEL PRIZE

    வேதியியல் மூலக்கூறுகளை உருவாக்குவதில் புதிய முறையைக் கண்டுபிடித்த இரு விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் இந்தப் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    வேதிவினைகளை ஊக்கப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வினையூக்கிகளில் புதிய முறையை இவர்கள் கண்டுபிடித்தனர்.

    இவர்களது ஆராய்ச்சியில் கண்டுபிடித்த முறை, மருந்துகள் தயாரிப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வேதியியலை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றியது.

    2000-ஆவது ஆண்டில் இவர்கள் கண்டுபிடித்த வினையூக்கி முறை ஆர்கனோகேட்டலைசிஸ் (organocatalysis) என்று அழைக்கப்படுகிறது. வேதி வினைகளை வேகப்படுத்தும் புதிய நுட்பம் இது.

    இவர்களது கரிம வினையூக்கியானது ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் அல்லது பாஸ்பரஸ் ஆகிய தனிமங்களைக் கொண்டது. அவற்றை உருவாக்குவதும் எளிது, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.

    "இப்படியொரு முறையில் வினையூக்கிகளை உருவாக்கலாம் என்பது குறித்து அதற்கு முன் ஏன் யாரும் சிந்திக்கவில்லை என்று வியப்பாக இருக்கிறது" என நோபல் பரிசுக் கமிட்டி தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, ராகுலின் எதிர்ப்புக்குப் பிறகு சொந்த வாகனத்தில் சீதாபூர் செல்ல போலீஸ் அனுமதி

    லக்னெள விமான நிலையத்தில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சொந்த வாகனத்தை பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி வழங்கியதையடுத்து, ராகுல் காந்தி தமது போராட்டத்தை கைவிட்டு விட்டு சீதாபூருக்கு புறப்பட்டுள்ளார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரஸ் குழுவினரின் வாகன தொகுப்பு தற்போது பிரியங்கா காந்தி காத்திருக்கும் சீதாபூர் நோக்கி புறப்பட்டுள்ளது. அங்கு பிரியங்கா காங்கிரஸ் குழுவினர் சந்தித்ததும், அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் லக்கிம்பூர் கேரியில் கார் மோதலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்கவுள்ளனர்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, சொந்த வாகனத்தில் செல்ல ராகுலுக்கு கட்டுப்பாடு - விமான நிலையத்தில் தர்னா

    லக்னெள விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், அவர்களின் சொந்த வாகனத்தில் அல்லாது அரசு வாகனத்தில் லக்கிம்பூருக்கு செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்ததை கண்டித்து விமான நிலைய வளாகத்திலேயே ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

    போலீஸ் வாகனத்தில் சென்றால், தாங்கள் விரும்பிய மக்களை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே விமான நிலையத்தை விட்டு வெளியே செல்வேன் என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரியங்கா காந்தி காவலில் இருந்து விடுவிப்பு - ராகுல் வருகைக்கு காத்திருப்பு

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், INC

    படக்குறிப்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை லக்னெள விமான நிலைய விருந்தினர் ஓய்வறையில் சந்தித்த பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதல் சம்பவத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களை பார்க்க முற்பட்டதால் தடுக்கப்பட்டு விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி சற்று முன்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகெல் உள்ளிட்டோர் சற்று முன்பு லக்னெள விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து சீதாபூரில் பிரியங்கா காந்தி இருக்கும் இடத்தை அடைகின்றனர். அங்கிருந்து லக்கிம்பூருக்கு காங்கிரஸ் குழுவினர் செல்லவுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மட்டும் லக்கிம்பூர் கேரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் எட்டு பேர் கொல்லப்பட்ட வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் ்அமித் ஷாவை தற்போது சந்தித்து வருகிறார்.

    லக்னவெவில் இருந்து திரும்பிய அவர், அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசி வருகிறார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, ராகுல், பிரியங்கா காந்தி லக்கிம்பூர் செல்ல அனுமதி: உத்தர பிரதேச உள்துறை

    இந்திய காங்கிரஸ் ராகுல் பிரியங்கா

    பட மூலாதாரம், CONGRESS

    படக்குறிப்பு, லக்னெள செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தி

    உத்தர மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கார் மோதல் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை பார்வையிட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை தெரிவித்துள்ளது.

    இதையடுத்து சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த ராகுல் காந்தி, லக்னெள செல்லும் விமானத்தில் புறப்பட்டுள்ளார். இதேபோல, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெலும் லக்னெளவுக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

    அவர் லக்னெள சென்றதும் அங்கிருந்து சீதாபூருக்கு செல்வார் என்றும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்தித்த பிறகு அவருடன் சேர்ந்து லக்கிம்பூரி கேரிக்கு செல்வார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தனர்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸார் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

    லக்னெள செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமான நிலையத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உத்தர பிரதேச மாநில காவல்துறை வேண்டுகோளின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக காவல்துறையினர் ராகுல் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

  14. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு, முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    பட மூலாதாரம், TNEC

    தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆக்டோபர் 6ஆம் தேதியும் அக்டோபர் 9ஆம் தேதியும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தத் தேர்தலில் சுமார் 27,000 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமென மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட, 98,151 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 2,981 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, நிலுவை வழக்கு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

    ஆகவே, மொத்தமாக 79,433 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். இந்த ஒன்பது மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும் 1,577 கிராம ஊராட்ச தலைவர் பதவியிடங்களுக்கும் 12252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தமாக 14,662 இடங்களுக்கு இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்தத் தேர்தலுக்கென 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

    இந்தத் தேர்தலில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளை அளிக்க வேண்டும். ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் கட்சி சின்னம் ஒதுக்கப்படும். ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களே ஒதுக்கீடு செய்யப்படும். இன்று காலை ஏழு மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியது.

    வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரொனா அறிகுறி உள்ளவர்களுக்கும் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரத்தில் உள்ள உள்ளாவூர் என்ற இடத்தில் வேட்பாளர் ஒருவரது பெயர் தவறாக இடம்பெற்றுள்ளதால் அதற்கு வேட்பாளர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் வாக்குப் பதிவு தடைசெய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியில், அ.தி.மு.கவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடிக்கு அருகிலேயே தி.மு.கவினர் வாக்குச் சேகரித்ததாக அ.தி.மு.கவினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பத்திலிருந்து துத்திப்பட்டு கிராமத்தை தனியாகப் பிரித்து தேர்தல் நடத்த வேண்டும் என கோரி பொன்னங்குப்பம் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

    இதனால், அங்கு வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இரண்டாம் கட்டத் தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதி முடிந்த பிறகு, அக்டோர் 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் பாஜக அரசு: ராகுல் குற்றச்சாட்டு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    உத்தர பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பங்களை பார்க்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் மீது முறைசார்ந்த வகையில் மத்தியில் ஆளும் மோதி அரசும் உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசும் தாக்குதல் நடத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

    இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லக்கிம்பூர் செல்ல தமக்கு உத்தர பிரதேச காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம். ஆனால், நான் லக்னெவுக்கு எனது நண்பர்கள் இருவருடன் செல்கிறேன் என்று தெரிவித்தார்.

    "இதே லக்னெள நகரில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டை கொண்டாடும் மாநாட்டில் பங்கேற்கிறார். அவருக்கு லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை."

    "சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களால் ஒரு இடத்துக்கு செல்ல முடியவில்லை. நேற்று லக்கிம்பூரிக்கு செல்ல முயன்றோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. சத்தீஸ்கர் முதல்வர் லக்னெவ சென்றபோதும் அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் சர்வாதிகாரம் என்கிறோம் என்று குற்றம்சாட்டினார்," ராகுல் காந்தி.

    "மத்தியில் உள்துறை இணை அமைச்சராக இருக்கும் ஒருவரது மகன் மற்றும் ்அவரது ஆதரவாளர்கள் கார் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கொல்ல முற்படுகிறார்கள். சில விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள கள நிலவரத்தை பார்க்க நான் விரும்புகிறேன் ஆனால், அனுமதி கிடைக்கவில்லை," என்று ராகுல் கூறினார்.

    "உத்தர பிரதேசத்திலும் மத்தியிலும் பாஜக கூட்டணி அரசுகளிடம், இது ஜனநாயம், இப்படி செய்யாதீர்கள் என்று வலியுறுத்த விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனநாயகம் பற்றி நம்பிக்கையூட்டுவதற்காக அவர்களை சந்திக்க விரும்புகிறோம்ஸ" என்றார் ராகுல் காந்தி.

  16. ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்ட 26 கொரிய மொழிச் சொற்கள்

    கொரிய மொழி

    பட மூலாதாரம், Getty Images

    ஸ்க்விட் கேம், பிடிஎஸ் என பல்வேறு இணையம் சார்ந்த விஷயங்களில் கொரியர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். சமீபத்தில் பாராசைட் என்கிற கொரிய மொழித் திரைப்படம் கூட ஆஸ்கர் விருதைக் வென்றது. இப்போது கொரிய மொழியை பூர்வீகமாகக் கொண்ட 26 சொற்கள் புதிய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சில சொற்கள்... Banchan - அரிசிச் சோறோடு கொடுக்கப்படும் கொரிய காய்கறி உணவு Bulgogi - மாடு அல்லது பன்றி இறைச்சியை மெலிதாக வெட்டி சமைக்கும் ஒரு வகையான உணவு Kimbap - இதுவும் ஒரு வகையான ஷவர்மா அல்லது சூஷி ரோல் போன்ற ஒரு கொரிய உணவு.

  17. சட்ட விரோதமாக 13 ஹசரா இன மக்களைக் கொன்ற தாலிபன்கள் - அம்னெஸ்டி குற்றச்சாட்டு

    தாலிபன்

    பட மூலாதாரம், EPA

    தாலிபன்கள் 13 ஹசரா இனத்தைச் சேர்ந்த மக்களை ஆப்கனின் டைகுண்டி மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொன்றதாகவும், அதற்ககான ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் அம்னெஸ்டி இன்டர்னேஷனல் குழு கூறியுள்ளது. அதில் 9 பேர் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள் என்றும், அவர்கள் தாலிபன்களிடம் சரணைடைந்ததாகவும் அம்னெஸ்டி கூறுகிறது. மேலும் இந்த கொலை ஒரு போர் குற்றம் என்றும் குறிப்பிடுகிறது அம்னெஸ்டி. அந்த 13 பேரில் ஒருவர் 17 வயது பெண் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை வெளியான அம்னெஸ்டி அறிக்கையில், ஆப்கனை விட்டு தப்பிச் செல்ல முயன்றதற்காக பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது தாலிபன் தரப்பு. ஹசரா இஸ்லாமியர்கள் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய இனக் குழு. இவர்கள் ஷியா இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். பல காலமாக இவர்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இவ்வினக் குழு சன்னி இஸ்லாத்தைப் பின்பற்றும் ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின், ஹசரா இனக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக இரண்டாவது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  18. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர்கள் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி, எம். மணிகண்டன்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்