You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு அக்டோபர் 11வரை நீட்டிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 775 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29.73 லட்சம் ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 726 ஆகவும் பதிவாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. செப்டம்பர் 27-ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை

    ஆகாஷ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவத்தை இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பு வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறது.

    ஒடிஷா மாநிலம் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விண்ணில் மாதிரி இலக்கு ஒன்றை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    இந்தச் சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

  3. பெங்களூருவில் அக்டோபர் 11வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதையடுத்து, அங்கு அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளது.

    இது குறித்து இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர காவல்துறை ஆணையாளர் கமல் பந்த், "நகரில் புதிதாக 255 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மூன்று கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன," என்றார்.

    கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 775 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29.73 லட்சம் ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 726 ஆகவும் பதிவாகியுள்ளது.

    கர்நாடகாவில் கடந்த திரையரங்குகள், அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் தடையின்று வந்து போக அக்டோபர் 1 முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும், அக்டோபர் 3ஆம் தேதி முதல் மதுபான விடுதிகள் இயங்கவும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  4. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி ஓய்வு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

    2014-ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்காக ஆடி வரும் மொயின் அலி இதுவரை 64 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 195 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் அவர் 5 சதங்களை அடித்திருக்கிறார்.

    இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இணையதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மொயின் அலி, " இப்போது எனக்கு 34 வயதாகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிந்ததைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி எனக்கு மகிழ்ச்சியே" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின்போது, இனி டெஸ்ட் போட்டிகளை ஆட விருப்பமில்லை என்று கூறியிருந்தார் மொயின் அலி.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, பெண் எஸ்பி பாலியல் வழக்கு மேல்முறையீடு: தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து

    தமிழ்நாடு காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் அளித்த பாலியல் புகாரை தெலங்கானா மாநில காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்திருந்தார். பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு வராமல் இந்த மனு இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கும் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவருக்கு எதிரான புகாரை விசாரித்தால் தமக்கு நியாயம் கிடைக்காது என பெண் எஸ்.பி செய்த முறையீட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்கை தெலங்கானாவுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தமது புகாரை தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்றப்புலனாய்வுத்துறையே விசாரிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த விவகாரத்தில் பெண் எஸ்.பியும் தமது புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்க தமக்கு ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மூன்று மனுக்களையும் இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

    அந்த பெண் எஸ்.பி. கடைசியாக தமது புகார் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அவரது புகாரை தமிழக சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருந்ததால், அவரது புகார் விசாரிக்கப்படாமலேயே இருந்தது.

    சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. தான் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது, தமது துறையின் இணை இயக்குநராக இருந்த அதிகாரி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தன்னை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி புகார் கூறியிருந்தார். பின்னர் அவர் அந்த துறையில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டபோதும், அதே துறையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி தொடர்ந்தார்.

    இதனால், தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த அலுவலகத்தின் சிசிடிவி கேமரா தடயங்களை அந்த அதிகாரி அழிக்கலாம் என்று அச்சம் தெரிவித்து புகார்தாரரான பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

  6. வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு - இன்று 'பாரத் பந்த்'

    இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஒட்டி இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    இந்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    வேளாண் அமைப்புகளின் போராட்டத்தின் மையமாக இருக்கும் டெல்லியின் மாநில எல்லைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்தபின்பு தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் நரேந்திர மோதி அரசு வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ள மறுத்து வருகிறது," என்று தெரிவித்தார்.

    இந்திய விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம்.

  7. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்த தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இடம்பெற்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிந்து விடும். எனவே, தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேர்தலை தள்ளிவைக்க ஆணையம் தெரிவிக்கும் காரணங்கள் மோசமானதாக உள்ளதாக கருத்து கூறிய நீதிமன்றம், ஆணையம் கேட்டுக் கொண்டபடி நான்கு மாத அவகாசத்தை தருவதாக கூறினர்.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் முன்பு 528 ஆக இருந்த பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. 664 ஆக இருந்த நகர பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இது தவிர மேலும் 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க மனுதாரரான தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபனை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏழு மாத அவகாசம் கோரப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

  8. இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலத்தீனர்கள் பலி

    மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

    பாலத்தீன தரப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தங்கள் நாட்டு ராணுவத்தினர் இருவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

    தங்கள் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    பர்குய்ன் எனும் பகுதியில் இருவரும் ஜெருசலேம் அருகே உள்ள பித்து எனும் இடத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

  9. முகச்சவரம் செய்யத் தடை விதித்த தாலிபன்

    சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன்தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறிப் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறிய பின்னர் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

    அப்பொழுது தாலிபன்கள் முன்பு ஆட்சி செய்த 1996 - 2001 காலகட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்போதைய ஆட்சி மிதமானதாக இருக்கும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் தற்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

  10. இந்தியர்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்: இன்று துவக்கி வைக்கும் இந்திய பிரதமர் மோதி

    இந்தியர்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் பாரத் ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோதி இன்று காலை 11 மணிக்கு துவக்கி வைக்கவுள்ளார்.

    இந்தியாவில் மின்னணு மருத்துவ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோதி குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இன்று தொடக்கி வைக்கப்படும் திட்டம், சோதனை முயற்சியாக ஆறு யூனியன் பிரதேசங்களில் அமலில் இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தேசிய அளவில் அமலுக்கு வரும் திட்டம், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனாவின் மூன்றாம் ஆண்டு நிறைவை தேசிய சுகாதார ஆணையம் கொண்டாடும் வேளையில் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேசிய மருத்துவ அடையாள எண் உருவாக்கப்பட்டு அடையாள அதற்கான அட்டை வழங்கப்படும். தனி நபரின் மருத்தும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களின் மருத்துவ களஞ்சியமாக அது இருக்கும். இந்த திட்டத்தில் மருத்துவ ஆவணங்களை பெறவும் பரிமாறவும் மக்களிடம் ஒப்புகை பெற்ற பிறகே இந்த சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  11. ஒரு பாலினத்தவர்கள் திருமணம் - சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

    சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று பங்கேற்ற சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

    இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 64 சதவீதம் பேர் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

    இதனால் ஒரு பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் இன்னொரு ஐரோப்பிய நாடாகிறது சுவிட்சர்லாந்து.

    எல்ஜிபிடி உரிமைகளில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது பாரம்பரிய குடும்ப அமைப்பை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று பழமைவாத அரசியல் கட்சியினரும், தேவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

    2007-ஆம் ஆண்டு முதலே ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் இணையர்களாகப் பதிவு செய்து கொள்ள அந்நாட்டுச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

    எனினும் திருமணத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட சில உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.

    இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் ஒருபால் திருமணம் அங்கீகாரம் பெற்றுள்ளதை அடுத்து அதற்கான சட்டப்பூர்வ உரிமையை அளிக்கும் உலகின் 30வது நாடாக சுவிட்சர்லாந்து.

  12. ஜெர்மனி தேர்தல் முடிவுகள்

    ஜெர்மன் தேர்தல் முடிவுகளில் தற்போது பதவியில் இருந்து வெளியேறும் சான்செலர் ஏங்கலா மெர்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

    இன்னும் முழுமையாக வெளிவராத தேர்தல் முடிவுகளில் மைய - இடதுசாரி கட்சியான ஜெர்மனி சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது. எனினும் இந்தக் கட்சி சிறிய அளவிலேயே முன்னிலை பெற்றுள்ளது.

    மெர்கலுக்கு அடுத்ததாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் சான்செலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்மின் லஷெட் தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஆனால் தங்களுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சியின் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, மற்றும் உலக நாடுகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இன்று நேரலைப் பக்கத்தில் உங்களுக்காகச் செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ மற்றும் பரணிதரன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்துக்குச் செல்ல இங்கே க்ளிக் செய்யவும்.