You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது - சர்வதேச நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச, இந்திய மற்றும் தமிழக அளவில் நடக்கும் முக்கிய தகவல்களை ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகியவடிவங்களில் பிபிசி தமிழ் தொகுத்து வழங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மிதிவண்டி பயன்பாட்டை ஊக்கப்படுத்த தொடங்கும் நாடுகள்

    பல நாடுகளில் பொது முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு மீண்டும் போக்குவரத்து நெரிசல் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக மிதிவண்டியை பயன்படுத்த சில நாடுகள் ஊக்கமளிக்க தொடங்கியுள்ளன.

    பிரான்ஸில் வரும் மே 11-ஆம் தேதி முதல் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து காரணமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என மக்கள் பலரும் கருதுகின்றனர். இதனால் பலரும் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால், மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு எடுத்துள்ளது.

    போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரான பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸெல்சில், 40 கி.மீ தூரத்திற்கு மிதிவண்டி பாதையை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

  2. சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா? - ஓர் அலசல்

    உலகம் முழுவதும் கோவிட்- 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பெருமளவில் சரிந்துள்ள நிலையில், தங்களின் உற்பத்திச் சாலைகளை சீனாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருகின்றன.

  3. பிரேசிலில் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று

    பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 79,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து பிரேசில் அதிபர் போல்சனாரோவிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,’’ அதனால் என்ன? மன்னித்து விடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? ’’ என அவர் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பிரேசிலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மனெளஸ் நகரம் இருக்கிறது. மே மாதம் நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக அந்த நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

  4. பிற நாடுகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முயற்சி

    கொரோனா தொற்றின் காரணமாக பிற நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க, தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சில நாடுகள், குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு முதலீடுகளைச் செய்துள்ள ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியா போன்ற நாடுகளுக்கு வர முடிவுசெய்திருப்பதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.

    ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களைக் கவனித்து அவற்றை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு துவங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலர் தலைமையில், "முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு" ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.

    இந்தக் குழுவில் தென் கொரியா, தைவான், ஜப்பான், சிங்கப்பூர், அமரிக்கா ஆகிய நாடுகளின் தொழில் கூட்டமைப்புகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் ஆகிய துறைகளின்செயலாளர்கள், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வணிக வரித்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

    இடம்பெயர வாய்ப்புள்ள தொழில்நிறுவனங்களைக் கண்டறிதல், அவற்றை தமிழகத்திற்கு ஈர்த்து, விரைவாக ஒற்றைச் சாளர அனுமதியை அளிப்பதற்கான வழிமுறையைக் கண்டறிதல், சிறப்புச் சலுகைகளை அளித்தல், அவற்றை ஈர்ப்பதற்கு வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்களைகண்டறிதல் ஆகியவற்றை இந்தக் குழு கண்டறிந்து, தனது முதற்கட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளிக்கும்.

  5. சர்வதேச நிலவரம் - காணொளி வடிவில்

    அறிவியல் உலகில் இருந்து வரும் நற்செய்தியாக, கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து உயிர்களை காப்பாற்ற ஒரு மருந்து உதவக்கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  6. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரத்து 747 பேர் கைது

    ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 75 ஆயிரத்து 747 பேர் கைதாகி, விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 71 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

    ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக, 3 லட்சத்து 9 ஆயிரத்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுவரை 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் தொடர்புடைய 134 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள் மற்றும் 32 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 178 வாகனங்கள்பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

    மேலும், போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், போக்குவரத்து விதிமீறல்தொடர்பாக 283 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 1 இலகு ரக வாகனம் என மொத்தம் 290 வாகனங்களைபறிமுதல்செய்துள்ளனர்.

  7. மே 3க்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விரைவில் அறிவிக்க தி.மு.க. கோரிக்கை

    கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்பதையெல்லாம் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென தி.முக. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

  8. மத்திய சுகாதாரத்துறையின் தகவல்

  9. "ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி தேவைப்படும்"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் கலந்துரையாடினார். இதில் குறிப்பாக தற்போதைய சூழலில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கம் மற்றும் அதன் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    அவர்கள் உரையாடலின் சில முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீண்டகாலத்திற்கு உணவு வழங்கிட முடியாது எனவே ஊரடங்கை தளர்த்துவதை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.
    • பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவைப்படும் ஆனால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்போது அதை ஒப்பிட்டால் இது பெரிய தொகை இல்லை.
    • நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும். ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்துவது எளிது ஆனால் அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • தற்போதைய சூழலை இந்தியா தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலிக்கான ஒரு வாய்ப்பாக இதை மாற்றிக் கொள்ள முடியும்.
    • இந்த நெருக்கடியிலிருந்து வெளிவந்த பிறகு உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சூழல் ஏற்படும்.
    • சவால்கள் பெரிதாக இருக்ககூடிய சமயத்தில் நாம் பிரிந்திருக்க முடியாது. தற்போதைய சூழலில் சமூக ஒருமைபாடே முக்கியம்.
  10. தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட நியூயார்க் மருத்துவர்

    கொரோனா வைரஸ் போராட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார் இந்த நியூயார்க் மருத்துவர்.

  11. கடைகளில் குவியும் மக்கள்

    சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் கூடியுள்ளனர்.

  12. க்யூபா மீது குற்றம் சுமத்தும் அமெரிக்க வெளியுறவுச் செயலர்

    க்யூபாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஞாயிறன்று தென் ஆப்ரிக்காவிற்கு சென்றனர்.

    எனவே க்யூபா மருத்துவர்களை அழைத்தமைக்காக அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தென் ஆப்ரிக்காவை விமர்சித்துள்ளார்.

    ”கொரோனா தொற்று பரவல் சூழலில் க்யூபா லாபம் ஈட்டி வருகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

    “க்யூபாவின் குற்றத்தை பிரேசில், ஈக்வேடார் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் கண்டுகொண்டதால் அந்நாட்டின் தலைவர்களை பாராட்டுகிறேன்,”

    “கத்தார் மற்றும் தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளும் இதையே செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    க்யூபாவின் சர்வதேச மருத்துவ ஒத்துழைப்புகள் குறித்து அமெரிக்கா எப்போது பொய் குற்றச்சாட்டுகளையே கூறிவருகிறது என அந்நாட்டின் அதிபர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  13. ஜெர்மனியில் அதிகரிக்கும் எண்ணிக்கை

    ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1478 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நான்காவது நாட்களாக புதிதாக தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

    தற்போது அந்நாட்டில் கொரோனா தொற்றுக்கு 34 ஆயிரத்து 672 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த வாரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜெர்மனி தளர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  14. விழுப்புரத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று.

    விழுப்புரத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் சிவப்பு மண்டலமாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நோய்த் தொற்று இல்லாத மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்று வந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர், தனது மனைவியைச் சந்திக்க கடந்த வாரம் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.

    கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவியைச் சந்தித்து, சில தினங்கள் அங்கேயே தங்கியுள்ளார். பிறகு, கடந்த திங்கட்கிழமை அன்று விழுப்புரம் திரும்பியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து வெளி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட காரணத்திற்காக நேற்று அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆகவே, தற்போது அவரை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பெற்றுக்கொண்ட புறநோயாளிகளிடம் இருந்து இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய, அவரிடம் சிகிச்சை பெற்றவர்களைப் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

    மேலும், அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பரிசோதனை செய்ததில், அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதியானது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, ஒருவர்கூட பாதிக்காத கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மருத்துவர் செல்ல எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு, "கொரோனா எதிரொலியால் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒவ்வொருவரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்காலம் முடிந்தபிறகு 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட மருத்துவர் கிருஷ்ணகிரி செல்வதற்கு முன்பு தன்னை தனிமைப்படுத்திய பிறகே அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்." என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மருத்துவர் மூலமாகக் கிருஷ்ணகிரியில் உள்ள மனைவிக்குத் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், அவரது மனைவி அரசு மருத்துவர் என்பதால் கடந்த சில நாட்களில் அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்நோய்த் தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர் வந்து சென்ற காரணத்தினால், அவரது உறவினர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," எனக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

  15. இயல்பு நிலையில் தென் கொரிய மக்கள்

    தென் கொரியாவில் கடந்த வாரம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன மேலும் அந்நாட்டில் இன்று புதிதாக யாருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே சோலில் உள்ள ஹான் நதிகரையோத்தில் உள்ள பூங்காவில் தேசிய விடுமுறையில் மக்கள் கொண்டாடினர்.

  16. இந்தியாவில் அண்மைய நிலவரம் என்ன?

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 67 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1074-ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே, இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

  17. கட்டுப்பாட்டு பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

    கட்டுப்பாட்டு பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்திருந்த டிவிட்டர் செய்திகள்.

  18. PLASMA சிகிச்சை கொரோனாவை குணப்படுத்துமா?

    பிளாஸ்மா சிகிச்சை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.

  19. தேவைகளே புதிய கண்டுபிடிப்பிற்கு வித்திடுகிறது

    இந்தியாவின் மாநிலத்தை சேர்ந்தவர் தனது மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல கண்டுபிடித்த வாகனம் இது.

    பள்ளிக்கு அழைத்து செல்ல வாகனம், அதில் சமூக இடைவேளி என அசத்தும் இவரின் கண்டுபிடிப்பை அம்மாநில முதல்வரும் பாராட்டியுள்ளார்.

  20. மாலத்தீவில் கொரோனா தொற்றால் முதல் உயிரிழப்பு

    மாலத்தீவில் கொரோனா தொற்றால் முதன்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 83 வயது முதியவர்.

    மாலத்தீவில் இதுவரை 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.