You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியா முழுவதும் மே 31 வரை முடக்க நிலை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 46 லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சிங்கப்பூர்: 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

    சிங்கப்பூரில் புதிதாக 682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,038ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, 67 வயது சிங்கப்பூர் முதியவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்வேறுகாரணங்களால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 1,094 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,342 ஆக உள்ளது.

  2. கோவிட்-19: இலங்கையின் நிலவரம் என்ன?

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை எட்டியுள்ளது.

    சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் பிரகாரம், இலங்கையில் 43,137 பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இலங்கையில் கொரோனா தொற்றினால் 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 431 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    520 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 106 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  3. இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? தடை நீட்டிப்பு?

    இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  4. மலேசியாவில் 9 பேர் பிளாஸ்மா தானம் அளித்தனர்

    மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,894ஆகஅதிகரித்துள்ளது.

    நேற்று 59 பேர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 113ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த 9 பேர் பிளாஸ்மா தானம் அளித்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 500 மில்லி லிட்டர் ரத்தம் பெறப்பட்டதாகவும், அது பின்னர் 22 உறைகளில் அடைக்கப்பட்டு நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

    இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 நோயாளிகளுக்காக பரிந்துரைந்துள்ள மருந்துகள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், நோய் பாதிப்பின் நான்கு மற்றும் ஐந்தாம் கட்டங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே அம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

    "நுரையீரல் வீக்கம் காரணமாக பிராணவாயு தேவைப்படுவதை நான்காம் கட்டம் என்றும், நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதை ஐந்தாம் கட்டம் என்றும் குறிப்பிடுகிறோம். கடந்த இரு வாரங்களாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் சிக்கல் ஏதும் எழவில்லை," என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

  5. ஜெர்மனியில் தொடங்கிய பிரபல கால்பந்து தொடர்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன.

    இந்த நிலையில், ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்து வருவதை அடுத்து ஜெர்மனியில் முதல் முறையாக பிரபல கால்பந்து தொடரான புன்டஸ்லிகாவின் லீக் போட்டிகள் தொடங்கி உள்ளன.

    பொதுவாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அதிரும் மைதானத்தில், ரசிகர்களே இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்குபெறும் வீரர்களுக்கு அடிக்கடி நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விடுதியில் இருந்து மைதானம் வரும் வரை கூட்டவிலக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

    தமிழகம் முழுவதும் இன்று 639 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 639 பேரையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224ஆக உயர்ந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நான்கு பேரையும் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

  7. இந்தியா முழுவதும் மே 31 வரை முடக்க நிலை நீட்டிப்பு

    இந்தியா முழுவதும் வரும் மே 31ஆம் தேதி வரை முடக்க நிலை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலையை நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  8. நிர்மலா சீதாராமன்: 5 நாட்களாக அறிவித்தது என்னென்ன?

    இந்தியப் பிரதமர் மோதி கடந்த மே 12ம் தேதி அன்று அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார தொகுப்புதவி திட்டம் குறித்த அறிவிப்புகளை இன்றுவரை தொடர்ந்து ஐந்து நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் வெளியிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில், ஐந்து நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை தேதி வாரியாக தொகுத்தளிக்கிறோம்.

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  9. “இலங்கையில் தொடர்ந்தும் அச்ச நிலைமை காணப்படுகிறது”

    இலங்கையில் நேற்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

    கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 23ஆம் தேதி வரை இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாளாந்தம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதனாலேயே இந்த ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சந்தர்ப்பத்திலேயே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது" என்று பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

    அதனாலேயே இலங்கையில் வார இறுதி நாளிலும், நாளாந்தம் இரவு முதல் அதிகாலை வரையும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

    மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமலில் இருந்தாலும், அத்தியாவசிய சேவைகளுக்காக அந்த பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

  10. ''முகக்கவசம் அணியுங்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவீர்கள்''

    கத்தாரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விதியை மீறுபருக்கு 55,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட கத்தாரில் 30,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மசூதிகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய கட்டுமான திட்டங்களை கத்தார் ஆராய்ந்து வருகிறது.

  11. ஸ்பெயினில் குறைந்துள்ள கொரோனா மரணங்கள்

    கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அங்கு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 87 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,650ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231,350ஆக அதிகரித்துள்ளது.

  12. பார்வையாளர்களே இல்லாமல் விளையாட்டு போட்டிகளா?

    கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு, மைதானத்தில் பார்வையாளர்களே இல்லாமல் தடகள போட்டிகள் நடக்கலாம் என்று உலக தடகள அமைப்பின் தலைவர் லார்ட் கோய் தெரிவித்துள்ளார்.

    மேலும், வரும் ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வருடாந்திர ‘டியமண்ட் லீக்’ தடகள போட்டி தொடரின் 11 போட்டிகள் மூடிய மைதானத்துக்குள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    “குறைந்தபட்ச நேரத்தில் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். தடகள போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு இதுவே வழி. ஆனால், இதை யாரும் நீண்டகால தீர்வாக கருதவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    தமிழகத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் மே 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  14. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர் சாய்ராம் ஜெயராமன் தொகுத்து வழங்குகிறார்.

    சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர

    • பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
    • பிபிசி தமிழ் ட்விட்டர்
    • பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
    • பிபிசி தமிழ் யு டியூப்
    • நாடு திரும்பும் இந்தியர்கள்

      அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 168 இந்தியர்கள் இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தனர்.

      மேலும், மாலத்தீவில் இருந்து 588 இந்தியர்களுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் கொச்சி வந்துள்ளது.

    • வுஹான் மக்கள் அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்ய முடியுமா?

    • மே 31 வரை சமூக முடக்கத்தை நீட்டித்து மகாராஷ்டிரா

      கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக, சமூக முடக்கத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

      இந்தியாவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

    • கொரோனாவுக்கு புகையிலை தடுப்பூசி?

      உலகின் மிகப்பெரிய கிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம், புகையிலை சார்ந்த கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதிக்க உள்ளதாகக் கூறியுள்ளது.

      புகையிலையிலிருந்து பெறப்படும் புரதங்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    • இத்தாலி: நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

      கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி மே 18-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகளைச் சற்று தளர்த்த உள்ளது.

      நாளை முதல் அங்கு சிகை அலங்கார நிலையங்கள், உணவகங்கள், மதுபான கூடங்கள் திறந்திருக்கும். மேலும் ஜூன் 3-ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணிகள் வரவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

      இத்தாலியில் 2லட்சத்து 24ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 31ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன,

    • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 40,000 கோடி

      கிராமப்புற பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்