You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகம் - 536, சென்னை- 364; அண்மைய செய்திகள் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 47 லட்சத்து 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ‘கொரோனா வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு இது நேரமில்லை’ - சீனா

    இன்று நடக்கவுள்ள உலக சுகாதார அமைப்பின் முக்கிய கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின் பிங் உரையாற்றவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தோன்றியது மற்றும் பரவியது தொடர்பான ஆராய்ச்சி நடத்துவதற்கு இது நேரமில்லை. மிகவும் முன்கூட்டி இந்த முயற்சி செய்யப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலக அளவில் 3 லட்சம் பேருக்கும் மேல் இந்த வைரஸால் தற்போதுவரை உயிரிழந்த நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆரம்பத்தில் பல தகவல்களை சீனா மறைத்ததாக சில தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டது.

    கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என இன்று நடக்க உள்ள உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவரவுள்ளன.

    இதுவரை இந்த தீர்மானத்திற்கு 116 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மொத்தம் 194 உறுப்பினர்கள் உள்ள இந்த அவையில், இத்தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.

    சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான ஜாவ் லிஜான் கூறுகையில், கோவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கம் இன்னமும் முடியவில்லை என பல நாடுகளும் எண்ணிவரும் சூழலில், தற்போது இந்த விசாரணையை நடத்துவது மிகவும் முன்கூட்டியே நடத்துவது போலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

  2. புதுவையில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி

    புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க புதுச்சேரி அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பது குறித்தும், இதர கடைகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    "மத்திய அரசு கடைகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், புதுச்சேரியில் பல்வேறு தளர்வுகள் மூலமாக மே 31-ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுபானக் கடை, சாராயக்கடை, கள்ளுக்கடை என அனைத்து வகையான கடைகளும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதித்துள்ளோம். இதில், மதுபானம் அமர்ந்து அருந்தும் வசதிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை," எனத் தெரிவித்துள்ளார் நமச்சிவாயம்.

  3. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தி வந்த இருவர் கைது

    தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இதுவரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

    இதனால், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அருகே உள்ள தமிழக எல்லைக்குச் சென்று மது வாங்க முயற்சி செய்வதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வந்து சட்ட விரோதமாக மதுபானம் விற்க வருகின்றனர்.

    மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுபாட்டில்களை புதுச்சேரிக்குக் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் விதமாகப் புதுச்சேரி எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் எல்லைப் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அரிசிக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து, சட்டவிரோதமாகப் புதுச்சேரிக்குள் கொண்டுவர முயன்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர்.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்தனர்.

    முன்னதாக, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குச் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  4. கொரோனாவை நியூசிலாந்து கட்டுப்படுத்தியது எப்படி?

    கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் உலகின் பல நாடுகள் திணறிவரும் நிலையில், நியூசிலாந்து அதை எப்படி கட்டுப்படுத்தியது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

  5. ரஷ்யா: 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கொரோனா

    ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290,000 ஆக உயர்ந்துள்ளது.

    அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 91 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை 2,722 பேர் மரணம் அடைந்துள்ளனர்

  6. இயல்பு நிலைக்கு திரும்பும் ஆசிய நகரங்கள்

    ஆசியாவில் சில நாடுகள் சமூக முடக்கத்தை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், அந்த நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன.

    கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள வியட்நாம், அத்தியாவசியமற்ற தொழில்களான மதுபான கூடங்கள், திரையரங்குகள் மற்றும் ஸ்பாக்களை திறந்துள்ளது.

    வியட்நாம் தலைநகர் ஹனோயில், பியர் கார்னர் என அழைக்கப்படும் டா ஹேய்ன் வீதி வழக்கம் போல காட்சியளித்தது.

    தாய்லாந்து இந்த மாத தொடக்கத்தில் மார்க்கெட்களை திறந்த நிலையில், கடந்த வாரம் வணிக வளாகங்களையும் திறந்துள்ளது.

    மியான்மரின் ரங்கூன் நகரிலும், பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் உள்ள சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    இரு நாடுகளிலும் தொற்று அதிகரித்தபோதிலும், இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் சீன அதிபர் உரையாற்ற உள்ளார்

    உலக சுகாதார அமைப்பின் 73வது உலக சுகாதார கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், இக்கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உரையாற்ற உள்ளார்.

    பொது முடக்கம் காரணமாக காணொளி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் ஷி ஜின்பிங் பேசுகிறார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவில் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு சீனா முன்பே தெரிவிக்கவில்லை என உலக நாடுகள் சீனா மீது விமர்சனங்களை வைத்துள்ளன.

  8. மகாராஷ்டிரா: 1273 போலிஸாருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் 1273 போலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 131 பேர் உயரதிகாரிகள். 291 போலிஸார் குணமடைந்துள்ள நிலையில், 11 பேர் உயிழந்துள்ளனர் என மகாராஷ்டிரா காவல்துறை கூறியுள்ளது.

  9. கொரோனா: சுயாதீன விசாரணைக்கு பெருகும் ஆதரவு

    கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்த சுயாதீனவிசாரணை நடத்தப்பட வேண்டும் என இன்று நடக்க உள்ள உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா தீர்மானம் கொண்டுவரவுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன என்றும், இத்தீர்மானம் நிறைவேற வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

    வைரஸ் மக்களுக்கு எப்படி பரவியது என்பதை கண்டறிய வேண்டும் என இத்தீர்மானம் கோரியுள்ளது.

  10. மந்தநிலையில் ஜப்பான் பொருளாதாரம்

    கொரோனா வைரஸ் ஜப்பானில் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் 2015க்கு பிறகு முதல் முறையாக பொருளாதார மந்தநிலையை ஜப்பான் சந்தித்துள்ளது.

    எதிர்காலத்திலும் பொருளாதாரம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    முந்தைய காலாண்டு உடன் ஒப்பிடும் போது, இந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% குறைந்துள்ளது.

  11. இந்தியா: ஒரே நாளில் 5242 பேருக்கு தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 5242 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் இறந்துள்ளனர்.

    தற்போதுவரை மொத்தம் 96169 பேருக்கு தொற்று உள்ளது. 3029 பேர் இறந்துள்ளனர்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, அண்மைய நிலவரம்

    இந்தியாவில் தற்போது 56,316 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுவரை 3029 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. உலக சுகாதார கூட்டம் இன்று நடக்க உள்ளது

    உலக சுகாதார அமைப்பின் 73 வது உலக சுகாதார கூட்டம் இன்று (மே18) தொடங்குகிறது. இக்கூட்டம் ஆன்லைனில் நடக்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பற்றி விவாதிப்பதே இந்த ஆண்டு கூட்டத்தின் நோக்கமாக உள்ளது.

    சுகாதாரம் மட்டுமல்ல அரசியலும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    உலக சுகாதார கூட்டத்தில் தைவான் ஒரு பார்வையாளராக இடம்பெற செய்வது பற்றி உலக சுகாதார அமைப்பு விவாதிக்க உள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்றை தைவான் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், தையான் தற்போது உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இல்லை.

    தைவான் தன்னை ஒரு தனி நாடாக பார்க்கிறது. ஆனால், சீனா இதை தன்னிடம் இருந்து பிரிந்துபோன மாகாணமாக பார்க்கிறது.

  14. "அமெரிக்க பொருளாதாரம் 30 சதவீதம் வரை சரிவை சந்திக்கும்"

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2021ஆம் ஆண்டுவரை மீட்க இயலாது என அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் பவல் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார்.

    இந்த வாரத்தின் தொடக்கத்தில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களையும், மக்களுக்கான நிவாரணத் திட்டங்களையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    மார்ச் மாதத்தில் தொடங்கி இதுவரை 36 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாதவர்களுக்கான சலுகைகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.

    என்ன சொன்னார் பவல்?

    "இது ஒரு கடினமான காலம், மக்கள் அனுபவித்து கொண்டிருக்கும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது,"

    "பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும்,"

    "கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக தாக்கவில்லை என்றால் இந்த வருடத்தின் பிற்பாதியில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள தொடங்கும்." என அவர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

  15. அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது- டிரம்ப்

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இருந்தாலும் சில இடங்களில் இன்னும் கொரோனா பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி அமெரிக்காவில் 1,486,376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 89,549 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. உலகிலே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.

  16. இன்று முடக்கத்தைத் தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்

    இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இன்று முதல் பொது முடக்கத்தைத் தளர்த்த உள்ளன.

    கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த இத்தாலியில், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.

    மேட்ரிட் மற்றும் பார்சிலோனாவை தவிர மற்ற நகரங்களில் பொது முடக்கத்தை ஸ்பெயின் தளர்த்துகிறது. 10 நபர்கள் கொண்ட குழு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றியும் சந்தித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐரோப்பா முழுவதும் கொரோனா மரணங்கள் குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நேற்றுதான் அங்கு குறைவான மரணம் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த மார்ச் 27-ம் தேதி 900க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  17. நேற்றைய முக்கிய நிகழ்வுகள்

    • இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
    • இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலையை நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • தமிழகத்தில் நேற்று639 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.அதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224ஆக அதிகரித்தது.
    • இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • கத்தாரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த விதியை மீறுபவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சிங்கப்பூரில் புதிதாக 682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,038ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
  18. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் நந்தக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.