You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "இந்தியாவில் ஜுன், ஜுலையில் கொரோனா உச்சகட்டத்தை அடையலாம்"

    இந்தியாவில் தற்போது வெளியாகும் தரவுகள் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் விகிதத்தை வைத்து பார்த்தால், ஜுன், ஜுலை மாதங்களில் இத்தொற்று உச்சகட்டத்தை அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

    ஆனால் இதில் ஏதேனும் மாற்றமும் இருக்கலாம். சில காலம் பொறுத்துதான், இதன் தாக்கம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார் என ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது.

    இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால், 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,783 பேர் உயிரிழந்துள்ளனர்.

  2. ‘’சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கக்கூடும்’’

    சிங்கப்பூரில் இன்று புதிதாக 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,939 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று நோய்த்தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்களாவர். சிங்கப்பூரில் இதுவரை 17,758 அந்நியத் தொழிலாளர்கள் கோவிட் 19 நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 88 விழுக்காடு ஆகும்.

    இதற்கிடையே சிங்கப்பூரில் இம்மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 முதல் 40 ஆயிரம்வரைஅதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. எனினும் நிலைமை கைமீறிப்போக வாய்ப்பில்லை என்றும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்நிபுணர்கள் கருதுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

    கடந்த ஜனவரி 23ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக அதிகரித்தது. எனினும் அதன்பிறகு மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தொற்று நோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம் தெரிவித்துள்ளார். எனினும் அன்றாட எண்ணிக்கையின் உச்சத்தை சிங்கப்பூர் ஏற்கெனவே தாண்டியிருக்கக்கூடும் என அவர் கூறியதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

  3. மலேசியாவில் தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து 147 பேர் தப்பியோட்டம்

    மலேசியாவில் இன்று (மே 7) புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,467 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 30 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 74 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் மலேசியாவில் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 74 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் சிகையலங்காரக் கடைகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் சிகையலங்காரக் கடைகள் மூலம் வைரஸ் தொற்று பரவிய சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

    பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முழுமையாக விலக்கிக்கொள்ள மலேசிய அரசாங்கம் இன்னும் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள 6 நெறிமுறைகளை மலேசிய அரசு பின்பற்றும் என்றார்.

    "தற்போது புதிதாக நோய்த்தொற்றியோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பாதிப்பை மேலும் குறைக்கமுடியும் என நம்புகிறோம். எனினும் புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டி உள்ளது,"என்றார் நூர் ஹிஷாம்.

    மலேசியாவில் கோவிட் 19 நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 109 ஆக நீடிக்கிறது.

    இதற்கிடையே கடந்த 4ஆம் தேதி தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து 7 வெளிநாட்டவர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுவரை 147 பேர் இவ்வாறு முகாம்களில் இருந்து தப்பி ஓடியிருப்பதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார். எனினும் அந்த 147 பேருக்கும் கோவிட் 19 நோய் இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  4. கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க ஏன் தாமதமாகிறது?

    முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட்-19 நோய்த்தொற்று எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

    இதுகுறித்து விரிவாக விளக்குகிறது இந்தக் காணொளி.

  5. தமிழகத்தில் இப்போது ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும்? கே.எஸ்.அழகிரி கேள்வி

    "தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதால், கொரோனா நோயினைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்டோரின் 40 நாள் கடும் உழைப்பை வீணாகிவிடும்," என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சியில் உள்ள அவரது வீட்டின் வெளியே, குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை செய்வதைத் தவிர்த்து, தேவையில்லாத விஷயங்களைச் செய்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தவறான ஒன்று.

    கடந்த 40 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பாடுபட்ட அனைத்து காரியங்களும், இதுபோன்ற காரியங்களால் வீணாகிவிடும்.

    மது விற்பனை செய்வதினால் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமில்லாமல், குடும்ப வன்முறை அதிகரிக்கும். கேரள மாநில அரசு மதுக்கடைகள் திறக்கக் கூடாதென்ற முடிவில் இருக்கிறார்கள், இதுவரையில் மதுக்கடைகள் திறப்பது குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .

    ஆனால் தமிழக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு கொரோனா தடுப்பிற்கு உதவ எந்தவொரு நிதியுதவியும் அளிக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பிலும் கண்டம் தெரிவித்து வருகிறோம். ஆனால் ஆளும் அதிமுக மத்திய அரசிற்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இதுகுறித்து அமைதியாக இருப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.

  6. கோவிட்-19 தொற்றின் ஊற்றாக கோயம்பேடு உருவெடுத்தது எப்படி?, முரளீதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையே அதற்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விபரீதம் எப்படி நடந்தது?

  7. 'வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த தரவுகள் இல்லை'

    இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தரவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெளிமாநில தொழிலாளர்கள் நிலை தொடர்பாக செயற்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதற்கான தரவுகளை கேட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகம், வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக மாநில வாரியான அல்லது மாவட்ட வாரியான தகவல்கள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

  8. ஆள் நடமாட்டம் இல்லாத கோயம்பேடு காய்கறி சந்தை

  9. மதுக்கடை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய 4 பேர் மீது வழக்கு

    திருப்பூரில் மதுக்கடை திறப்பை கொண்டாட பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக நான்கு பேர் எம்.எஸ் நகர் பகுதியில் உள்ள மதுக்கடையின் முன்பு பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.

    இவர்கள் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. புதுச்சேரியில் மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும்?

    "மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும். எனவே, புதுச்சேரியிலும் மதுக்கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரோனா நோய்த் தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பும், மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்.

    இதுவரை தமிழகத்தின் முடிவை பொருத்தே புதுச்சேரியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் இருக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகள் இன்றிலிருந்து திறக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக அமைச்சரவையில் கூடி முடிவை அறிவிப்போம்," என தெரிவித்தார்.

  11. "முதல்வர் ஐயாவால கெடச்சிடுச்சு...” குஷியில் குடிமகன்கள்

    தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    கடை திறப்பதற்கு முன்பே பலரும் மதுபானம் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் திமுக உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

  12. படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்

    வரும் திங்கட்கிழமை முதல் பிரான்ஸில் எவ்வாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் எட்யார்ட் பிலிப்பே தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பகுதிகள் சிவப்பு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கு ஏற்றாற்போல தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெளியில் சென்று உடற்பயிற்சி செய்யும் போது இரண்டு நபர்களுக்கு மேல் யாரும் சந்திக்கக்கூடாது என்று பெல்ஜியம் அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது வரும் ஞாயிறு முதல் நான்கு பேர் வரை சந்தித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று அந்நாட்டு மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அடுத்த நான்கு மாதங்களுக்கு படிப்படியாக எவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற வழிமுறைகளை நெதர்லாந்து அறிவித்துள்ளது. அங்கு வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்ப பள்ளிகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படும். ஜுன் 1ஆம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்கப்படும். இறுதியாக விளையாட்டுகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கான அனுமதி செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  13. கோயம்பேட்டில் இருந்து திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா

    கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோயம்பேடு சந்தையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். விழுப்புரம் திரும்பிய அவருக்குச் சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறிகள் இருக்கவே புதுச்சேரி ஜிப்மரில் பணிபுரியும் தனது தாயுடன் அங்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்று கூறி அனுப்பி உள்ளனர்.

    ஆனால், அவர் சந்தேகத்தின் பேரில் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்து பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    குறிப்பாகப் புதுச்சேரி மாநிலத்தில் இன்று நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர் உட்பட 4 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

  14. இலங்கை நிலவரம் என்ன?, ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து

    இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக இதுவரை 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆவர்.

    அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 573 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    215 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கையில் இதுவரை 30,525 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதேவேளை, பௌத்தர்களுக்கு இன்று விசேட வெசாக் தினமாகும். எனினும், நாடு முழுவதும் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமையினால் அனைத்து பௌத்தர்களும் தமது வீடுகளில் இருந்தவாறே இன்று வெசாக் பூரணை தினத்தை கொண்டாடுகின்றனர்.

  15. மதிய வணக்கம்!

    கொரோனா வைரஸ் தொடர்பான பிபிசி தமிழ் நேரலையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    இதுகுறித்த செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து நான் அபர்ணா ராமமூர்த்தி தொகுத்து வழங்க இருக்கிறேன்.

    முதலில் காலையில் இருந்து நடந்த சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

    • கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 37 லட்சத்து 53 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
    • இந்தியாவில் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது.
    • சர்வதேச அளவிலோ நல்லது நாட்டிலோ யாருக்கு தேவையோ அல்லது யாரெல்லாம் நெருக்கடியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்த வேறுபாடுமின்றி இந்தியா ஆதரவாக நிற்கிறது என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தில் சென்னையை திவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மதுவாங்க காத்து நிற்கின்றனர்.
    • தமிழகத்தில் மதுபானக் கடைகளை திறப்பதை கண்டித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • மதுபானக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகத்தில் கருப்பு சின்னம் அணிந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  16. குடைபிடித்து வரிசையில் நிற்கும் மக்கள்

    குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததையடுத்து டாஸ்மாக் கடைகளில் குடை பிடித்து காத்திருக்கும் மக்கள்.

  17. உலகளவில் தற்போதைய நிலவரம்

    கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 37 லட்சத்து 53 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

    அதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 12 லட்சத்து 28 ஆயிரத்து 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 2,20,325 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,14,457 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்றால் இது அமெரிக்காவில் அதிகபட்சமாக 73 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

  18. ஆதரவின்றி வளர்ப்பு பிராணிகள்

    கொரோனா வைரஸ் அச்சத்தால் சாலைகளில் ஆதரவின்றி விட்டுச் செல்லப்படும் வளர்ப்பு பிராணிகள்.

  19. பணிப்பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்திய கொரோனா வைரஸ் ஊரடங்கு

  20. நீண்ட வரிசையில் மக்கள்

    தமிழகத்தில் இன்றுமுதல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் மதுவாங்க காத்து நிற்கின்றனர்.