You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது - சர்வதேச நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச, இந்திய மற்றும் தமிழக அளவில் நடக்கும் முக்கிய தகவல்களை ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகியவடிவங்களில் பிபிசி தமிழ் தொகுத்து வழங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    தென் கொரியாவில் 75 நாட்களுக்கு பிறகு யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. சீனா மீது மீண்டும் குற்றம் சுமத்தும் டிரம்ப்

    வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தன்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு அந்த நாடு கொரோனா தொற்று பரவலை கையாண்ட விதமே சாட்சி என அமெரிக்க அதிபர் டிரம்ப் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கொரோனா வைரரஸ் தொற்று பரவலை கையாண்ட விதம் குறித்து சீனா மீது டிரம்ப் குற்றம் சுமத்தி வருகிறார்.

    “இதற்கு சீனா பல விதமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டும். என்னால் பல காரியங்களை செய்ய முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனா மீது வர்த்தக போரை தொடுத்ததால் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

  3. ரெம்டிசிவிர் - கொரோனாவை வெல்ல அமெரிக்க மருந்து உதவுமா?

    அறிவியல் உலகில் இருந்து ஒரு நற்செய்தியாக, கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து உயிர்களை காப்பாற்ற ஒரு மருந்து உதவக்கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெம்டிசிவிர் என்றழைக்கப்படும் இது தடுப்பு மருந்தல்ல, நோயாளிகளை இதன்மூலம் உடனடியாக குணப்படுத்த முடியாது.

    ஆனால், அதேவேளையில் இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் உலக அளவில் உள்ள மருத்துவமனைகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் அறிகுறிகள் 15 நாட்களில் தெரியவரும் என்ற தற்போதைய நிலையில் இருந்து 11 நாட்களாக குறைக்க இயலும்.

    இந்த மருந்தின் மருத்துவ விளைவுகள் உறுதிப்படுத்தப்பட்டால், உலக அளவில் மருத்துவமனைகள் மீது தற்போதுள்ள அழுத்தத்தை குறைக்க இது பெரிதும் உதவும் என்றும், எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  4. கொரோனா வைரஸ்: நேற்று நடந்தவை - சில முக்கிய தகவல்கள்

    • வியட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட கொரோனாவால் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
    • கொரோனா தடுப்பு மற்றும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர்.
    • இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 1008ஆக அதிகரித்துள்ளது. 22,982 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,797 பேர் குணமடைந்துள்ளனர்.
    • கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
    • கொரோனா தொற்று காரணமாக உலகில் சரி பாதி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 3,55,603 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3,36,426 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  5. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், கொரோனா செய்திகள் அனைத்தும் ஒரே இணைப்பில்

    சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நடக்கும் முக்கிய தகவல்களை இந்தப் பக்கத்தில் பிபிசி தமிழில் தொகுத்து வழங்குகிறோம்.

    தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடக்கும் அனைத்தும் தகவல்களும் இங்கு ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகிய வடிவங்களில் தொகுத்திருக்கிறோம்.

    இந்நாள் இனிய நாளாக அமையட்டும்.