You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    தினமும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை நேரலை பக்கத்தில் வழங்கி வருகிறது பிபிசி தமிழ்.

    இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இவைதான்.

    • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்தியாவில் தற்போது வெளியாகும் தரவுகள் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் விகிதத்தை வைத்து பார்த்தால், ஜுன், ஜுலை மாதங்களில் இத்தொற்று உச்சகட்டத்தை அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
    • இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு வெளிமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஷர்மிக் ரயில் இன்று இரவு எட்டு மணிக்கு புறப்பட்டது. தலைநகரில் இருந்து இவ்வாறு புறப்படும் முதல் ரயில் இது.
    • தமிழகத்தை பொறுத்தவரை இன்று புதிதாக வைரஸ் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடை திறப்பதற்கு முன்பே மக்கள் பலரும் மதுபானம் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
    • மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
    • "மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும். எனவே, புதுச்சேரியிலும் மதுக்கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    • கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக இதுவரை 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படவில்லை என கோவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், ராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
    • பாகிஸ்தானில் ஐந்து வாரங்களுக்கு பிறகு வரும் சனிக்கிழமை முதல் படிபடிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
  3. கொரோனா ஊரடங்கால் மன அழுத்தமா? நிம்மதியாக தூங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

    கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

    ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்

  4. கொரோனா தொற்று: தமிழகம், இந்தியா, சர்வதேச நிலவரம்

    தமிழ்நாட்டில் ஐயாயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்று. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நிலவரம் என்ன?

  5. அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு ஓராண்டு உயர்த்தியது ஏன்? தாக்கம் என்ன?

  6. ரெம்டிசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கிய ஜப்பான்

    கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்பாட்டை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது ஜப்பான்.

    ஏவிகான் என்ற மற்றொரு மருந்தை பயன்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக்கவும் அந்நாடு கருதி வருகிறது.

    ரெம்டிசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கும் இரண்டாவது நாடு ஜப்பான். ஏற்கனவே இந்த மருந்தை பயன்படுத்த அமெரிக்கா கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.

    இபோலா வைரசிற்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தான ரெம்டிசிவிர், கோவிட் 19 நோயாளிகள் விரைவாக குணமடைய உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. அதிகரிக்கும் பாதிப்புகள் - மாஸ்கோவில் முடக்கநிலை நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பை தனது பிளாக்கில் வெளியிட்ட செர்கி சோப்யானின், அதேவேளையில் மே 12 முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், திரையரங்குகள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை திறப்பதற்கு தற்போது உகந்த நேரமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவளின் மையமாக விளங்கும் மாஸ்கோவில் மட்டும் கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாஸ்கோவில் தொடர்ந்து கடும் பாதிப்பு இருப்பதால் அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்படவேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

  8. மஹாராஷ்டிரா, குஜராத்தில் அண்மைய நிலவரம் என்ன?

    இந்தியாவில் மிக அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரேநாளில் புதிதாக 1362 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,120-ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோல் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பு உள்ள குஜராத் மாநிலத்தில் ஒரேநாளில் புதிதாக 388 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7103-ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    மேலும் குஜராத்தில் இதுவரை இந்த தொற்றால் 425 பேர் இறந்துள்ளனர்.

  9. வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் தலைநகரில் இருந்து புறப்பட்ட ஷர்மிக் ரயில்

    இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு வெளிமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஷர்மிக் ரயில் இன்று இரவு எட்டு மணிக்கு புறப்பட்டது.

    தலைநகரில் இருந்து இவ்வாறு புறப்படும் முதல் ரயில் இது.

    டெல்லியில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 75 பேருந்துகளில் நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒவ்வொரு பேருந்திலும் 10ல் இருந்து 12 தொழிலாளர்கள் இருந்தனர்.

    அவர்கள் அனைவருமே மிகவும் சோர்வாக காணப்பட்டனர். எந்த கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

    இந்த பேருந்துகளுக்கு பின்னால் ஆம்புலன்ஸ்கள் சென்றதையும் காண முடிந்தது.

    டெல்லியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீண்டும் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தவுடன் முதலில் அதற்கு ஆர்வம் காட்டியது மத்தியப் பிரதேச மாநிலம் என்று வட ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது.

    பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் விரும்பினால், இதே போன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

  10. ஊரடங்கை தளர்த்துகிறது பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் ஐந்து வாரங்களுக்கு பிறகு வரும் சனிக்கிழமை முதல் படிபடிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    "கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வரும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரியும். ஆனால், மக்கள் ஊரடங்கால் பாதிக்கப்படுகிறார்கள்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    எனினும் பொது போக்குவரத்து இயங்காது மற்றும் பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கை தளர்த்துவது கொரோனா தொற்று பரவலின் வேகத்தை அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் இன்று மட்டும் 1,573 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 24,073 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 564 பேர் உயிரிழந்துள்ளனர்.

  11. "இலங்கையில் ஒரு தமிழருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை", ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து

    இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என கோவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், ராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

    தொலைப்பேசி வழியாக பிபிசி தமிழக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால், சமய நிகழ்வொன்றில் பங்கேற்ற சிலர் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு உட்படுத்தப்பட்டு முப்படையினர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், தமிழர் அதிகளவில் வாழும் பகுதிகளில் சமூகத்திற்குள் இருந்து ஒரு கொரோனா தொற்றாளரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    அவ்வாறு முப்படையினர் தமிழர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டதாகவும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

    அத்துடன், இரண்டு மாதம் என்ற மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் கோவிட் தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

    எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்கள் ஒழுக்கத்துடனும், சமூக இடைவெளியை பேணியும், சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றியும் நடந்துக்கொண்டால் கோவிட் தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து முதற்கட்டமாக மாணவர்களே அழைத்து வரப்படுவதாகவும், அவர்களை தொடர்ந்தே ஏனையோரை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு அழைத்து வரப்பட்ட 5532 பேர், 41 கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

  12. உங்கள் கைகளை சரியாக கழுவுவது எப்படி?

    கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் முறையாக எப்படி கைக்கழுவ வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை விளக்குகிறது இந்த காணொளி.

  13. தமிழகத்தில் கொரோனா - விரிவான தகவல்கள்

    தமிழ்நாட்டில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழக சுகாதாரத் துறை அளித்த தகவல்களின்படி, 3822 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 14,195 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன. இதுவரை 2,02,436 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் சோதனைகளை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

    தற்போது தமிழ்நாட்டில் 36 அரசு ஆய்வகங்கள், 16 தனியார் மருத்துவமனைகள் என 52 கொரோனா ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகின்றன.

    கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1547ஆக உள்ளது.

    திருவள்ளூரைச் சேர்ந்த 56 வயதுப் பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மே ஒன்றாம் தேதி சேர்க்கப்பட்டு கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல, மே மூன்றாம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 48 வயதுப் பெண் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சனைகளும் இருந்தன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றில் சென்னையில்தான் அதிகம் பேர் உள்ளனர். மொத்த அடையாளம் காணப்பட்ட 508 பேரில் 316 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 63 பேர் திருவள்ளூரையும் 45 பேர் விழுப்புரத்தையும் 33 பேர் பெரம்பலூரையும் 32 பேர் கடலூரையும் சேர்ந்தவர்கள்.

    ஒட்டுமொத்தமாக சென்னையில் 2644 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் புதிதாக கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்தே நோய்த் தொற்றைப் பெற்றுள்ளனர்.

  14. பிரேசில் அதிபர் போல்சினாரூவை சாடிய சா பாலோ ஆளுநர்

    பிரேசிலில் 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 615 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு ஒருநாளில் நிகழ்ந்த அதிகபட்ச பலி எண்ணிக்கை இதுவாகும்.

    இந்நிலையில் "நாங்கள் இரு வைரஸ்களை எதிர்த்து போராடி வருகிறோம். ஒன்று கொரோனா. மற்றொன்று போல்சினாரூ வைரஸ்" என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டின் சா பாலோ மாகாணத்தின் ஆளுநர் டோரியா.

    பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சினாரூவிற்கு ஒருகாலத்தில் ஆதரவாக இருந்த சா பாலோ ஆளுநர் டோரியா, தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்.

    கொரோனா தொற்றை பிரேசில் அதிபர் கையாண்ட விதத்தால் இந்த மோதல் ஏற்பட்டது.

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சா பாலோ மாகாணம் முழுவதையும் தனிமைப்படுத்தியுள்ளார் ஆளுநர் டோரியா. ஆனால், பாதிக்கப்படும் விளிம்பில் இருப்பவர்கள் மட்டும் வீட்டில் இருக்குமாறும் மற்றவர்களை பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறார் அதிபர் போல்சினாரூ.

    அதனைத்தொடர்ந்தே நாங்கள் இரண்டு வைரஸ்களுக்கு எதிராக போராடுகிறோம் என்று ஆளுநர் டோரியா குறிப்பிட்டுள்ளார்.

    பிரேசிலின் மிக செழிப்பான மாகாணங்களில் ஒன்று சா பாலோ என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை கொரோனா தொற்றால் பிரேசிலில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  15. கங்கை நீரை ஆய்வு செய்யப்போவதில்லை - ஐசிஎம்ஆர்

    கங்கை நதியின் நீர் கோவிட் - 19 தொற்றைக் குணப்படுத்துமா என ஆய்வு செய்யப் போவதில்லையென ஐசிஎம்ஆர் அறிவித்திருக்கிறது.

    கங்கை நீருக்கு கொரோனா தொற்றை குணப்படுத்தும் அம்சம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு மத்திய ஜலசக்தி துறை அமைச்சகம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் கோரியிருந்தது.

    இதற்கு போதுமான அறிவியல்பூர்வ தரவுகள் இல்லையெனக் கூறி அந்தக் கோரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிராகரித்திருக்கிறது.

  16. விழுப்புரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா; கடலூரில் 32

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 45 நபர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் விழுப்புரத்தில், இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது.

    விழுப்புரத்தில் இதுவரை இந்நோய்த் தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 356ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 32 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில், இதுவரை 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 466 நபர்களின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் கடலூர் மாவட்டம் உள்ளது.

  17. கேரளாவில் இன்றும் கொரோனா பாதிப்பு இல்லை

    கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    அங்கு வெறும் 25 பேர் மட்டுமே மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  18. JEE Advanced தேர்வு ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும்

    ஐஐடியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான JEE Advanced தேர்வு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் இன்று 580 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று புதிதாக 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 14,195 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன. இதுவரை 2,02,436 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் சோதனைகளை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

  20. அகமதாபாத்தில் திடீர் ஊடரடங்கு - என்ன சிக்கல்?

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகராட்சி நேற்று அறிவித்தது.

    மருந்தகம் மற்றும் பால் விற்பனை தவிர வேறு ஏதும் இயங்காது என்றும் தெரிவித்திருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் காய்கறிகள் மற்றும் அதியாவசிய பொருட்களை வாங்க நேற்று மாலை பெருமளவில் கூடினர்.

    இந்நிலையில், தேவையான பொருட்களை சேகரிக்க போதிய நேரம் வழங்காமல் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    குஜராத்தில் இதுவரை 4,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.