You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு - ஒரே நாளில் 83 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கபசுர குடிநீர் கொரோனாவை கொல்லுமா?

    கொரோனாவுக்கு சித்த மருத்துவம் எந்த அளவுக்கு பலனளிக்கும்? சித்த மருத்துவர் கு.சிவராமன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்.

  2. கோயம்பேடு சந்தையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா தொற்று, நட்ராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

    சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்குத் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிய விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்களை அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

    இவர்களில் பலருக்கும் நோய்த்தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பிருப்பதாக மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் 53 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய 4 நபர்களுக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், கோயம்பேடு சென்று திரும்பிய 300-க்கும் மேற்பட்டோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

    இவர்களில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மட்டும் 2 குழந்தைகள் உட்பட 25 நபர்களுக்கு இந்நோய் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தவர்களின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனிடையே, கோயம்பேடில் இருந்து திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் வசிக்கும் 11 கிராமங்கள் முழுவதும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37 நபர்களில், 26 நபர்கள் குணமடைந்துள்ளனர். இதில், நேற்றுவரை கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய 9 நபர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கோயம்பேடு சென்று திரும்பிய 700-க்கும் மேற்பட்டோர் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாவட்ட சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை இந்நோய்த் தொற்றினால் 9 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு சென்று திரும்பிய 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பியவர்களைக் கண்டறிய அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது மட்டுமில்லாமல், கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டுமென வருவாய்த் துறையினர் சார்பாக ஒலிபெருக்கிகள் மூலம் வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது.

  3. தமிழகத்தில் ஊரடங்கு மீறல்: 3.76 லட்ச வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்து 34 ஆயிரத்து 438 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 3 கோடியே 90 லட்சத்து 23 ஆயிரத்து 419 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  4. கொரோனாவை 60 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த பெண்

    கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை.

    உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட்து என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.

  5. "சென்னையில் கொரோனவை தடுக்க பொது மக்களும் பங்கேற்க வேண்டும்''

    சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை குறைக்க பொது மக்கள் தங்களது வீடுகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்றும் பொது இடங்களில் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    சென்னையில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கொரோனா எண்ணிக்கையை குறைக்க பொது மக்களின் பங்கேற்பு அவசியம் என்றார்.

    ''பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக மக்கள் மாஸ்க் அணியவேண்டும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் என கொரோனா பரவலை குறைக்க போராடும் அரசு அதிகாரிகளை ஊக்குவிக்கவேண்டும். அவர்கள் பலரும் மாஸ்க் அணிந்து, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் முழு முயற்சியுடன் பணிசெய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பொது மக்கள் கொரோனவை தடுக்க ஒத்துழைக்கவேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். நீங்களும் கட்டாயமாக மாஸ்க் அணியவேண்டும். உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்,''என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    மேலும், ''பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு வராது என்ற அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. பொது மக்களுக்காக வேலை செய்யும் தன்னார்வலர்கள் அவர்களாக முன்வந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு சோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''கோயம்பேடு மட்டுமல்ல, பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் சமூக இடைவெளி தேவை என அறிவுறுத்துகிறோம்,'' என்றார் அவர்.

    மேலும், ''அதிகாரிகள் பேசும்போது முகக் கவசம் அணிந்து பேசவேண்டும் சிலர் பேசும்போது முக கவசத்தை கழற்றிவிட்டு பேசுகின்றனர். அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கண்ட பேசும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்,'' என்றார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை நகரப்பகுதிகளில் உள்ள 742 திருமண மண்டபங்களை தாற்காலிக மருத்துவ முகாம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

    '' ஒரு மாதத்திற்குள் 50,000 படுக்கை வசதி நகரத்தில் ஏற்படுத்தப்படவேண்டும். கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்களை சோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முகாமாக இந்த மண்டபங்கள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமாக இருந்தால், அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். தனிமைப்படுத்தவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைப்போம்,''என்றார் ஆணையர் பிரகாஷ்.

  6. ஐரோப்பிய நாடுகளின் நிலை என்ன?

    • விரைவு ரயில் சேவையான யூரோஸ்டாரில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சில ஜரோப்பிய நகரங்களுக்கு இந்த சேவை இயங்குகிறது.
    • ஜூலை 24ஆம் தேதி வரை தேசிய அவசர நிலை நீட்டிக்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இது கொரோனா தொற்றை தடுக்க சமூக கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசிற்கு அதிகாரம் கொடுக்கும். எனினும், இந்த மாதம் இறுதியில் சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆஸ்திரயாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பே சில கடைகள் திறக்கப்பட்டாலும், தற்போது அனைத்துக் கடைகளும் மீண்டும் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சில நாடுகளுக்கு தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள ஹங்கேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
    • ஜெர்மனியில் வரும் திங்கட்கிழமையில் இருந்து தேவாலயங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் விளளயாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகள் மீது மலர்தூவி மரியாதை

    கொரோனா தாக்கத்தை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை செய்யப்பட்டது.

    இதுபோன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை என நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சிகிச்சை தரும் மருத்துவமனைகள் மீது இவ்வாறு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

  8. தடுப்பூசி இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்

    கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு "உயிர் காக்கும் தடுப்பூசிகள்" கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை விநியோகிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது

  9. சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்கிறது மலேசியா

    ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

    கோவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் எங்கும் பயணிக்காமல், இந்த நோய் தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்களை காவலில் எடுக்கப்பட்டதாக போலீஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோர் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

  10. கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?

    கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி, நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

  11. சென்னை கொரோனா பாதிப்பு பட்டியல்

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

  12. கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவது எப்போது?

    முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட்-19 நோய்த்தொற்று எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

  13. காவல்துறை நினைவுச்சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை

    கோவிட் 19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான போலீஸாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள காவல்துறை நினைவுச்சின்னத்திற்கு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் சுமார் 40 ஆயிரத்தை எட்டிய கொரோனா தொற்று பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 40ஆயிரத்தை தொடவுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,644 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுவரை 39,980 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் 28,046 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

  15. அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்?, கமல் ஹாசன் - விஜய் சேதுபதி உரையாடல்

    சாதியம், தேவர் மகன், ஹே ராம், பா.ஜ.க, காங்கிரஸ் என பல்வேறு விஷயங்களை விஜய் சேதுபதியுடன் பகிர்ந்திருக்கிறார் கமல் ஹாசன்.

  16. பலத்த கண்காணிப்பு

    தமிழகத்தில் திருநெல்வேலி மாநகர எல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட சுப்புராஜ் மில் சோதனைச் சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களின் முறையான அனுமதி மற்றும் மருத்துவ பரிசோதனையைப் உறுதி செய்ய வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  17. கொரோனா வைரசும், இஸ்லாமிய வெறுப்பும், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல்

    கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.

    முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன.

    ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்பவர்களுக்கு 'இந்துக்களின் கடை' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சூடுபிடித்தபோது, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சுகாதார நெருக்கடியின் தற்போதைய கடினமான காலகட்டத்திலும் பிரிவினைவாதம் பரப்புவது ஏன்?

  18. கொரோனா களப்பணியாளர்களுக்கு ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு

    இந்தியாவில் உள்ள மருத்துவப்பணியாளர்கள் மற்றும் கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக களப்பணியாற்றுபவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ அணிவகுப்பு இன்று நடத்தப்படுகிறது.

    இதுகுறித்த அறிவிப்பை முப்படைகள் தளபதியான பிபின் ராவத் நேற்று வெளியிட்டார்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது போர் விமானங்கள் மலர்களை தூவும்.

    மேலும், கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்துவதோடு, கப்பல்கள் வண்ண விளக்கொளியில் மிளிரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் உள்ள மருத்துவமனை முன்பு ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்படும் என்று பிபின் ராவத் கூறினார்.

  19. கிம் திரும்பி வந்ததில் எனக்கு மகிழ்ச்சி - அதிபர் டிரம்ப்

    வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் நல்ல உடல்நிலையும் வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்சுமார் 3 வாரங்கள் கிம் ஜாங் உன், வெளியில் காட்சி அளிக்காமல் இருந்ததால், அவர் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின. இந்நிலையில் நேற்று உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்.இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "கிம் மீண்டும் நல்ல உடல்நலத்துடன் வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.

  20. கொரோனாவால் மன அழுத்தமா? நீங்கள் நிம்மதியாக உறங்க என்ன செய்ய வேண்டும்

    கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

    ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்