You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன் – இந்திய பிரதமர் மோதி முக்கிய ஆலோசனை

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி; இருநாட்டு தலைவர்களும் பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இந்தியா - அமெரிக்கா உறவு பல சர்வதேச நெருக்கடிகளை தீர்க்க உதவும்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்தார்.

    இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருநாட்டு உறவும் பல சர்வதேச பிரச்னையை தீர்க்க உதவும் என்றார்.

    “இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உள்ள உறவு பல சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் என நான் நீண்டகாலமாக நம்புகிறேன். 2006ஆம் ஆண்டு நான் துணை அதிபராக இருந்தபோது 2020ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே இந்தியா மற்றும் அமெரிக்காதான் மிக நெருக்கமான நாடாக இருக்கும் என தெரிவித்திருந்தேன்,” என பைடன் தெரிவித்துள்ளார்.

    “உலகளாவிய நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த நமது திறமைகளை பயன்படுத்த வேண்டும்,” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி தற்போதுதான் முதன்முறையாக நேரில் சந்திக்கிறார்.

    இருநாட்டு தலைவர்களின் ஆலோசனையில் ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி வியாழனன்று அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  3. பிட்காயின் பரிவர்த்தனையை சட்டவிரோதமாக அறிவித்தது சீனா

    சீனாவின் மத்திய வங்கி க்ரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனையை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.

    அதாவது பிட்காயின்களுக்கு தடை விதித்துள்ளது.

    சீனா க்ரிப்டோ கரன்ஸியின் மிகப்பெரிய சந்தையாகும்.

    சர்வதேச அளவில் க்ரிப்டோ கரன்ஸியின் விலை ஏற்றத்தை பொருத்து சீனாவிலும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது.

    பிட்காயின்கள் பரிவர்த்தனையை சட்ட விரோதம் என சீனா அறிவித்தபிறகு அதன் மதிப்பு 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் கீழ் சரிந்தது.

    சீனாவில் க்ரிப்டோ கரன்ஸி வர்த்தகம் 2019ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஆன்லைனில் அந்நிய செல்வாணிகள் மூலம் பரிவர்த்தனை தொடர்ந்தது.

    இருப்பினும் இந்த வருடம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் மோதி சந்திப்பு

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

  5. அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்: போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது

    அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற நிர்வாகத்துக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தர்ரங் மாவட்டத்தின் மூன்றாம் எண் தோல்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

    இது குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கெளஹாத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அசாம் அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. சம்பவம் ஏன் நிகழ்ந்தது என்று விசாரணையில் கண்டறியப்படும்.

    மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர், அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில், வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

    இந்த வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் கற்களை வீசத் தொடங்கினர் என்று ஊடகங்களுக்கு தகவல் அளித்த தர்ரங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மா, கூறினார். ஒன்பது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

  6. ஆப்கானிஸ்தானில் மீண்டும் கடுமையான தண்டனைகள் கொண்டுவரப்படும்

    தாலிபனின் ஆபத்தான முன்னாள் தலைவர் ஒருவர் கடுமையான தண்டனைகளான மரண தண்டனை மற்றும் கை கால்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

    முல்லா நூருதீன் துரபி என்னும் அந்த ஆபத்தான தலைவர் தற்போது சிறைகளுக்கான நிர்வாகியாகவுள்ளார்.

    “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு இம்மாதிரியான கை கால்களை துண்டிக்கும் தண்டனை மிக முக்கியம்” என அவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் இந்த தண்டனைகள் கடந்த தாலிபன் ஆட்சியில் வழங்கப்பட்டதை போல பொதுவெளியில் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் கடந்த காலங்களில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறித்த விமர்சனங்களை நிராகரித்த அவர், “நாங்கள் எந்த சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என யாரும் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

  7. டெல்லியில் நீதிமன்றத்தில் சுட்டு கொல்லப்பட்ட குற்றவாளி

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நீதிமன்றம் ஒன்றில் வழக்கறிஞர்களை போல வேடமணிந்த இருவர் ஆபத்தான குற்றவாளி ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

    சுடப்பட்ட அந்த நபரின் பெயர் ஜித்தேந்தர் மான் கோகி. நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது.

    காவல்துறையினர் பதில் துப்பாக்கிச் சூடு நட்த்தியதில் அந்த இருவரும் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குற்றவாளிக்கு எதிரான கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

    டெல்லியின் மிகவும் தேடப்பட்ட ஒரு குற்றவாளி ஜித்தேந்தர் மான் கோகி. இவர் மீது கொலை, கடத்தல், மோசடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிற மாநிலங்களிலும் இவர் மீது வழக்குகள் உள்ளன.

    இந்த சம்பவம் டெல்லி நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மூத்த அரசியல்வாதி ஒருவர், இந்த சம்பவம் நீதிமன்றத்தில் உள்ள பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். கோகி கடந்த வருடம் மார்ச் மாதம் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

  8. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் 450 ரவுடிகள் கைது

    தமிழ்நாடு முழுவதும் காவல்துறை நடத்திய சோதனையில் 450 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் வியாழக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் ரவுடிகளைத் தேடும் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் திடீர் சோதனையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கைகள் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

    இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    அவர்களில் 450 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    கைதுசெய்யப்பட்ட 450 பேரில் 181 பேர் மீது நீதிமன்ற பிடியாணைகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 250 கத்திகள், கைப்பற்றப்பட்டன.

    கைது செய்யப்படாத ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்கான பிணை உத்தரவாதத்தை காவல்துறை பெற்றுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 716 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டு 70 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர். கத்தி அரிவாள் உட்பட 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  9. எடப்பாடியை வரவேற்க கூடிய இரு தரப்பு அதிமுகவினர் இடையே அடிதடி

    உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லை மாவட்டம் செல்லும் வழியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கூடிய கூட்டத்தில் அதிமுக-வின் இரு பிரிவினர் இடையே மோதல், அடிதடி ஏற்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.

    விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் மற்றும் கே டி ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இருந்தனர். வரவேற்பு முடிந்து செல்லும் வழியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தனர்.

  10. அமெரிக்காவில் நரேந்திர மோதி : சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவும் 'குவாட்'

    கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது.

    குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும்.

    இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

  11. உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-வுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    திமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக போய்விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும்,கொரோனா விதிகளை அமல்படுத்தவும் வலியுறுத்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், மத்திய காவல் படையை பணியமர்த்த வேண்டும், தேர்தலை முழுமையாக சிசிடிவி பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பதில் இல்லை என்றும் தெரிவித்தார்.

    மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அரசு வழக்குரைஞர் முத்துக்குமார் ஆஜராகி, 14900 வாக்குச்சாவடிகளுக்கும் போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நியாமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.

  12. தென் கொரியாவுடன் சமாதானப் பேச்சுக்கு வடகொரியா சம்மதம்

    தென்கொரியாவுடன் பேச்சு நடத்தி, போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர சம்மதம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார்.

    கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953-ஆம் ஆணஅடு நிறுத்தப்பட்டாலும், அதிகாரப்பூர்வமா சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகவில்லை.

    இந்தப் போர் முடிவுற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதற்கு அறிக்கை மூலமாகப் பதிலளித்திருக்கும் கிம் யோ-ஜோங், சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார்.

    வடகொரியாவுக்கு எதிரான விரோதக் கொள்கைகளைக் கைவிட வேண்டும், தவறான முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார்.

    வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார்.

  13. எந்த முஸ்லீமும் ஐ.எஸ். கருத்தை கொண்டிருக்கலாம் என இலங்கை அமைச்சர் கூறியதற்கு கண்டனம்

    எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூட அவ்வாறு இருக்கலாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கும் எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ”நாடாளுமன்றில் மதவெறியை நாங்கள் காண்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  14. புதிய உச்சத்தைத் தொட்டது சென்செக்ஸ்

    மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளை எட்டியது.

    தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டியும் நூறு புள்ளிகள் உயர்வுடன் 17,923 என்ற புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது.

    சர்வதேச சந்தைகள் வலுவாக இருப்பதால் இந்த ஏற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

    அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்ப்பு இருப்பதாலும் உலகம் முழுவதும் சந்தைகள் ஏறுமுகத்தில் காணப்படுகின்றன.

  15. நரேந்திர மோதி - கமலா ஹாரிஸ் முதல் முறையாகச் சந்திப்பு

    அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசினார்.

    அமெரிக்க வரலாற்றில் துணை அதிபரான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

    வாஷிங்டனின் நடந்த இந்தச் சந்திப்பின்போது துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு நரேந்திர மோதி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவுக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    "உங்களை வரவேற்பதற்காக இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்" என்று மோதி அவரிடம் கூறினார்.

    மோதியின் மூன்று நாள் அமெரிக்கப் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக அவர் சந்தித்துப் பேசுகிறார்.

  16. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம்.மணிகண்டன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்