மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 6,894ஆகஅதிகரித்துள்ளது.
நேற்று 59 பேர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,210 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 113ஆக அதிகரித்தது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த 9 பேர் பிளாஸ்மா தானம் அளித்திருப்பதாக
மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 500 மில்லி லிட்டர் ரத்தம் பெறப்பட்டதாகவும், அது பின்னர் 22 உறைகளில் அடைக்கப்பட்டு நாட்டில் உள்ள
மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்
தெரிவித்தார்.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 நோயாளிகளுக்காக பரிந்துரைந்துள்ள மருந்துகள்
சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், நோய் பாதிப்பின் நான்கு மற்றும் ஐந்தாம்
கட்டங்களில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே அம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
"நுரையீரல் வீக்கம் காரணமாக பிராணவாயு தேவைப்படுவதை நான்காம் கட்டம் என்றும், நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்காக
வருபவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதை ஐந்தாம் கட்டம் என்றும் குறிப்பிடுகிறோம். கடந்த இரு வாரங்களாக உலக சுகாதார நிறுவனம்
பரிந்துரைத்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் சிக்கல் ஏதும் எழவில்லை," என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.