கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6000ஐ கடந்தது

"எந்தெந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், உண்மையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குதான் அந்தந்த பகுதிகளின் உண்மையான நிலவரம் தெரியும்."

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ‘கொரோனா அறிவுரைகளை கடைப்பிடிக்காவிட்டால்…….’

    கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ ரீதியிலான அறிவுரைகளை கடைப்பிடித்தால், மற்றும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என வெளியிடப்பட்டதை சரியாக பின்பற்றினால் இந்தியா கொரோனா எண்ணிக்கையில் உச்சத்தை எட்டாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இனி செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

    அவ்வாறு கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3390 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துளளார்.

    அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 1273 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    இதுவரை இந்தியாவில் 16,540 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், 37, 916 பேர் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 29.36 ஆக உள்ளது.

    இதுவரை இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.

    கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், ANI

  2. இலங்கையில் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனாவா?

    இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என வைத்திய ராசாயண ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

    இறுதியாக உயிரிழந்த கொழும்பு - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக முன்னர் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பின்னர் ஆராய்ந்த போதே, குறித்த பெண்ணுக்கு அந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதியாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    சுமார் 13 வரையான பரிசோதனை அறிக்கைகளில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இறுதியாக உயிரிழந்த கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான முஸ்லிம் பெண்ணிற்கு கொரோனா தொற்றின்றி, இஸ்லாமிய மத சடங்கள் செய்யாது, அவரது சடலம் தகனம் செய்யப்பட்டமை குறித்து தற்போது சமூகத்தில் அதிகளவில் பேசப்படுகின்றது.

    குறித்த முஸ்லிம் பெண்ணின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமை வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் குறிப்பிட்டார்.

    இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தை கண்டிப்பதாகவும் மனோ கணேஷன் கூறியுள்ளார்.

    இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புக் கொண்ட எமது முயற்சி பயனளிக்கவில்லை.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  3. ஊரடங்கு முடிந்து பணிக்குத் திரும்பும்போது அலுவலகங்கள் பாதுகாப்பாக இருக்குமா?

    பல நாடுகள் முடக்கநிலையை தளர்த்தத் தொடங்கியுள்ள நிலையில், ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்குப் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். நோய்த் தாக்குதல் முடியாத நிலையில், அலுவலகங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் அச்சப்படுவது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

    அலுவலகங்களில் பழைய நடைமுறைகளுடன் சேர்த்து, அலுவலர்களை கண்காணிக்க தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  4. மதுக்கடை அருகே தரையில் அமர வைக்கப்பட்ட கூட்டம்

    சென்னை நீங்கலாக தமிழகத்தில் மற்ற இடங்களில் நேற்று முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து போராட்டமும், மற்றொரு புறம்,மதுவை வாங்க மக்கள் கூட்டமும் தொடந்து நடந்த வண்ணமுள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இரண்டாவது நாளாக மது வாங்க பெரும் கூட்டம் கூடியது.

    அதிக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, மது வாங்க வந்தவர்களை சமூக இடைவெளியுடன் மதுக்கடை அருகே அமரவைத்துள்ளனர் காவல் துறையினர்.

    விழுப்புரத்தில் மதுக்கடை  அருகே தரையில் அமர வைக்கப்பட்ட கூட்டம்
  5. ஐரோப்பாவில் அண்மைய செய்திகள் என்ன?

    • கொரோனா வைரஸ் தாக்கத்தால் இரண்டாம் உலகப்போர் முடிவை குறிக்கும் நாளில் அது தொடர்புடைய ஐரோப்பிய நாடுகளில் எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை.
    • கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 10,669 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றோடு தொடர்ந்து 6-வது நாளாக ரஷ்யாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    • டென்மார்க்கில் கடந்த ஏப்ரல் முதல் முடக்கநிலை தளர்த்தப்பட்டு வந்த நிலையில், மூடப்பட்ட மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • கொரோனா வைரஸ் பாதிப்பால், மிகவும் தொழில்வளம் மிக்க ஜெர்மனியில் மார்ச் மாதத்தில் ஏற்றுமதிகள் 11.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
    • 1990-ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய இரண்டும் இணைந்த பின்னர் முதல்முறையாக தற்போது தான் ஜெர்மனியின் பொருளாதாரமும், ஏற்றுமதியும் கொரோனா பாதிப்பால் பெரிதும் சரிந்துள்ளன.
    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  6. தமிழகத்தில் 2570 செவிலியர்கள் பணி நியமனம்

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

    இதற்கான பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த உத்தரவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

  7. வணக்கம்!

    கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் நேரலையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இதுகுறித்த செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து நான் சிவக்குமார் உலகநாதன் தொகுத்து வழங்க இருக்கிறேன்.

    முதலில் காலையில் இருந்து நடந்த சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

    • கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 38 லட்சத்து 59 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
    • இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,890-ஆக அதிகரித்துள்ளது.
    • கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.ஆனால், இந்த விசாரணைகள் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியில் இருக்கக்கூடாது என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
    • மகாராஷ்டிராவில் ரயில்வே ட்ராக்கில் நடந்து கொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மத்திய அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இந்தியாவில் ஊரடங்கை எவ்வாறு அரசு தளர்த்தப் போகிறது என்பதை புரிந்துகொள்ள அது உதவும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்
    • இந்தியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, நேரடியாக அல்லாமல் பிற வழிகளில் அல்லது வீட்டிற்கு சென்று மது வழங்குவது போன்ற யோசனைகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • கோவிட் 19 பெருந்தொற்று என அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 9 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என ஐநாவின் குழந்தைகள்நல அமைப்பான யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது.
    • தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  8. கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும்

    கோவிட் 19 பெருந்தொற்று என அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 9 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என ஐநாவின் குழந்தைகள்நல அமைப்பான யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது.

    இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில், 1.35 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு அடுத்து நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகள், பாகிஸ்தானில் 50 லட்சம் மற்றும் இந்தோனீசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்கக்கூடும் என்றும் யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, மது விற்பனை - உச்சநீதிமன்றம் பரிசீலனை

    இந்தியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, நேரடியாக அல்லாமல் பிற வழிகளில் அல்லது வீட்டிற்கு சென்று மது வழங்குவது போன்ற யோசனைகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரிவட்டுள்ளது.

    இது தொடர்பாக சாய் தீபக் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அஷோக் பூஷன் தலைமையிலான அமர்வு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

  10. தூத்துக்குடியில் தானியங்கி எந்திரம் மூலம் முக கவசம் விற்பனை

    Automatic Mask vending machine
    Automatic Mask vending machine

    கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் ஆங்காங்கே விதவிதமான டிசைன்களில் முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த முகக்கவசங்கள் விலை சற்று அதிகமாக இருப்பதால் பலர் அதனை பயன்படுத்தாமல் உள்ளனர்.

    இதனால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குறைந்த விலையில் நவீன தானியங்கி எந்திரம் மூலம் முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி முகக்கவசம் விற்பனை செய்யும் எந்திரம் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலிலும் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த எந்திரத்தில் 5 ரூபாயை போட்டால் மூன்று அடுக்கு முகக்கவசங்கள் கிடைக்கும். இந்த எந்திரத்தில் 120 முகக்கவசங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

  11. கூகுள், ஃபேஸ்புக் ஊழியர்கள் இந்தாண்டு இறுதிவரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி

    Google and Facebook

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக், இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

    ஜூன் 1ஆம் தேதிவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக் நிறுவனம் ஜுலை 6ஆம் தேதி தங்கள் நிறுவனத்தை திறக்க உத்தேசித்திருந்த நிலையில், பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

  12. கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

    சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

    உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

  13. கொரோனா தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட சீனா

    கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

    ஆனால், இந்த விசாரணைகள் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியில் இருக்கக்கூடாது என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸின் மூலம் குறித்து சீனா வெளிப்படைத்தன்மையோடு செயல்படவில்லை என்றும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை சீனா எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஆரம்பம் முதலே குற்றஞ்சாட்டி வந்தது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சீனா, வைரஸ் சீனாவுக்கு வெளியேதான் தோன்றியிருக்க வேண்டும் என்று அண்மையில் தெரிவித்திருந்தது.

    கொரோனா தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட சீனா

    பட மூலாதாரம், Getty Images

  14. மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு - திருச்சியில் பெண்கள் போராட்டம்

    தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திருச்சியில் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் - கமல்ஹாசன் கண்டனம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தமிழகத்தில் சென்னையை தவிற பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் தாங்குமாதமிழகம் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

    இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன்.

    "மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

  16. 'வந்தே பாரத்' திட்டம் - விரவான தகவல்கள்

    Vandhe Bharat Mission

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தடுப்பு முடக்கநிலைக்கு நடுவில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டும் பணியை இந்திய அரசு தொடங்கியிருக்கிறது.

    வரும் வாரத்தில் மட்டும் 12 நாடுகளில் இருந்து 15,000 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அவர்கள் சொந்த செலவில்தான் பயணச்சீட்டு பெற வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் இத்திட்டத்திற்கு 'வந்தே பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

  17. சீன தூதரம் இருக்கும் சாலையின் பெயரை மாற்ற பரிந்துரை

    சீன தூதரம் இருக்கும் சாலையின் பெயரை மாற்ற பரிந்துரை

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து முதன்முதலில் எச்சரிக்கை செய்த சீன மருத்துவர் லி வென்லியாங்கின் பெயரை அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் டி சியில் அமைந்திருக்கும் சீன தூதரகத்துக்கு எதிரே இருக்கும் தெருவிற்கு சூட்ட வேண்டும் என்று அமெரிக்க செனட் உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

    கடந்த டிசம்பர் மாதம் SARS போன்ற வைரஸ் தொற்று பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக மருத்துவர் லீ வென்லியாங், தனது சக மருத்துவர்களை எச்சரித்துள்ளார்.

    சீனா அந்த வைரஸ் தொற்று குறித்து அப்போது ஆய்வு மேற்கொண்டிருந்தாலும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று போலீஸாரால் மருத்துவர் லீ எச்சரிக்கப்பட்டுள்ளார்.''

    பின்னர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட லீ நோய்த்தொற்று தீவிரமாகி உயிரிழந்தார். அவருடைய மரணம் சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

  18. காலையில் இருந்து நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    தற்போதுதான் இந்த நேரலையில் இணைகிறீர்களா? இன்று காலை முதல் நடந்த முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

    • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 37,916 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.
    • இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரிப்பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது கோடம்பாக்கம்.
    • வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கியிருக்கிறது. வந்தே பாரத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புத்திட்டத்தில் முதல் கட்டமாக 177 இந்தியர்களுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கேரளா மாநிலம் கோழிக்கோடை வந்தடைந்தது.
    • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் இருந்து 167 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர். இவர்கள் அனைவருமே மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆவர்.
    • மகாராஷ்டிராவில் ரயில்வே ட்ராக்கில் நடந்து கொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    • இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை நெருங்கவுள்ளது.
  19. 'மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்'

    'மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்'

    பட மூலாதாரம், Getty Images

    மத்திய அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்தியாவில் ஊரடங்கை எவ்வாறு அரசு தளர்த்தப் போகிறது என்பதை புரிந்துகொள்ள அது உதவும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

    இது விமர்சிப்பதற்கான நேரம் அல்ல. ஊரடங்கை தளர்த்த சரியான திட்டமிடல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "எந்தெந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், உண்மையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குதான் அந்தந்த பகுதிகளின் உண்மையான நிலவரம் தெரியும். அவர்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்" என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

  20. உலகளவில் 39 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை நெருங்கவுள்ளது.

    வெள்ளிக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி சுமார் 2,68,584 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக அமெரிக்காவில் 75,670 பேரும், பிரிட்டனில் 30,689 பேரும், இத்தாலியில் 29,958 பேரும், ஸ்பெயினில் 26,070 பேரும், ஃபிரான்ஸில் 25,990 பேரும் உயிரிழந்துள்ளனர்.