இந்திய எல்லையில், 19 வயதான லஷ்கர்-இ-தாய்பா பயங்கரவாதி பிடிபட்டுள்ளாதாகவும் மற்றொருவர் நேற்று மாலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூரியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக கடக்க முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், "எல்லையில் ராணுவத்திடம் சரணடைந்த நபர் தன்னை பாகிஸ்தானின் பஞ்சாபைச் சேர்ந்த அலி பாபர் பத்ரா என அடையாளம் கூறியதாகவும் அவர் லஷ்கர் இ தாய்பா உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
கடந்த ஏழு நாட்களில் ஏழு பயங்கரவாதிகள் முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
"இவ்வளவு பெரிய குழுவினரின் நடமாட்டம் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க முடியாது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி முழுவதும் இதுபோன்ற நடமாட்டங்களை காண முடிகிறது" என்று மேஜர் வட்ஸ் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு எல்லை கட்டுப்பாட்டு கோடு இருந்த பகுதியில் இந்தியா தொடங்கிய மிகப்பெரிய எதிர்ப்பு கிளர்ச்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றைய நடவடிக்கை இருந்ததாக ராணுவம் கூறுகிறது.
யூரி மற்றும் ராம்பூர் செக்டார்களில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல், ரோந்துப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஊடுருவல் முயற்சிகளை இதுவரை இந்திய ராணுவம் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் நடந்த நடவடிக்கையில் இந்தியா தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.