You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகம் - 776, சென்னை - 567 ; இதுவரை குணமடைந்தவர்கள் எவ்வளவு?

உலகெங்கும் கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,28,172 பேர் இறந்துள்ளனர்; பாதிக்கப்பட்ட 18,99,350 பேர் குணமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கேரளாவில் மீண்டும் தொடங்கியது லாட்டரி விற்பனை

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட் விற்பனை கேராளாவில் மீண்டும் தொடங்கியுள்ளது.

    எனினும், மக்கள் யாரும் இன்னும் வெளியில் வரவில்லை என்பதால், விற்பனை வீழ்ந்திருப்பதாக லாட்டரி சீட் விற்கும் ரமேசன் தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, முறைப்படுத்தப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலை

    இந்தியாவில் மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், விமான டிக்கெட்டுகள் அதிகமாக இருக்கும் என்ற பேச்சு இருந்தது.

    இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங், விமான டிக்கெட்டுகளின் விலை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    "விமான டிக்கெட்டுகளுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக டெல்லியில் இருந்து மும்பைக்கு குறைந்தபட்ச விலை 3,500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் 40 சதவீத விமான டிக்கெட்டுகள் இரண்டிற்கும் நடுவில், அதாவது அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலைக்கும் நடுவில் விற்கப்பட வேண்டும். உதாரணமாக, 3,500 ரூபாய்கும், 10,000ரூபாய்கும் இடையிலான விலை 6,700 ரூபாயாகும். எனவே 40 சதவீத விமான டிக்கெட்டுகள் 6,700 ரூபாய்கு விற்கப்பட வேண்டும். இதன் மூலம் டிக்கெட்டுகளின் விலை மிகவும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தலாம் என்று சிவில் விமான போக்குவரத்து துறையின் செயலாளர் தெரிவித்தார்.

    விமான டிக்கெட்டுகளின் விலையை முறைப்படுத்த ஏழு பிரிவுகளாக விமான வழித்தடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம், 90 -120 நிமிடங்களுக்குள்ளான பயண நேரம் போன்று பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப விமான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்படும்

    • 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம்
    • 40 - 60 நிமிடங்கள் பயண நேரம்
    • 60 - 90 நிமிடங்கள் பயண நேரம்
    • 90 - 120 நிமிடங்கள் பயண நேரம்
    • 120 - 150 நிமிடங்கள் பயண நேரம்
    • 150 - 180 நிமிடங்கள் பயண நேரம்
    • 180 - 210 நிமிடங்கள் பயண நேரம்

    விமான சேவைகள் எப்போது முழுமையாக இயங்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.

  3. 'மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்'

    ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து மற்றொரு மெட்ரோ நகரத்திற்கு மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 100 விமானங்கள் சாதாரணமாக இயக்கப்படும் என்றால், தற்போது 33 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்.

    டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா மற்றும் ஹைத்தராபாத் ஆகிய 6 நகரங்கள் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் ஆகும்.

    அதே போல மெட்ரோ நகரத்தில் இருந்து மற்ற நகரங்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்.

    விமான டிக்கெட்டுகளின் விலையை முறைபடுத்த விமான வழித்தடங்கள் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, மீண்டும் தொடங்கவுள்ள விமானப் போக்குவரத்து சேவைகள் - முக்கிய தகவல்கள்

    ஒரு மெட்ரோ நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

    நேரில் சென்று செக் இன் செய்ய முடியாது என்றும், இணையத்தில் மட்டுமே செக் இன் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    விமான டிக்கெட்டுகளின் விலையும் ஒழுங்குமுறைபடுத்தப்படும் என்று ஹர்தீப் சிங் கூறினார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, '20,000த்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்'

    வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 20,000த்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    வந்தே பாரத் திட்டம் என்பது வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் கிடையாது என்றும், அங்கு சிக்கித்தவிக்கும், கட்டாயம் ஊர் திரும்ப வேண்டும் என்ற நிலையில் இருந்த இந்தியர்களுக்குதான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தப்பிலேயே சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி இதனை தெரிவித்தார்.

  6. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்

    முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட்-19 நோய்த்தொற்று எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

  7. 'தற்போதைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை'

    தற்போதைக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், அரசாங்கங்கள் அதை நம்பி இருக்க வேண்டாம் என முக்கிய அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார் என ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், கொரோனா தொற்றாளர்களை கண்டறிவது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது, அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானி வில்லியம் ஹேஸல்டைன் கூறியுள்ளார்.

    மேலும், மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.

    தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றாலும், அதனை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

  8. இந்தியாவில் மீண்டும் ரயில், விமானப் போக்குவரத்து

    இந்தியாவில் ரயில் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. அவை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    இந்திய ரயில்வே அமைச்சகம், விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை தொகுத்தளிக்கிறோம்.

  9. இன்று இதுவரை நடந்தது என்ன?

    கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று இதுவரை உலகம் முழுவதுவதிலிருந்து வெளிவந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு.

    • உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுத்தளம் தெரிவிக்கிறது.
    • உலகளவில் மேலும் 1,06,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று, புதன்கிழமை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். செவ்வாயில் இருந்து புதனன்று ஏற்பட்ட எண்ணிக்கை அதிகரிப்புதான் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பாகும்.
    • ஹைட்ராக்ஸிகுளோரோகுயினோ அல்லது குளோரோகுயினோ இந்த கட்டத்தில் கோவிட்- 19 சிகிச்சையில் இன்னும் பலனுள்ளதாக இருக்கிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால குழுவின் இயக்குநர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.
    • தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 40,000 பேர் கொரோனா வைரஸால் இறக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழுவால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
    • இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 1,12,359 பேர் இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எண்ணிக்கையைவிட இன்று கூடுதலாக 5,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 132 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சின்னத் திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உள்ளரங்கப் படப்பிடிப்பை மட்டுமே நடத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
  10. சிங்கப்பூர்: ஒருநாள் விடுப்பையும் முடக்கிய கொரோனா

    வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், நாட்டின் முடக்கநிலை பகுதியளவு தளர்த்தப்பட்டவுள்ள ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகும், விடுமுறை நாளில் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் பெரும்பாலும் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளோடுதான் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு பெறும் உரிமையுண்டு.

    அவர்கள் விடுப்பெடுக்க விரும்பவில்லை என்றால் அதற்கு ஈடாக அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். நிறையப் பேருக்கு அந்த ஒரு நாள் தங்கள் நண்பர்களை சந்திக்கும் மற்றும் அவர்களுக்கான பொருட்களை வாங்குவதற்கான நாளாகவும் உள்ளது.

  11. சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவாகுமா?

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் முதலீடு செய்து வந்த பல நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்து வருகின்றன. இது இந்தியாவுக்கு சாத்தியமாக அமையுமா?

  12. உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

    சந்தையிலிருந்து வாங்கி வரும் உணவுப் பொருட்களின் மீதும் அவற்றின் பொட்டலங்கள் மீதும் கொரோனா வைரஸ் இருக்கும் என எண்ணி அவற்றை சுத்தப்படுத்தத் தேவையில்லை.

    இதுவரை உணவுப் பொருட்களால் கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

    கொரோனா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து மட்டுமே பரவும். உணவுப் பொருட்களின் மூலம் பரவாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

  13. சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு

    கொரோனா வைரஸ் தொற்று பரவழைத்த தொடர்ந்து உருவாக்கப்பட்ட, இந்திய பிரதமரின் PM CARES நிதியத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலம் சிவமோகாவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மே 11 அன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அந்தப் பதிவு இடப்பட்டிருந்தது.

    சமூக ஊடகக் கணக்கை கையாள்பவர் என்று அவர் முதல் தகவல் அறியாகியில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  14. சென்னை மாநகராட்சி நிலவரம்

    சென்னையில் இதுவரை உண்டாகியுள்ள கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 8228 என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இவர்களில் 59 பேர் இறந்துள்ளனர்; 2,826 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,300 பேர்.

  15. 'ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பலன் தரும் என நிரூபிக்கப்படவில்லை'

    கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பத்தரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு சுமார் 93,500 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயினோ அல்லது குளோரோகுயினோ இந்த கட்டத்தில் கோவிட்- 19 சிகிச்சையில் இன்னும் பலனுள்ளதாக இருக்கிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால குழுவின் இயக்குநர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.

    அண்மையில், கொரோனா வைரஸிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள தான் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  16. சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவங்க தமிழக அரசு அனுமதி

    கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சின்னத் திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உள்ளரங்கப் படப்பிடிப்பை மட்டுமேநடத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்த பிற இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அரங்குகளுக்குள்தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாதுஎன்றும் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தலாம்.

    இந்தப் படப்பிடிப்புகளைப் பார்க்க பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படும் வீடு, கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

    நடிகர் - நடிகைகள் தவிர்த்த பிறர் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பின் இடைவெளியில், நடிகர் - நடிகைகளும் முகக் கவசம் அணிய வேண்டும். சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைவு உள்ளவர்களை படப்பிடிப்புத் தளத்திற்குள்அனுமதிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

    படப்பிடிப்பில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த வேண்டும்.

    விதிமுறைகள் பின்பற்றப்படுவதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, 50 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

    உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்திய / இலங்கை நேரப்படி வியாழன் காலை 11.02 மணிக்கு கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,00,038 ஆக உள்ளது.

    இவர்களில் 3,28,172 பேர் இறந்துள்ளனர்; 18,99,350 பேர் குணமடைந்துள்ளனர்.

    ஆனால், வல்லுநர்கள் இன்னுமொரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, பல நாடுகளில் குறைந்தளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை தரவுகளில் ஒரு தெளிவின்மை இருக்கிறது என்றும், நிதர்சனத்தில் உலகளவில் இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

  18. கொரோனாவால் 'டேட்டிங் செய்யப் பணமில்லை'

    டேட்டிங் செயலியான டிண்டர் பயன்படுத்துவதில் இந்த கொரோனா வைரஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பிபிசியிடம் டிண்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

    மக்கள் டிண்டரில் செலவிடும் நேரம் அதிகமானாலும், முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவினால் டிண்டர் பயன்படுத்துவதற்காக பணம் செலவிடுவது குறைந்துள்ளது.

    2012ல் டிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 340 மில்லியன் முறை டிண்டர் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ''கோல்டு'' சர்வீஸ் பயன்படுத்தும் 6 மில்லியன் பேரிடமிருந்து மட்டுமே வருவாய் கிடைக்கும்.

  19. பாகிஸ்தானில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

    பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதுவரை அந்நாட்டில் 47000 பேருக்கு அதிகமானோர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  20. இந்திய நிலவரம் என்ன?

    இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1,12,359 பேர் இந்தியா முழுவதும் கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய எண்ணிக்கையைவிட இன்று கூடுதலாக 5,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 132 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435 ஆக உள்ளது.

    இதுவரை 45,299 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று உண்டானபின் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    தற்போது 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.