தாலிபான்கள் காபூல் நகரை முற்றுகையிடத் தொடங்கியதுமே அங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. சூறையாடல் மற்றும் கொள்ளையைத் தடுப்பதற்காக நகருக்குள் நுழைவதாக தாலிபன்கள் அறிவித்தனர்.
அதற்குள்ளாகவே பல முக்கியப் பகுதிகளை விட்டு அரசுப் படைகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.
அதன் பிறகு அல் ஜசீரா தொலைக்காட்சியில் அதிபர் மாளிகை தாலிபன்களால் முற்றுகையிடப்படும் காட்சிகள் வெளியாகின.
காபூலுக்குள் தாலிபன்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.
நாட்டில் ரத்தம் சிந்தப் படுவதைத் தவிர்ப்பவதற்காகவே இந்தக் கடினமான முடிவை எடுத்ததாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.
"வாள் மற்றும் துப்பாக்கியைக் கொண்டே தாலிபன்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் மரியாதையைக் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
ஆனால் நாட்டைக் கைவிட்டு அவர் வெளியேறிவிட்டதாக பிற அரசியல்வாதிகள் அஷ்ரப் கானியை விமர்சித்து வருகின்றனர்.
காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து கொண்டதுமே மக்கள் மனதில் பீதி குடியேறியது. தங்களது வாகனங்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தனர்.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக 22 வயதான மாணவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"என் கால்கள் வலிக்கின்றன, அவற்றில் கொப்புளங்கள் உள்ளன, நான் நிற்பதற்குக்கூட முடியாமல் இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
"நான் கிளம்பும்போது, என் குடும்பத்தைப் பற்றிய நினைவு என்னை வாட்டுகிறது. அவர்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. எனக்கு எந்த எதிர்காலமும் புலப்படவில்லை" என்றார் அவர்.
அச்சத்தில் மக்கள் பணத்தை எடுக்க முற்பட்டதால் நாள் முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. ஏடிஎம் மையங்கள் நிரம்பியிருக்கின்றன.
"மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சிலர் தப்பி ஓடுகிறார்கள் அல்லது வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்" என்று உள்ளூர் எம்பியான ஃபர்சானா கோச்சா பிபிசியிடம் தெரிவித்தார்.
காபூல் நகரத்துக்குள் பெரிதாக சண்டை ஏதும் நடக்கவில்லை. பெரும்பாலும் ரத்தக் களரி ஏற்படாமலேயே தாலிபன்கள் நகரத்தின் பெரும்பகுதியைக் கைபற்றிவிட்டனர்.
ஆயினும் கராபாக் மாவட்டத்தில் சண்டை நடந்ததாகவும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரையும் கொல்ல மாட்டோம், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பிபிசியிடம் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஷாஹீன் தெரிவித்தார். மக்கள் தங்களது உடைமைகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.