You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

காபூல் விமான நிலைய பாதுகாப்பை மீட்ட அமெரிக்க படையினர் - விமானங்கள் பறக்கத் தடை

காபூல் விமான நிலையத்துக்கு வந்த ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் விமானங்களில் ஏற முண்டியடித்ததால் காலை முதலே நிலைமை பதற்றமாக இருந்தது. இதனால் அமெரிக்க கூட்டுப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருந்த நேயர்களுக்கு பிபிசி தமிழின் நன்றி. நாளை காலை வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. ஆப்கனில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி தொடரும்

    “காபூல் நகரில் சண்டை நடந்திருந்தால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கந்தஹார், ஹெராட், லஷ்கர் கா போன்ற இடங்களில் வாரக்கணக்கில் நடந்த மோதல்களால் மனிதாபிமான உதவிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். வீடுகள், மருத்துவமனைகள், அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிந்துள்ளன. இந்த தேவைகளை நிறைவேற்ற உதவி செய்ய சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி பூண்டுள்ளது. எங்கள் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தானில் குறைக்கமாட்டோம். ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். அந்தப் பணி இப்போது நிற்காது” என்று கூறியுள்ளார் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆப்கன் தூதுக்குழுவின் தலைவர் எலோய் ஃபில்லியன்.

  3. ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி பைடன் பேசுகிறார்

    ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில மணி நேரங்களில் உரையாற்றுகிறார்.

    இன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் அவர், ஆப்கன் நிலைமை குறித்துப் பேசுவார்.

    அவரது உரை EST நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 3:45க்கு நிகழும். இந்திய நேரப்படி இது செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு நிகழும்.

  4. காபூல் விமான நிலையத்தில் எல்லா விமான சேவைகளும் நிறுத்தம்

    காபூல் விமான நிலையத்துக்கு வருகிற, அங்கிருந்து கிளம்புகிற பொதுமக்கள், ராணுவ விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன என்று அமெரிக்க பாதுகாப்புப் படை தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்று தெரியவில்லை என்று கூறிய அவர், விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க துருப்புகள் முயற்சி செய்துவருகின்றன என்றார்.

    விமான நிலையத்தில் அமெரிக்கத் துருப்புகளின் நடவடிக்கையால் ஆயுதம் தாங்கிய இருவர் இறந்துள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    ஏற்கெனவே 2,500 அமெரிக்க படையினர் விமான நிலையத்தில் உள்ளனர். விமான நிலையத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர மேலும் 500 அமெரிக்கத் துருப்புகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

  5. தாலிபன்கள் கைப்பற்றிய எல்லைகளில் காத்திருக்கும் உணவுப் பொருள்கள்

    "சிக்கலில் இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் சென்று சேரவில்லை என்பதில் ஆழமான கவலை கொண்டுள்ளோம். உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி தாலிபன்கள் கைப்பற்றிய எல்லை சந்திப்புகளில் 500 டன் உணவுப் பொருள்கள் காத்திருக்கின்றன. இந்த உதவிப் பொருகளின் விநியோகம் உடனடியாக மீண்டும் தொடங்கவேண்டும்" என்கிறார் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்.

  6. ஆப்கானிஸ்தான் நிலைமை: இந்திய அரசு என்ன சொல்கிறது?

    ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களில் நிலைமை தீவிரமாக மோசமாகிவிட்டது. அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய நாட்டவருக்கான அறிவுரைகளை வழங்கி வருகிறோம். உடனடியாக இந்தியா திரும்பும்படி அவர்களுக்கு அழைப்புவிடுப்பதும் இதில் அடக்கம் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி. அவசரகால தொடர்பு எண்களையும் விநியோகித்துள்ளோம். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களில் நாடு திரும்ப விரும்புகிறவர்களோடு தொடர்பில் உள்ளோம். காபூல் விமான நிலையத்தில் வணிக விமானங்கள் இயங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய நாட்டவரை திரும்ப அழைத்துவருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இது சரியானதும், இந்தப் பணி மீண்டும் தொடரும் என்று கூறியுள்ள அரிந்தம் பக்ஷி, ஆப்கானிஸ்தானில் இந்திய- ஆப்கானிஸ்தான் பரஸ்பர வளர்ச்சியை மேம்படுத்துவதில், மக்கள் சார்ந்த, கல்வி சார்ந்த உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் கூட்டாளிகளாக பல ஆப்கானியர்கள் செயல்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

  7. ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசுக்கு புதிய தலைவராக யாருக்கு வாய்ப்பு?

    ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கிக் கொண்டுள்ள தாலிபன் அமைப்பு எத்தகைய கட்டமைப்பைக் கொண்டுள்ளது? அதில் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் யாரிடம் உள்ளது? அந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது? இந்த கேள்விகலுக்கான பதிலைத் தருகிறது இந்த விளக்கப்படம்.

  8. ஆப்கானிஸ்தானுடன் நட்புறவை ஆழமாக்க சீனா தயார், கெர்ரி அல்லென் - பிபிசி மானிடரிங் பிரிவு

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டுடனான நட்பையும் கூட்டுறவையும் ஆழப்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீன அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் சீனர்கள் கொல்லப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று ஆப்கானிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.

    ஆனாலும், சீனக் குடிமக்கள் வெளியே செல்லவேண்டாம் என்றும், அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுவதாக இருந்தால், உலகளாவிய அவசர நிலை கால் சென்டரை அழைக்கும்படியும் கூறியுள்ளது அந்த தூதரகம். ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் அலுவலர்களை திரும்ப அழைக்கும் திட்டம் எதுவும் சீனாவுக்கு இல்லை என்று சௌத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

    சீனத் தூதரகம் தாலிபன்களுடன் தொடர்பில் உள்ளதையே இது காட்டுகிறது என்கிறது சௌத் சீனா மார்னிங் போஸ்ட்.

    ஆப்கானிஸ்தான் மக்களின் விருப்பங்களையும், தேர்வுகளையும் தாங்கள் மதிப்பதாக சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹுவா சுன்யிங் ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார். அத்துடன் சீனா நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

    அதே நேரம், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தமது ஜின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் இந்த நிலைமை எந்த எதிர்மறைத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாமல் சீனா தடுக்கும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளேடு சொல்கிறது.

    சீனாவில், ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் விறுவிறுப்பான நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளாக இடம் பெறுகின்றன. ஆப்கானிஸ்தான் எப்படி அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறது என்ற கோணத்திலேயே சீன ஊடகங்கள் இந்த செய்தியை அணுகுகின்றன.

    அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெளியே நடக்கும் போராட்டக் காட்சிகளை குளோபல் டைம்ஸ் பகிர்கிறது. இந்த சூழ்நிலையை ஒரு மாதத்துக்கு முன்பு கணிப்பதற்கு ஜோ பைடன் தவறிவிட்டார் என்று பல ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

  9. இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம் - கோவிட் பரவலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை ஏன்?

    இலங்கை அமைச்சரவையில் இன்று (ஆகஸ்ட் 16) சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய, 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    அத்துடன், புதியதொரு அமைச்சு பொறுப்பும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.

    யார் அவர்கள் என்பதை அறிய இங்கே சொடுக்கவும்

  10. மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

    மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் பதவி விலகியிருக்கும் நிலையில், புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு அவரை மாமன்னர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    மொஹிதின் யாசினுக்கு அவர் பதவி வகித்த 17 மாதங்களுமே சிக்கல் நிறைந்தவையாக இருத்தன.

    கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை தடுக்கத் தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என பல முனைகளிலும் அவரது அரசு நெருக்கடியை சந்தித்தது.

    மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 12,510 பேர் இறந்துள்ளதாகவும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாத நிலைக்கு அரசு இயந்திரங்கள் தள்ளப்பட்டதற்குக் காரணம் மொஹிதின் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

    அந்த நாட்டு அரசியலின் சமீபத்திய பிரச்னையை அறிய வேண்டுமானால், இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  11. ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களுக்கு பாதிப்பு இல்லை - டெல்லி சீக்கியர் குருத்வாரா குழு தலைவர்

    ஆப்கானிஸ்தானில் வாழும் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர்கள் காபூலில் உள்ள குருத்வாராவில் பாதுகாப்பாக உள்ளதாகவும் டெல்லி சீக்கியர் குருத்வாரா மேலாண்மைக் குழு தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்ஸா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்களுடைய வசமாக்கிக் கொண்ட பிறகு, அங்குள்ள காஸ்னி, ஜலாலாபாதில் உள்ள சீக்கிய சகோதரர்கள் காபூலில் உள்ள குருத்வாராவில் தஞ்சம் அடைந்ததாக கூறியுள்ளார்.

    அங்கு இதுபோல 320 பேர் வந்துள்ளதாகவும் அதில் 50 பேர் இந்து குடும்பத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு முன்பு உள்ளூர் தாலிபன் தலைவர்கள் அந்த குருத்வாராவுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேசியதாகவும் அப்போது யாரும் பீதி அடையத்தேவையில்லை. உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்று கூறிச் சென்றதாக மன்ஜிச் சிங் சிர்ஸா கூறியுள்ளார்.

  12. சிவில் மக்களிடம் இருந்து ஆயுதங்களை பெறும் தாலிபன்கள் - காரணம் என்ன?

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சாதாரண மக்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களை பெறும் நடவடிக்கையில் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய சொந்த பாதுகாப்புக்கு இனி அந்த ஆயுதங்கள் தேவையில்லை என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

    "பொதுமக்களில் சிலர் தங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக சில வகை ஆயுதங்களை வைத்திருப்பதாக நாங்கள் அறிகிறோம். அவர்கள் இனி பாதுகாப்புடன் இருப்பர். நாங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை," என்று தாலிபன்கள் கூறியதாக பிபிசி அரபு சேவை தெரிவிக்கிறது.

    இன்று காலையில் டோலோ உள்ளூர் தொலைக்காட்சியில் ஆயுதங்களுடன் வந்த தாலிபன்கள், அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்துச் சென்றனர்.

    இந்த தகவலை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டோலோ டிவி, "சில தாலிபன்கள் எங்களுடைய அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்பு வீரர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த ஆயுதங்களை பெற்றுச் சென்றனர். இனி இந்த வளாகம் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் கூறிச் சென்றனர்," என்று கூறியுள்ளது.

    இதேவேளை, டோலோ நியூஸ் இயக்குநர் சாத் மொஹ்சேனி ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒளிபரப்புப் பணியை எவ்வித தடங்கலுமின்றி செய்யலாம்," என்று கூறியுள்ளார்.

  13. ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோதி

    டோக்யோ ஒலிம்பிக் 2020ல் பங்கேற்ற இந்திய வீரர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். குறிப்பாக இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கு 7 பதக்கம் வென்ற வீரர்களுடன் அவர் உரையாடினார். ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் சுர்மா என்ற வட இந்திய உணவையும், பேட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுடன் ஐஸ் கிரீமும் இணைந்து எடுத்துக்கொள்வது போலக் காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

  14. ஆப்கானிஸ்தானில் இருந்து சிலர் வெளியேற மாட்டார்கள்: பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர்

    பிரிட்டன் குடிமக்களையும், உள்ளூர் கூட்டாளிகளையும் அந்நாட்டில் இருந்து வெளியேற்றும் பரபரப்பான முயற்சிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், "சிலர் திரும்பி வரமாட்டார்கள்" என்று ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வேலஸ்.

    முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் குடிமக்கள் அனைவரும் வெளியேறுவார்கள் என்று நம்புவதாக கூறிய அவர், இன்று காலை எல்.பி.சி. ரேடியோவில் பேசியபோது கண்கள் கலங்கிவிட்டார்.

    அப்போது பேசிய அவர், "இது எனக்கு ஆழமான வருத்தம். சிலர் திரும்பிவரமாட்டார்கள். மூன்றாம் நாடுகளில் இந்த மக்களை கையாள நம்மால் ஆனதைச் செய்யவேண்டும்," என்றார்.

    இந்த சூழ்நிலையை "மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வது ஏன்," என்று கேட்கப்பட்டபோது, "நான் ஒரு சிப்பாய். மேற்கத்திய நாடுகள் செய்தது துயரமானது. ஆட்களை வெளியே கொண்டுவர, நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும், 20 ஆண்டுகால தியாகத்துக்கும் உண்மையாக நிற்க நம்மால் ஆனதை அனைத்தையும் செய்யவேண்டும்," என்றார் அவர்.

  15. தாலிபன் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் முதல் விடியலின் காட்சிகள்

    ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள்வசமாக்கிக் கொண்டுள்ளனர்.

    அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் முதல் விடியலில் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன. கண்ணில் தென்படும் நபர்கள் பாரம்பரிய தாலிபன் ஆடை அணிந்தபடி கையில் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

    காபூல் நகரத்தில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மாணவர்கள் செல்வதையும் பார்க்க முடிந்தது.

    இதேவேளை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். விமான நிலையம் திறக்கப்பட்டால் கிடைக்கும் விமானத்தில் எந்த நாட்டுக்காவது சென்று தஞ்சம் அடையலாம் என்ற எண்ணத்தில் அவர்களில் பலர் அங்கு வந்துள்ளனர்.

  16. இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம்

    இலங்கை அமைச்சரவையில் இன்று (ஆகஸ்ட் 16) சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய, 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    அத்துடன், புதியதொரு அமைச்சு பொறுப்பும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.

    மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலைய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டின்போது 3 பேர் பலியானதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    அங்கு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் சடலங்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளதாக அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனினும், எந்த துப்பாக்கி தோட்டாக்கள் எந்த பக்கத்தில் இருந்து வந்தன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

    முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் விமானங்களில் ஏற நாட்டை விட்டு வெளியே முற்பட்டவர்களின் கூட்டம் அலைமோதியதால் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அமெரிக்க படையினர் தெரிவித்திருந்தனர்.

    அனுமதியின்றி விமானங்களுக்குள் ஏற முயன்றவர்களை தடுக்கும் நோக்குடன் அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக அங்குள்ள அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியிருந்தார்.

  18. மலேசியாவில் காபந்து அரசாக மொஹிதின் யாசின் தொடர மன்னர் உத்தரவு

    மலேசியாவில் புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக தொடருமாறு பிரதமர் மொஹிதின் யாசினை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மாமன்னர் அரண்மனையின் ஃபேஸ்புக் அலுவல்பூர்வ பக்கத்தில் மலாய் மொழியில் மன்னரின் முடிவு விவரிக்கப்பட்டுள்ளது.

    அதில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும்வரை காபந்து அரசாக தொடருமாறு மன்னர் பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  19. காபூல் விமான நிலைய கட்டுப்பாட்டை மீட்ட அமெரிக்க படைகள்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டை அமெரிக்க கூட்டுப்படையினர் தங்கள் வசம் மீட்டுள்ளனர்.

    அங்கு ஏற்கெனவே முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு குடிமக்களையும் தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக, இன்று காலையில் காபூல் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் நோக்கத்துடன் வந்தவர்கள்.

    அவர்கள் விமானங்கள் மீது பேருந்துகளில் முண்டியடித்து ஏறுவது போல சென்றதால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அங்கு அமைதி திரும்பியுள்ளது.

    இந்த நிலையில், காபூல் சர்வதேச விமான நிலைய வளாகம், ஓடுதளம் ஆகியவற்றின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்க படையினர் மீட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறை அமெரிக்கா மற்றும் கூட்டுப்படை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே பயணிகள் விமான சேவை மறுஉத்தரவு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  20. மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகல் - ராஜினாமா ஏற்பு, சதீஷ் பார்த்திபன், மலேசியா

    மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் இன்று விலகி உள்ளார்.

    அவரது ராஜினாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

    மலேசியாவில் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை இன்று பதவி விலகிய தகவலை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற கைரி ஜமாலுதின் சற்று முன்னர் தெரிவித்தார்.

    கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று பதவி விலகுவார் என கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

    இன்று திங்கட்கிழமை மலேசிய மாமன்னரைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைப்பார் என பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையில் ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தோட்டத்தொழில் அமைச்சர் பதவி வகித்த கைருடின் அமான் ரசாலி தெரிவித்தார்.

    அமைச்சரைக் கூட்டம் முடிந்த பின்னர் மாமன்னரைச் சந்தித்துள்ளார் பிரதமர் மொஹிதின் யாசின். அப்போது அவர் பதவி விலகுவது குறித்து மாமன்னரிடம் தெரிவித்துள்ளார்.

    இன்னும் சற்று நேரத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதால் பொதுத்தேர்தலை நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. எனவே இடைக்கால பிரதமராக மூத்த நாடாளுமன்ற எம்பிக்களில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இல்லையெனில் ஒற்றுமை அரசாங்கம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    மேலும், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர் ஆட்சி அமைக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.