கொரோனா வைரஸ்: தமிழகம் - 776, சென்னை - 567 ; இதுவரை குணமடைந்தவர்கள் எவ்வளவு?
உலகெங்கும் கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,28,172 பேர் இறந்துள்ளனர்; பாதிக்கப்பட்ட 18,99,350 பேர் குணமடைந்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
சென்னை சிறுவனுக்கு கோவிட் அதி அழற்சி நோய்க்குறி
பெரியவர்களை ஒப்பிடும்போது, சிறியவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்று இதுவரை பொதுவாக நம்பப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்ட 8 வயது சென்னை சிறுவன் ஒருவனுக்கு அதி அழற்சி நோய்க்குறி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் ‘ஹைப்பர் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்’ (Hyper-inflammatory syndrome) என்று அழைக்கப்படும் இந்த நோய்க்குறி, கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட குழந்தை ஒன்றிடம் காணப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
கொரோனா ஊரடங்கு - செலவுக்கு பணம் இல்லாததால் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டி டாஸ்மாக் கடையில் கடந்த 16ம் தேதி திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன், ராமச்சந்திரன், சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் திருமயம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளனர்.
மதுக்கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஒன்பது தாள்களைக் கொடுத்து மது பாட்டிலை வாங்கியுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளர் சந்தேகம் அடைந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் நான்கு பேரையும் திருமயம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலிசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகளை அச்சிட்ட முக்கிய குற்றவாளியான நாகர்கோயிலை சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவரின் வீட்டில் இருந்து 65 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய ஒரு கம்ப்யூட்டர், ஒரு மடிக்கணினி, ஒரு பிரிண்டர் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கை விசாரணை செய்த போலிஸ் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில் சுரேஷ், மணிகண்டன், ராமச்சந்திரன், சந்தோஷ்குமார் ஆகிய நால்வரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்தது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். ஊரடங்கு காரணமாக செலவுக்கு பணம் இல்லாததால் கள்ளநோட்டு அச்சடித்தனர் என்று தெரிவித்தார்.
“தென்னாப்பிரிக்காவில் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும்”
தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 40,000 பேர் கொரோனா வைரஸால் இறக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழுவால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் அமலில் உள்ள கடுமையான முடக்க நிலை கட்டுப்பாடுகள், சமீபத்தில் அந்த நாட்டின் அதிபர் சிறில் ராமபோசா அறிவித்தபடி, வரும் ஜூன் மாதம் முதல் தளர்த்தப்படும் என்றும் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் புகையிலை மற்றும் ஆல்கஹால் விற்பனை மீதான தடையை உள்ளடக்கிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது முதல் அங்கு வைரஸின் பரவல் குறைந்து காணப்படுகிறது.
5.7 கோடி மக்கள் வாழும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 18,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சனைக்கு சீர்திருத்தங்கள் தீர்வாகுமா?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள்
வியாழன் காலை நிலவரப்படி உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள்
அமெரிக்கா - 15,51,668 பேர்
ரஷ்யா - 3,08,705 பேர்
பிரேசில் - 2,91,579 பேர்
பிரிட்டன் - 2,49,619
ஸ்பெயின் - 2,32,555 பேர்
இத்தாலி - 2,27,364 பேர்
தரவுகள்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
உலகளவில் ஒரே நாளில் அதிகபட்ச உயர்வு
உலகளவில் மேலும் 1,06,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று, புதன்கிழமை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.
செவ்வாயில் இருந்து புதனன்று ஏற்பட்ட எண்ணிக்கை அதிகரிப்புதான் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பாகும்.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளில் சுமார் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன.
வியாழன் காலை நிலவரப்படி உலகெங்கும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ்
நேற்று நடந்தவை - சில முக்கியச் செய்திகள்
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி தலத்தில் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை குறித்து சுதந்திரமாக விசாரணை செய்ய உலக சுகாதார நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே 25 முதல் தொடங்குகிறது என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது. சிங்கப்பூரில் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்தது.
கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விக்னேஷ் மற்றும் சாய்ராம் ஜெயராமன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.