பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்த அமரிந்தர் சிங், இன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், "எந்தவொரு அரசியல் தலைவரையும் சந்திக்க நான் இங்கு வரவில்லை. அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்," என்று கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் அமரிந்தர் சிங் சேரலாம் என்றும் அது தொடர்பாக ஆலோசனை நடத்தவே அவர் டெல்லி வந்துள்ளதாகவும் தகவல் பரவியது.
ஆனால், அந்த தகவலை அமரிந்தர் சிங் உறுதிப்படுத்தவில்லை.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் அதன் மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக அம்மாநிலத்தின் அமைச்சர்கள் சிலர் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில், அமரிந்தர் சிங் தமது முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
அவரது அமைச்சரவையில் பலர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இத்தகைய முன்னேற்றங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலையில், திடீரென்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவயில் இருந்து நவ்ஜோத் சித்து விலகி தமது ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.
உண்மைக்காகவும் பஞ்சாப் மாநில மக்களுக்காகவும் குரல் கொடுக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.
சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையில் மாநில தலைவரான தமது ஆதரவில்லாத சிலரை சேர்க்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்ததால்தான் அதிருப்தியில் நவ்ஜோத் சித்து பதவி விலகியதாக கூறப்பட்டது.
முன்னதாக, பல ஆண்டுகளாக காங்கிரஸுக்காக உழைத்த தன்னை நம்பாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த நவ்ஜோத் சித்து தலைமையில் காங்கிரஸை வழிநடத்த கட்சி மேலிடம் முடிவெடுத்திருப்பது அழிவுகரமான முடிவு என்று முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நவ்ஜோத் சித்து நெருக்கமானவர் என்றும் அவரது தலைமையில் கட்சியும் அவர் கைகாட்டிய நபர் தலைமையில் ஆட்சி நடைபெறுவதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இத்தகைய சூழலில் அமரிந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.