இன்று நடப்பது என்ன?
கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய செய்திகளை இன்றைய புதிய நேரலைப் பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
"எந்தெந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், உண்மையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குதான் அந்தந்த பகுதிகளின் உண்மையான நிலவரம் தெரியும்."
கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய செய்திகளை இன்றைய புதிய நேரலைப் பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
தினமும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை நேரலை பக்கத்தில் வழங்கி வருகிறது பிபிசி தமிழ்.
இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இவைதான்.
கொரோனாவுக்கு பழகிக்கொள்ளுங்கள், வேறு வழியில்லை என மெல்ல மெல்ல அதிகாரிகள் கை விரிக்கின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் என்னதான் சிரமம்?


புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்காத காரணத்தினால், தமிழகப் பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மது வாங்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள். பின்னர், புதுச்சேரிக்குக் கள்ளத்தனமாகக் கொண்டுவர முயன்ற போது, காவல் துறையினர் சோதனையில் மதுபானங்களைப் பறிமுதல் செய்து, அனைவரையும் கைது செய்தனர்.
கொரோனா தொற்றினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
தமிழக அரசு மதுக்கடைகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் புதுச்சேரியிலும் அதே நடவடிக்கை பின்பற்றப்படும் எனப் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை மதுக்கடைகள் திறப்பது குறித்து புதுச்சேரி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அருகே உள்ள தமிழகப் பகுதிகளான கடலூர் மற்றும் விழுப்புரம் எல்லைக்கு சென்று மது வாங்க வாய்ப்பிருக்கும் என்பதால், புதுச்சேரி எல்லைகள் முன்பைவிட கூடுதலாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டத்திற்குக் கள்ளத்தனமாக மது வாங்கி வந்துள்ளனர். பின்னர், கொரோனா பாதுகாப்பு குறித்து எல்லையிலிருந்த காவல் துறையினர், இரு சக்கர வாகனங்களில் புதுச்சேரிக்குள் வந்த நபர்களைச் சோதனை செய்தபோது, தமிழகப் பகுதிகளிலிருந்து மது வாங்கி வந்தது கண்டறியப்பட்டது. பிறகு அவர்களிடமிருந்த மதுபான பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
முன்னதாக, புதுச்சேரியில் இருந்து மதுபானங்களைக் கள்ளத்தனமாக வாங்கி செல்லும் போது, தமிழகப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்காத காரணத்தினால் தமிழகப் பகுதிகளில் மது வாங்கி புதுச்சேரிக்குள் வந்த நபர்கள் கைது செய்யப்பட்டது வேடிக்கையாக இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து, புதுச்சேரி திருக்கனூர் பகுதி உதவி காவல் ஆய்வாளர் குமார் கூறியதாவது, "தமிழக டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிய நபர்களிடம் கூடுதல் விலை கொடுத்து, கள்ளத்தனமாகப் புதுச்சேரிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 53 குவார்ட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
"நான் வீட்டிற்கு சென்றே 24 மணி நேரம் ஆகிவிட்டது," என்கிறார் இந்த மருத்துவர்.
இது இரவு பகல் பாராமல் உயிரை காக்க போராடும் ஒரு மருத்துவரின் கதை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் மேலும் 1089 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் முடக்கநிலையில் பாதுகாப்பு பணிகளை கவனிக்க மும்பைக்கு ராணுவம் வரவுள்ளது என்ற செய்திகள் வருவது பற்றி குறிப்பிட்ட மஹாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, ‘’மும்பையில் தற்போது ராணுவம் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படாது. மக்களுக்கு என முடிவுகளை எப்போதும் தெரிவிப்பேன்’’ என்று கூறினார்.
‘’மாநில போலீசார் கடுமையான பணிச்சுமையால் அழுத்தத்தில் உள்ளனர். அவர்களின் பணிச்சுமையை குறைக்க தேவைப்பட்டால் , மாநில போலீசாருக்கு சற்று ஒய்வு தரும் நோக்கில் மத்திய படைகளை பாதுகாப்பு பணிகளுக்காக அழைப்போம். அதற்காக தற்போது மும்பைக்கு ரானுவம் வருகிறது என்று பொருள் அல்ல’’ என்று மேலும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பாதிப்பால் வரலாற்றில் இல்லாத அளவு, அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்பின்மை இருப்பதாக தரவுகள் வெளிவந்த சூழலில், நாட்டின் எதிர்கால பொருளாதாரம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஃக்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர், அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது ‘’முற்றிலும் எதிர்பார்த்த ஒன்று’’ என்றும், ‘’இதில் வியப்பு ஒன்றும் இல்லை’’ என்றும் தெரிவித்தார்.
‘’வேலையிழப்புகள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் என் மீது குற்றம்சுமத்துகின்றனர். ஆனால், தங்கள் பணிகளை இழந்தவர்களுக்கு அவர்களின் வேலை மீண்டும் கிடைக்க செய்ய என்னால் முடியும்’’ என்று அவர் மேலும் கூறினார்.
வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதை கருத்தில் கொண்டு, மீண்டும் அமெரிக்காவில் பொருளாளதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள சில மாகாணங்களில் ஏற்கனவே முடக்கநிலை தளர்த்தி கொள்ளப்பட்டுள்ளது.
சில இடங்களில் முடக்கநிலையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது.


கோவையில் ஊரடங்கு காரணமாக ஆதரவின்றி தவித்து வந்த 1140 பிகார் மாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்திலிருந்து பிகாருக்கு சிறப்பு ரயிலில் இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக கோவையில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வருவாய் இல்லாததால் மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச்செல்ல பல தொழிலாளர்கள் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
கோவையில் பணிபுரிந்து வந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் பெயர்களை பதிவு செய்தனர்.
இதன் முதற்கட்டமாக, கோவை ரயில் நிலையத்திலிருந்து பிகார் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, 1140 பிகார் மாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்த நாட்களில், பிகார், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த மற்ற தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 768 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்று புதிதாக வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பத்து பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் ஆவர். மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் வைரஸ் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 21,707. நாட்டில் உள்ள 3,23,000 அந்நியத் தொழிலாளர்களில் 18,483 ஊழியர்களுக்கு, அதாவது 5.7 விழுக்காட்டினருக்கு விட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூரில் வீட்டு விற்பனை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அங்கு வீவக வீடுகள் என்று குறிப்பிடப்படும் ஒருவகை வீடுகளின் எண்ணிக்கையானது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்திருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் நோய்ப் பரவல் அச்சுறுத்திய வேளையில் கூட சிங்கப்பூரில் வீட்டு விற்பனை இந்தளவு சரிவைச் சந்திக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், இது தொடர்பாக பொதுமக்களை யாரும் நிர்பந்திக்கக் கூடாது எனவும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், பேரங்காடி நிர்வாகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இவ்வாறு நிர்பந்திக்க வேண்டாம் என இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் வலியுறுத்தினார்.
பல்பொருள் அங்காடிகள், பேரங்காடிகள் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்று அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த இஸ்மாயில் சப்ரி, முகக்கவசங்கள் அணிவது கட்டாயமல்ல என்றும், பேரங்காடி நிர்வாகமானது வாடிக்கையாளர்கள் அதை அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினால், முகக்கவசங்களை விற்கலாம் என்றார்.
இதனிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் மொத்த எண்ணிக்கை 6,535ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 68 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த 24 மணி நேரத்தில் 88 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மலேசியாவில் பலியானோரின் எண்ணிக்கை 107ஆக நீடிக்கிறது.
ஆன் லைன் மூலம் மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் நேற்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
மதுபான கடைகளில் பல இடங்களிலும் அதிக கூட்டம் இருந்தது மற்றொரு புறம் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.
கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிதம்பரத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது.
இதுவரை கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்புப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் உரியப் பாதுகாப்பு தேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர். கூடுதலாக, பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 600பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 391பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்துள்ளது.
திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையினால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. சந்தைக்கு தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும் என்று கெருகம்பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு விசாரித்தது.
கோயம்பேடு வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை விவரங்கள், திருமழிசை தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், வசதிகள் குறித்து நிலவர அறிக்கை (status report) தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணை வரும் 14ஆம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமழிசையில் காய்கறி சந்தை அமைய உள்ள இடத்தில் நாளை மாலை 4 மணிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வுசெய்யவுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நாட்டில் கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தயாரிப்புக்கு பிந்தைய பணிகளான டப்பிங், கிராபிக்ஸ் போன்ற பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
மே 11ம் தேதி முதல் பணிகளை தொடங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அவசியம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 21 மருத்துவமனைகளில் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலரான லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை மதுரை நெல்லை மற்றும் வேலூரில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.
இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images