டெல்லியில் அமித் ஷாவுடன் அமரிந்தர் சிங் திடீர் சந்திப்பு

நான் எந்த அரசியல்வாதிகளையும் சந்திக்க இங்கு வரவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. செப்டம்பர் 29-ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புப் பக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா

    கொரோனா

    பட மூலாதாரம், EPA

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1624 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 24 பேர் உயிரிழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 17,192. ஒரு நாளில் 1.51 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 1,639 பேர் குணமடைந்துள்ளனர்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமித் ஷாவுடன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் சந்திப்பு

    பஞ்சாப் அரசியல்

    பட மூலாதாரம், AMARINDER SINGH

    படக்குறிப்பு, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அமரிந்தர் சிங்

    பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்த அமரிந்தர் சிங், இன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், "எந்தவொரு அரசியல் தலைவரையும் சந்திக்க நான் இங்கு வரவில்லை. அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்," என்று கூறினார்.

    முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் அமரிந்தர் சிங் சேரலாம் என்றும் அது தொடர்பாக ஆலோசனை நடத்தவே அவர் டெல்லி வந்துள்ளதாகவும் தகவல் பரவியது.

    ஆனால், அந்த தகவலை அமரிந்தர் சிங் உறுதிப்படுத்தவில்லை.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் அதன் மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக அம்மாநிலத்தின் அமைச்சர்கள் சிலர் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்த நிலையில், அமரிந்தர் சிங் தமது முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார். இதையடுத்து பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

    அவரது அமைச்சரவையில் பலர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். இத்தகைய முன்னேற்றங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலையில், திடீரென்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவயில் இருந்து நவ்ஜோத் சித்து விலகி தமது ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

    உண்மைக்காகவும் பஞ்சாப் மாநில மக்களுக்காகவும் குரல் கொடுக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.

    சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையில் மாநில தலைவரான தமது ஆதரவில்லாத சிலரை சேர்க்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்ததால்தான் அதிருப்தியில் நவ்ஜோத் சித்து பதவி விலகியதாக கூறப்பட்டது.

    முன்னதாக, பல ஆண்டுகளாக காங்கிரஸுக்காக உழைத்த தன்னை நம்பாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த நவ்ஜோத் சித்து தலைமையில் காங்கிரஸை வழிநடத்த கட்சி மேலிடம் முடிவெடுத்திருப்பது அழிவுகரமான முடிவு என்று முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நவ்ஜோத் சித்து நெருக்கமானவர் என்றும் அவரது தலைமையில் கட்சியும் அவர் கைகாட்டிய நபர் தலைமையில் ஆட்சி நடைபெறுவதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இத்தகைய சூழலில் அமரிந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

  4. காங்கிரஸுக்கு தலைவரே இல்லை: கபில் சிபல்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை எனவும், யார் முடிவுகளை எடுக்கிறார் எனத் தெரியவில்லை எனவும் விமர்சித்திருக்கிறார் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கபில் சிபல்.

    எல்லை மாநிலமான பஞ்சாப் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்னும் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  5. ஆக்கஸ் உடன்பாடு குறித்து அமெரிக்காவுக்கு ரஷ்யா கேள்வி

    ரஷ்ய அமைச்சர்

    பட மூலாதாரம், Mikhail Svetlov/Getty Images

    ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு குறித்து அமெரிக்காவுக்கு ரஷ்யா சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

    எனினும் இந்தக் கேள்விகள் குறித்து இப்போது எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதே கேள்விகளை ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடமும் கேட்கப் போவதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிக்கேல் ஸ்வெட்லோவ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து ஆக்கஸ் என்று உடன்பாட்டை அண்மையில் செய்து கொண்டன. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த உடன்பாடு சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  6. ரவுடிகள் வேட்டை: ஸ்டாலினை பாராட்டிய செல்லூர் ராஜு, பிரபுராவ் ஆனந்தன்

    செல்லூர் ராஜு
    படக்குறிப்பு, மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் செல்லூர் ராஜு

    ரவுடிகளை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே, முதலமைச்சர் ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார்.

    பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளன. அவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும் மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    "ஏற்கெனவே கடந்த ஆட்சிக் காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்"

    "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது," என்றார் செல்லூர் ராஜு.

  7. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்களிப்பை விசாரிக்க வலியுறுத்தும் மசோதா அறிமுகம்: அமெரிக்க குடியரசு கட்சியின் 22 எம்.பி.க்கள் ஆதரவு

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், PA Media

    ஆப்கானிஸ்தானில் அமெரக்காவின் தீவிரதவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் அதன் பொறுப்புணர்வு தொடர்பான மசோதாவை குடியரசு கட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    ஆப்கானிஸ்தான் தீவிரதவாத எதிர்ப்பு, கண்காணிப்பு, பொறுப்புடைமை சட்டம் என்று அந்த மசோதாவுக்கு குடியரசு கட்சியின் 22 எம்.பி.க்கள் ஆதரவாக உள்ளனர். இந்த மசோதாவை ஜிம் ரெய்ஷ் என்ற செனட் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழு உறுப்பினர் அறிமுகப்படுத்தினார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்திய பைடன் நிர்வாகம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதையும் அறிய விரும்புவதாக அந்த மசோதாவில் கோரப்பட்டுள்ளது. தாலிபன் ஆளுகையில் பாகிஸ்தானின் பங்களிப்பு முன்பு எப்படி இருந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, காவிரி விவகாரம் இரு மாநிலங்களிலும் அரசியலாக்கப்படுகிறது - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, பிரபுராவ் ஆனந்தன்

    ஈஸ்வரப்பா
    படக்குறிப்பு, கே.எஸ். ஈஸ்வரப்பா, கர்நாடக அமைச்சர்

    காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் என கர்நாடகா கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, "கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்னையும் இல்லை, இரு மாநில மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர்," என்றார்.

    "காவிரி விவகாரம் அரசியல்வாதிகளால் அரசியலாக்கப்படுகிறது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும், காவிரி விவகாரம் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. சிலர் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்குகின்றனர்," என்று அவர் குற்றம்சாட்டினார்.

    "காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்னையே இல்லை. தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும், காவிரி தூய்மையாக உள்ளது, காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்" என ஈஸ்வரப்பா கூறினார், மேக்கேதாட்டு அணை குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் புறப்பட்டு சென்றார்.

    கர்நாடக அமைச்சர்
    படக்குறிப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வரும் கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா.
  9. "தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கோயில் சொத்துகள் மீட்பு", முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    தமிழ்நாடு அரசியல்

    பட மூலாதாரம், SekarBabu

    படக்குறிப்பு, ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு, செய்யூர் சட்டமன்ற தொகுதி, இலத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுடன்ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சர் சேகர் பாபு (வலது).

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த 49 கிரவுண்ட் நிலத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை சுவாதீனம் எடுத்தது.

    99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த இந்த இடத்திற்கான வாடகை செலுத்தப்படாலேயே இருந்தது.குத்தகைக்கு எடுத்திருந்தவர் இறந்துவிட்ட நிலையில், அவரது வாரிசுகள் அந்த இடத்தை தபால் நிலையம் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். ஆனால், அறநிலையத் துறைக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தவில்லை.

    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்த இடம் இன்று சுவாதீனம் பெறப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் இருக்குமென அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

    "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக 160 கிரவுண்டுகளுக்கு மேல் நிலம் இருக்கிறது. ஏற்கனவே தனியார் ட்ரஸ்ட் நடத்திக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்தை ஸ்வாதீனம் செய்திருக்கிறோம். அவர்களும் கோடிக் கணக்கில் பாக்கி வைத்திருந்த நிலையில், அவர்கள் பயன்படுத்தியமைதானம் ஸ்வாதீனம் செய்யப்பட்டது. இரண்டும் சேர்த்து 50 கிரவுண்ட் இருக்கும். இன்று 49 கிரவுண்ட் ஸ்வாதீனம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 60 கிரவுண்டை வெகு விரைவில் இந்து சமய அறநிலையத் துறைக் கைப்பற்றும்.இன்று சுவாதீனம் செய்யப்பட்டது மட்டும் 300 கோடி ரூபாய்இருக்கும்" என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இடத்தில் ஒரு மிகப் பழமையான கட்டடம் ஒன்று இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் தொன்மை மாறாமல் புதுப்பித்து வேறு பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்யும் பணியில் தனியாார் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

    "கடந்த சில நாட்களில் மதுரவாயில், மைலாப்பூர், திருப்போரூர் போன்ற இடங்களில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டிருக்கிறோம். இன்னும் பல நூறு கோடி சொத்துகளை மீட்போம்." என சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம்

    திமுக

    பட மூலாதாரம், iNDIRAKUMARI

    படக்குறிப்பு, இந்திரகுமாரி, தமிழக முன்னாள் அமைச்சர்

    1991-1996ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் ஆகியோர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் அவருக்கும் அவரது கணவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறையும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்திரகுமாரியின் கணவர் பாபு அறக்கட்டளை ஒன்றின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக் கூறி அரசிடம் இருந்து ரூ. 15.45 லட்சம் அளவுக்கு அரசிடம் இருந்து பணம் பெற்றதாக 1997ஆம் ஆண்டில் சமூக நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரானேஷ் என்ற அதிகாரி புகார் அளிதத்திருந்தார். அதில் பள்ளியே நடத்தாமல் அரசிடம் இருந்து பணம் பெற்றதாக பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் வெங்கடகிருஷ்ணன், கிருபாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், கிருபாகரன் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்டார். மேலும், வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இந்திரகுமாரி உள்ளிட்ட மூவருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதில், இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, பஞ்சாப் மக்களுக்காக எதையும் தியாகம் செய்வேன்: நவ்ஜோத் சித்து

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இருந்து ராஜிநாமா செய்துள்ள நவ்ஜோத் சிங் சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளியில், 'சத்தியத்துக்கான மோதலில் இறுதி வரை தொடர்ந்து போராடுவேன்' என்று கூறியுள்ளார்.

    அந்த காணொளியில் பஞ்சாபி மொழியில் பேசியுள்ள அவர், “அன்புள்ள பஞ்சாபிகளே, எனது 17 வருட அரசியல் பயணம் ஒரு நோக்கத்துடனேயே முடிவு செய்யப்பட்டுள்ளது. அது பஞ்சாப் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், ஒரு பிரச்னையில் தீர்க்கமான முடிவை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது. அதுவே எனது மதம், அதுவே எனது கடமை. இதுநாள் வரை எந்த விஷயத்திலும் எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் மோதல் இருந்ததில்லை," என்று கூறியுள்ளார்.

  12. ஆதி குடிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மழைக் காடுகள்

    உலகிலேயே மிகவும் பழமையான வெப்பமண்டல மழைக்காடுகளான டெய்ன்ட்ரீ மழைக்காடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதி குடிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அரசுக்கும் ஆதிக்குடி சமூகத்துக்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் கீழ் இந்த காடுகள் ஒப்படைக்கப்படுகின்றன.

    ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மழைக் காடுகள் சுமார் 18 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஆதிக்குடிகள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர்.

    தற்போதைய ஒப்பந்தத்தின்படி குயின்ஸ்லாந்து மாகாண அரசு மற்றும் ஈஸ்டர்ன் குக்கு யலாஞ்சி ஆதிக்குடி மக்கள் ஆகியோர் இந்த மழைக்காடுகளை ஒன்றாக நிர்வகிப்பார்கள்.

    கிரேட் பேரியர் ரீஃப் பவளத்திட்டை ஒட்டி இந்த மழைக் காடுகள் அமைந்துள்ளன.

    ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் இந்த மழைக் காடுகளும் ஒன்று.

    Daintree: World Heritage rainforest handed back to Aboriginal owners

    பட மூலாதாரம், Getty Images

  13. ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

    ஹவாசாங் - 8 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக செவ்வாயன்று வடகொரியா தெரிவித்துள்ளது.

    ஐந்து ஆண்டுகளுக்கான ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மிகவும் முக்கியமான ஆயுத அமைப்புகளில் இந்த புதிய ஏவுகணையும் ஒன்று என்று வட கொரிய அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

    செவ்வாய் அன்று நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வடகொரிய அரசு மீதான சர்வதேச தடைகளையும் மீறி அந்நாடு தொழில்நுட்ப ரீதியாக ஆயுதங்களை மேம்படுத்தி வருவதைக் காட்டுகிறது.

    பிற ஏவுகணைகளை விடவும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகள் விரைவாகவும் சுலபமாகவும் செல்லக் கூடியவை என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

    இவற்றின் காரணமாக ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அமைப்புகளால் இவற்றைத் தடுப்பது கடினமானதாகும்.

    North Korea says it fired new 'hypersonic missile'

    பட மூலாதாரம், Reuters

  14. கடலைச் சென்றடைந்த லா பால்மா எரிமலைக் குழம்பால் புதிய அச்சம்

    ஸ்பெயின் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ள லா பால்மா தீவில் நடந்த எரிமலை வெடிப்பின் போது வெளியிடப்பட்ட எரிமலை குழம்புகள் அட்லான்டிக் பெருங்கடலை சென்றடைந்துள்ளன.

    இதன் காரணமாக நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.

    ப்லாயா நூவே எனும் இடத்தில் செந்நிறத்தில் உள்ள எரிமலை குழம்பு கடலில் கலக்கும் இடத்தில் வெள்ளை நிற ஆவி மேகம் போன்று வெளியிடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக தூண்டப்படும் ரசாயன நிகழ்வுகள் மனிதர்களின் தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்குவதுடன் சுவாசக் கோளாறுகளையும் உண்டாக்கலாம்.

    கேனரி தீவுகளில் செப்டம்பர் 19ஆம் தேதி எரிமலை வெடிப்பு நிகழ்ந்த பிறகு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

    சுமார் 6 ஆயிரம் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று அறிய இங்கே கிளிக் செய்யவும்.

    volcano
  15. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, மற்றும் உலக நாடுகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இன்று நேரலைப் பக்கத்தில் உங்களுக்காகச் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ மற்றும் பரணிதரன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்துக்குச் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.