கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் பலி, 526 பேர் பாதிப்பு

உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 12,83,929 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான திடீர் மரபணு மாற்றம்

    அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் நூற்றுக்கணக்கான திடீர் மரபணு மாற்றங்களை (mutation) அடையாளம் கண்டுள்ளனர்.

    ஆனால், கொரோனா வைரஸின் இந்த நூற்றுக்கும் அதிகமான திடீர் மரபணு மாற்றங்களுக்கும் அதன் பரவும் தன்மைக்கும், அது தடுப்பூசி கண்டறிவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதுவரை நிருவப்படவில்லை.

  2. ஆஃப்ரிக்க பலிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், இந்த பெருந்தொற்று நோயால் ஆஃப்ரிக்காவில் ஒரே ஆண்டில் சுமார் 1,90,000 பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அடுத்த சில ஆண்டுகளிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    “நோய்த்தொற்று பரவல் வெளிப்படையாக உணரமுடியாத வகையில் இருக்கும்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆஃப்ரிக்க பிராந்திய தலைவர் மட்ஷிடிசோ மோட்டி கூறுகிறார்.

    கொரோனா வைரஸின் நிலையற்ற மற்றும் மெதுவான பரவல் முறை ஆஃப்ரிக்காவை மற்ற பிராந்தியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஆஃப்ரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளான நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஐவோரி கோஸ்ட் உள்ளிட்டவை முடக்க நிலையை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

  3. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன்னர் நேற்றைய முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    • கோவிட்-19 பெருந்தொற்று என அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 9 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது.
    • இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில், 1.35 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விசாரணைகள் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியில் இருக்கக்கூடாது என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
    • இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என வைத்திய ராசாயண ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
    • கொரோனா வைரஸ் தடுப்பு முடக்கநிலைக்கு நடுவில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய அரசு தொடங்கியிருக்கிறது.
    • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 32 லட்சம் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரியுள்ளது தெரிய வந்துள்ளது.
    coronavirus

    பட மூலாதாரம், Getty Images

  4. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் சாய்ராம் ஜெயராமன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.