அமெரிக்க தேர்தல் முடிவுகள்: "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்" – அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய உக்திகள் என்ன?

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய உக்திகள் என்ன? பைடன் வெற்றி பெற என்னென்ன சாத்தியங்கள் இருக்கிறது?

  2. அரிசோனாவில் ஷார்ப்பி மார்க்கர் முறைகேடா? - தேர்தல் அதிகாரி மறுப்பு

    அரிசோனா மாநிலத்தில் நிரந்தரக் குறி பேனா அல்லது ஷார்ப்பி பேனா மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் செல்லாதவை என்று நிராகரிக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் பரப்பப்படும் தகவல்களை அந்த மாநிலத் தேர்தல் அதிகாரி, செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட், கேட்டி ஹாப்ஸ் மறுத்துள்ளார். நேரில் வந்து வழக்கமான வாக்குச்சீட்டில் வாக்களித்திருந்தால் வாக்கு நிராகரிக்கப்படாது. எந்த பேனாவை பயன்படுத்தினீர்கள் என்பது பிரச்சனையே அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குடியரசுக் கட்சி வாக்காளர்களிடம் இருந்து அவர்களது பேனாவை வாங்கிக் கொண்டு ஷார்ப்பி பேனாவை கொடுத்து அதிகாரிகள் வாக்களிக்கச் சொன்னதாகவும், ஷார்ப்பி பேனாக்களின் இங்க் ஊறும் என்பதால் அவர்களது வாக்குகள் யாருக்கு அளிக்கப்பட்டன என்பதை ிதீர்மானிக்க முடியாமல் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் சிலர் பேசுகிறார்கள்.

    1952 முதல் தொடர்ந்து குடியரசுக் கட்சி வென்று வந்த இந்த மாநிலத்தில் (1996 மட்டும் விதி விலக்கு) இப்போது பைடன் உறுதியான முன்னிலை பெற்றிருப்பதால் இந்த பிரசாரம் செய்யப்படுவதாக ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. வெவ்வேறு ஊடகங்களில் வெவ்வேறு முன்னிலை நிலவரம் ஏன்?

    வெவ்வேறு செய்தி ஊடகங்கள் முன்னிலை நிலவரம் குறித்து வெவ்வேறு தகவல்களை அளிப்பது குறித்து குழப்பமாக உள்ளதா?

    இதற்கு காரணம் 11 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்ட அரிசோனா மற்றும் 10 தேர்தல் சபை உறுப்பினர்களைக் கொண்ட விஸ்கான்ஸின் ஆகிய மாகாணங்களை எதிர்க்கட்சி வேட்பாளர் பைடன் கைப்பற்றி விட்டதாக பிற ஊடகங்கள் கணிக்கின்றன.

    இப்போதே அதைக் கூறுவது சற்று முன்கூட்டியது என்று பிபிசி கருதுகிறது.

    விஸ்கான்ஸின் மாகாணத்தில் 99% வாக்குகள் மற்றும் அரிசோனா மாகாணத்தில் 85% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இங்கு இருவரும் நெருக்கமான போட்டியில் உள்ளனர்.

    அரிசோனாவில் இதுவரை பைடன் 51% மற்றும் டிரம்ப் 48% வாக்குகளை பெற்றுள்ளனர்.

  4. ஆசிய அமெரிக்கர்களின் வாக்கு யாருக்கு?, சயோயின் ஃபெங், பிபிசி சீன சேவை, வாஷிங்டன் டி.சி

    தேசிய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், சுமார் 64 சதவீத ஆசிய அமெரிக்கர்கள் பைடனுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; 30 சதவீதம் பேர் டிரம்பிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

    2016ஆம் ஆண்டின் எண்ணிக்கையை போலவேதான் இந்த எண்ணிக்கையும் உள்ளது. ஆனால் 2012ஆம் ஆண்டில் ஒபாமா பெற்ற வாக்குகளை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையாகும்.

    ஆசிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் இவர்களுக்கு 5 சதவீத வாக்குகள் மட்டுமே இருந்தாலும், முக்கிய போட்டி மாகாணங்களில் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக உள்ளன.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்கள் சர்வேயின்படி, சமீப வருடங்களில் குடியரசுக் கட்சி ஆசிய அமெரிக்கர்கள் மத்தியில் ஆதரவை பெற்றுள்ளது; இருப்பினும் ஐந்தில் இரண்டு ஆசிய அமெரிக்க வாக்காளர்கள் தங்களின் கட்சி எது என பதிவு செய்யவில்லை இதன் பொருள், இவர்கள் கணிக்க “முடியாத வாக்காளர்கள்” என்ற பட்டியலில் வருகிறார்கள்.

    ஆசிய அமெரிக்கர்கள் என்றால் அவர்கள், பல்வேறு நாடு, கலாசாரம், மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். எனவே இந்த சர்வே தகவல்படி அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிகமாக பைடனுக்கு ஆதரவளித்துள்ளனர் என்றும், அமெரிக்க வாழ் வியட்நாம் மக்கள் டிரம்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்றும் தெரிகிறது.

    கொரோனா வைரஸை தொடர்ந்து `சீனா வைரஸ்` என டிரம்ப் கூறிவந்தாலும், அவருக்கு சில அமெரிக்க வாழ் சீனர்களின் ஆதரவும் உண்டு.

    `வைரஸ் சீனாவில் தொடங்கியதால்` டிரம்பின் கூற்று குறித்து தான் வருந்தவில்லை என 35 வயது அமெரிக்க வாழ் சீனரான செஷ்ரென் ஷாவ் தெரிவிக்கிறார்.

    சீனா மீது விமர்சனங்களை வைக்கும் சில அமெரிக்க வாழ் சீனர்கள், டிரம்ப் கம்யூனிஸத்திற்கு எதிராக பேசுவதற்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் இரு முக்கிய கட்சிகளும் அமெரிக்க வாழ் ஆசிரியர்களிடம் போதுமான அளவு சென்று சேரவில்லை என்றே கூறலாம். அதன் விளைவாக ஆசிய அமெரிக்கர்களின் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன. இருப்பினும் இந்த மக்கள் தொகை புறக்கணிக்க முடியாத எண்ணிக்கையில் விரைவில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

  5. அதிகரிக்கும் பதற்றம்

    போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் போட்டிக்களத்தின் முக்கிய மாகாணங்களாக கருதப்படும் மாகாணங்களில் வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    போர்ட்லாண்டு, ஓரிகன் ஆகிய பகுதிகளில், டிரம்புக்கு எதிராக நடைபெற்ற `ஒவ்வொரு ஓட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்` போராட்டத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அங்கு சிலர் கூட்டத்திலிருந்து விலகி, சில கடைகளின் ஜன்னல்களை உடைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு கலவரம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல மினியாபோலிஸில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 200 போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் டிரம்பிற்கு எதிராகவும், வாக்கை நிறுத்துமாறு டிரம்ப் கூறியதற்கு எதிராகவும் போராடினார்கள் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அதேபோல நியூயார்க், ஃபிலடெல்ஃபியா மற்றும் சிகாகோவிலும் போராட்டங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ஃபீனிக்ஸ் மற்றும் அரிசோனாவில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான சிறியதொரு போராட்டமும் நடைபெற்றது. டெட்ராய்டில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஜன்னலில் இருந்து வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.

  6. தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரம்
  7. பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி தொடரும்

    பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் என அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    டிரம்பின் பிரசாரக் குழு அங்கு நடைபெறும் வாக்கு எண்ணும் பணியை நிறுத்த கோரினர்.

    மேலும் ஜனநாயகக் கட்சியினர், பென்சில்வேனியாவில், வாக்குகளை மாற்ற முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

    இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆளுநர் பென்சில்வேனியாவில் பதிவாகிய அத்தனை வாக்குகளும் எண்ணப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, பென்சில்வேனியாவில் டிரம்ப் முன்னிலை

    பென்சில்வேனியாவில் டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜோ பைடனைக் காட்டிலும் டிரம்ப் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 414 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். புதன்கிழமையன்று டிரம்ப் 3 லட்சத்து 79 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    பென்சில்வேனியாவை பொறுத்தவரை 20 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்த மாகாணத்தில் தொடர்ந்து ஆறு முறை ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  9. "எந்த வெளிநாட்டு சக்தியின் தலையீடும் இல்லை"

    எந்த வெளிநாட்டு சக்தியும் அமெரிக்காவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் செய்ததாக அமெரிக்க அரசுக்கு எந்த ஆதாரமும் கிட்டவில்லை என அமெரிக்க உள்துறையின் சைபர் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    “எந்த அந்நிய சக்தியாலும், அமெரிக்கர்களை வாக்கு செலுத்தாமல் தடுக்கவோ அல்லது அவர்களின் வாக்குகளை மாற்றவோ இயலாது, ”எனத் தனது அறிக்கையில் கிறிஸ்டோஃபர் க்ரெப்ஸ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக அமெரிக்க உள்துறை முகமைகள் தெரிவித்திருந்தன.

    “எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளும் வாக்கு எண்ணிக்கையில் தலையிடுவதையோ அல்லது முடிவுகளில் தலையிடுவதையோ தடுக்க நாங்கள் விழிப்புடன் உள்ளோம்,”

    “அமெரிக்க மக்கள் தொடர்ந்து வரும் நாட்களிலும் அமைதி காக்க வேண்டும்,” எனவும் கிறிஸ்டோஃபர் க்ரெப்ஸ் தெரிவித்துள்ளார்.

  10. பைடனின் வலைத்தளம்

    பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    பொதுவாக அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் பதவி மாற்றத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

    தற்போது வரை வெற்றியாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுமே தாங்கள் வெற்றியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தற்போது ஜோ பைடன் தனது பதவி மாற்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    அதில், “பெருந்தொற்றிலிருந்து பொருளாதார மந்தநிலை மற்றும் இன அநீதி என இந்த நாடு பல தீவிரமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பதவிமாற்ற தயாரிப்புக் குழு பைடன் மற்றும் ஹாரிஸ் பதவியேற்ற முதல் நாளில் இருந்து தீவிரமாக செயல்பட்டு பணிகளை விரைவில் மேற்கொள்ளும்,” என அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதன்கிழமையன்று, தனது முதல் நாள் பணியில், அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும் என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பைடன்.

    அமெரிக்கா புதன்கிழமையன்று, அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

  11. தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரம்
  12. ஃபிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கை தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியா நகரில் வாக்கு எண்ணிக்கை இடைநிறுத்தப்படாமல் தொடர வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனின் ஆதரவாளர்கள்.

    பிபிசியின் ஹன்னா, லாங் ஹிக்கின்ஸ், ஷனான் யூ ஆகியோர் அங்கு களத்தில் உள்ள போராட்டக்குழுவினர் பேசினார்கள்.

    அப்போது, வாக்கு எண்ணிக்கை ஜோ பைடனுக்கே சாதகமாக உள்ளது. இங்கு சட்ட நடைமுறைகளை காரணம் காட்டி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கூடாது. ஏற்கெனவே ஜோ பைடனுக்கு சாதகமாக வாக்குகளின் முடிவு வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.

    பெருமளவில் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

  13. வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் முயற்சி அற்பத்தனமான செயல் - மிஷிகன் தேர்தல் அதிகாரி

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    மிஷகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த மேற்கொள்ளப்படும் அதிபர் டிரம்ப் பிரசாரக்குழுவின் சட்டப்பூர்வ முயற்சி அற்பத்தனமான செயல் என்று அந்த மாகாண தலைமை தேர்தல் அதிகாரி சாடியுள்ளார்.

    வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் சரியான முறையில் கணக்கிடப்பட்டுள்ளதாக ஜோஸ்லின் பென்சன் என்ற மாகாண செயலாளர் தெரிவித்தார்.

    2016ஆம் ஆண்டில் மிஷிகன் மாகாணத்தில் 10,700 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில், அங்கு தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, டிரம்பின் தேர்தல் பிரசாரக்குழு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.

    ஜோர்ஜா, விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் இதேபோல சட்ட நடவடிக்கையை டிரம்பின் பிரசாரக்குழு முன்னெடுத்துள்ளது.

  14. பென்சில்வேனியாவில் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டம்

    பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியா நகரில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையத்தின் முன்பாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சிலர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அங்கு லட்சக்கணக்கில் தபால் வாக்குகள் வந்துள்ளதால் அவற்றை எண்ணி முடிக்க சில நாட்களாகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த வாக்குகள் அனைத்தையும் எண்ணி முடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் கொடுத்தார்கள்.

    டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்காலம் தொடர்பான அச்சங்களை வெளியிட்டு அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பேசி வருகிறார்கள்.

    முன்னதாக, அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்பின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை சேகரிக்க செய்தியாளர்கள் வரத்தொடங்கியபோது அவர்களை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எரிக் டிரம்ப் பேசுவதற்கு ஏதுமில்லை. எங்களிடம் வந்து பேசுங்கள் என்று அவர்கள் கேரோ செய்தனர்.

    இதனால் அந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது.

  15. வெள்ளை மாளிகைக்கு செல்ல போதிய இடங்கள் உள்ளன - பைடன்

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க அதிபராக தேர்வு பெற ஜனநாயக கட்சிக்கு போதிய இடங்கள் உள்ளதாக அதன் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அவர் "வெற்றி பெற்று விட்டேன்" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    மிஷிகனில் பைடனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. அதே சமயம், விஸ்கான்சினில் அவருக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

    பென்சில்வேனியாவில் இதுவரை முடிவுகள் வெளியாகாதபோதும், அங்கு நிலைமை சாதகமாக இருக்கும் என்று பைடன் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, மிஷிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகிய மாகாணங்களில் தேர்தல் முடிவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை டிரம்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

    தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அவை மோசடியாக நடந்தவை என்றும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரங்களை இன்னும் வெளியிடவில்லை. மேலும், பரவலாக தேர்தல் மோசடி நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாக அமெரிக்கா முழுவதும் நிலைமை அமைதியாகவே இருக்கிறது. ஆனால், டெட்ராய்ட் பகுதியில் வாக்கு எண்ணிக்கை பகுதியில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவர்கள் அந்த மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று களத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் லெபோ டிசேக்கோ கூறுகிறார்.

  16. முக்கிய மாகாணங்களில் நிலை என்ன?

    அரிசோனா:பொதுவாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் மாகாணம்.பைடன் தற்போது 86 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சில அமெரிக்க ஊடகங்கள் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் கணிக்கின்றன. இருப்பினும் பிபிசி இதனை உறுதிப்படுத்தவில்லை.

    ஜார்ஜியா: இதுவும் குடியரசுக் கட்சி ஆதரவு மாகாணமாகும். ஆனால் இந்த வருடம் இருகட்சிகளுக்கும் பெரும் போட்டி நிலவுகிறது. தற்சமயம் சிறிய வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

    வடக்குகரோலினா: போட்டிக் களத்தில் இதுவும் ஒரு முக்கிய மாகாணம் ஆகும். 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.1% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.பைடன்48.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    நேவாடா:பைடன் எதிர்பார்த்ததைவிட இங்கு அதிக போட்டியை சந்தித்து வருகிறார். நூலிழையில் அங்கு முன்னிலையில் இருக்கிறார்.

    விஸ்கான்ஸின்: மேற்கு பகுதியின் மத்தியில் இருக்கும் முக்கிய மாகணமான இது, இரு தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய நிலையில், 2016 ஆண்டு டிரம்பை தேர்வு செய்தது. தற்போது அங்கு அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், பைடன் குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இருப்பின் டிரம்ப் தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என ஏற்கனவே கோரியுள்ளனர்.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, மிஷிகனில் பைடன் வெற்றி பெறுவார் என கணிப்பு

    மிஷிகனில் பைடன் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

    16 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்ட அந்த மாகாணம் முக்கிய போட்டிக் களமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு டிரம்ப் வெறும் 10,704 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதுதான் அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

  18. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஏன் இன்னும் தெரியவில்லை?

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. அமெரிக்கத் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும். இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏன் இப்படி?

    தேர்தல் நாளன்று இரவே முடிவுகள் தெரியாமல் போவது எப்போதும் சாத்தியம்தான்.

    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். எனவே, எல்லா வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

  19. குறைந்த வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் ஆக முடியும்- எப்படி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரம்