உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகெங்கும் 3 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.
இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிக மெல்லியதாக இருக்கும் என்றும், மாஸ்க் மூலம் மூச்சு விடுவதன் மூலம் அவர்களின் இதயம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் அந்த மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மாஸ்க் அணியக்கூடாது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையமும் கூறியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 இருந்தது, இதில் 12 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 34 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு மது வாங்க வருபவர்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
”புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதோ என்ற ஐயம் இருப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி, இந்நோய்த் தொற்று பாதிப்பில் தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்," என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், மதுக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கருதிக் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இதனிடையே, புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு, நேற்று முதல் அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து இந்துக் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிகளில்தான் உள்ள 108 இந்து கோவில்களுக்கு முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்த அரசு, உடனடியாக கோவில்களைத் திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இந்து ஆலயங்களை திறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் முன்பாக தோப்புகரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த போராட்டத்தில் 4 பேர் மட்டுமே பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் 4 பேர் மட்டும் கலந்து கொண்டனர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோப்புக்கரணம் போடும்போது மதுக்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் திறக்கும் தமிழக அரசு கோவில்களை திறக்க மறுப்பது ஏன் என்று முழக்கங்களை எழுப்பினர்.
ராகுல் காந்தி இன்று பேசிய சில முக்கிய தகவல்கள்
நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்தில் ’இரண்டாவது உச்சநிலையை’ நாடுகள் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான், ”உலகம் வைரஸ் கட்டத்தின் இடைப்பட்ட பகுதியில்” உள்ளது என்று தெரிவித்தார்.
”கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க நாடுகள் கவனமாக இருக்க வேண்டும்”
”கொரோனா தொற்று இறங்குமுகமாக இருப்பதால் முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்,”
எல்லை தொடர்பான பிரச்சனை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக பேச வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
”எல்லைகள் குறித்து விரிவாகவும், என்ன நடந்தது எப்படி நடந்தது, என்பதை அரசு வெளிப்படையாக கூற வேண்டும். ஏனென்றால் தற்போதுவரை எந்த தெளிவும் இல்லை. நேபாளத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது, லடாக்கில் என்ன நடந்தது, எப்படி நடந்தது..என்பது குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும்,” என அவர் இன்று நடைபெற்ற இணைய வழி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகதான் இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் ”ஊரடங்கின் நோக்கம் தோல்வியுற்றது. தோல்வியடைந்த ஊரடங்கின் விளைவை இந்தியா சந்தித்து கொண்டிருக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
சூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படலாம் என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொற்று தொடர்ந்து அதிகரித்தால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என சாஃபர் மிர்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தியது. தற்போது அந்நாட்டில் 57,000 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை இருக்கிறது. அங்கு இதுவரை 35,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்க கூடிய பகுதிகளில் ஒன்றான தாராவியில் மட்டும் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.
தாராவியில் குடியிருப்புகள் மட்டுமின்றி சிறிய மற்றும் பெரியளவிலான தொழிற்சாலைகளும் இருக்கின்றன. மிகவும் குறுகலான தெருக்களில் பெரும்பாலும் எவ்வித இடைவெளியும் இன்றி கட்டப்பட்டுள்ள வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
ஐந்து வயது சிறுவனான விஹான் ஷர்மா டெல்லியிலிருந்து பெங்களூவிற்கு தனியாக விமானத்தில் பயணம் செய்துள்ளான். கையில் ’ஸ்பெஷல் கேட்டகிரி’ என்ற பதாகையை ஏந்தியபடி வந்த சிறுவனை விமான நிலையத்தில் அவனது அம்மா வரவேற்றுள்ளார்.
‘ஸ்பெஷல் கேட்டகிரி’ என்றால் அந்த பயணம் முழுவதும் அவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று அர்த்தம்.
”டெல்லியிலிருந்து அவன் தனியாக பயணம் செய்துள்ளேன்,” என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற விஷானால் ஊரடங்கு கட்டுப்பாடால் திரும்பி வர இயலவில்லை.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.
செளதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள முடக்கநிலை உத்தரவு ஜூன் 21-ஆம் தேதி விலக்கி கொள்ளப்படவுள்ளது
ஆனால், புனித நகரான மெக்காவில் மட்டும் பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகை என்பதால் அண்மையில் செளதியில் நாள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், உள்நாட்டுக்குள் பயணம் செய்வது, மசூதிகளில் தொழுகை நடத்துவது, அரசு, தனியார் அலுவக பணிகளுக்கு செல்வது போன்றவற்றில் இருந்த தடை வரும் மே 31 முதல் விலக்கி கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு அதிகமான காலம் முடக்கப்பட்ட நாடு இன்று முழுமையாக திறக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நாடு முடக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் கடந்த வாரம் முழுமையாக திறக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு, கம்பஹா உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், கடும் கட்டுபாடுகளுக்கு மத்தியில் நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காத அனைவரையும் இன்று முதல் கைது செய்வதற்கான அதிகாரத்தை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் போலீஸாருக்கு வழங்கியுள்ளார்.
மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக கூறியிருந்தார்.
மேலும் பல மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகும் தொடர்ந்து மலேரியா சிகிச்சையில் வழங்கப்படும் இந்த மருந்துக்கு ஆதரவாக மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.
இந்த மருந்தால் இதயத்திற்கு பிரச்சனைகள் வரலாம் என பொது சுகாதார அதிகாரிகளும் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6535 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் இதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,45,380-ஆக உயர்ந்துள்ளது.
இதில் 80,722 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,490 பேர் இந்த நோய்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 4167 பேர் இந்த தொற்றால் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லியில் இருந்து சிவக்குமார் உலகநாதன் மற்றும் விஷ்ணுப்ரியா ராஜசேகர் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.