You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாட்டில் 5 மாநகரங்களில் மட்டும் முழு ஊரடங்கு ஏன்? - சுகாதார அமைச்சர் பதில்

சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பணி நீட்டிப்பு

    தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும், ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாத காலம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  2. புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

    புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    புதுச்சேரியில் கொரோனா தொற்றினால் இதுவரை 7 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இந்நிலையில், இன்று 18 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இந்நோய்த்தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,14 நாட்களுக்குப் பிறகு அவரது மகனுக்கும் இந்நோய்த் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றினால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

  3. அறிகுறிகள் இல்லாமல் வரும் கொரோனா தொற்று - என்ன சிக்கல்?

    கொரோனா பிரச்சனை முடிந்து எப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்புவது என மக்கள் கலங்கும் நிலையில் கொரோனா விவகாரத்தில் Asymptomatic எனும் புதிய சிக்கல் குடைச்சலைக் கொடுக்கத் துவங்கியுள்ளது. அது என்ன Asymptomatic?

  4. உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் கூட்டம் கூட தடை

    உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 30 வரை பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    சூழ்நிலையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  5. "இந்தியப் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”, ராம் மாதவ், பாஜக பொதுச் செயலர்

    கொரோனா சவால் முறியடிப்பதில் ஜனநாயக செயல்பாட்டில் இந்தியா ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. தன் சக அமைச்சர்களுடன், இதில் பிரதமர் நரேந்திர மோதி வழிநடத்திச் செல்கிறார். மக்களின் முழுமையான ஆதரவுடன் முடக்கநிலை அமல் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தலை வெற்றிகரமாக அவர் செயல்படுத்தியுள்ளார்.

    1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில், 18 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானவர்கள் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையான அல்லது சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகள் எதையும் மோதி எடுக்கவில்லை.

    இஸ்லாமியர்கள் மீது புகார் கூறும் வகையிலான, வேண்டுமென்றே, துவேஷத்தை ஏற்படுத்தும், தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நிகழ்வுகளும் இருந்தது. அதுபோன்ற, சமயங்களில் மோதி அமைதி, பொறுமையை கடைபிடித்து, நேர்மறை சிந்தனையுடன் செயல்பட்டார்.

  6. தமிழகத்தில் ஐந்து நகரங்களில் முழு ஊரடங்கு

    சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகிறது. இதன்போது மருந்துக் கடைகள் தவிர பிற கடைகள் இயங்காது.

    சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 26 முதல் 28 வரை காலை 6 மணி முதல் மாலை 9 வரை மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகும்.

    ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறிகள் மற்றும் அதியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். அதே போன்று, மதுரை பிபி குளம் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

  7. அனைத்து மதத்தினருக்கும் அடைக்கலம் தரும் ஆந்திரா கோயில்கள்

    மனித வரலாற்றில் தற்போது புதிய சகாப்தம் நடந்து வருகிறது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது.

    இந்த சூழலில் பள்ளிகள் மற்றும் கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்ளாக மாறி வருகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் பிரபல கோயில்களான திருமலை-திருப்பதி, ஸ்ரீகாலஹஸ்தி, கனிபாகம் போன்ற சில கோயில் நிர்வாகங்கள் தங்களுக்கு சொந்தமான சில கட்டடங்களை கோவிட்-19 நோயாளிகளை தங்க வைக்கும் இடங்களாக மாற்றியுள்ளன. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், இங்கே தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்து , இஸ்லாமியர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சில வெளிநாட்டவர்களும் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிலர் இந்த கட்டடங்களில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

  8. புதிய பரிசோதனைக் கருவிகளுக்கு இந்திய மருத்துவ கழகம் ஒப்புதல்

    டெல்லி ஐஐடி உருவாக்கிய, புதிய கோவிட் 19 வைரஸ் பரிசோதனை கருவிகளுக்கு இந்திய மருத்துவக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    “ஜனவரி மாத இறுதியில் இந்த பரிசோதனைக்கருவிகளை உருவாக்கும் முயற்சியை துவங்கினோம். குறைந்த விலையில் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்ய உதவும் நோக்கத்துடனே இது தயாரிக்கப்பட்டது” என டெல்லி ஐ.ஐ.டி-யின் பேராசிரியர் பெருமாள் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கோவிட் 19 வைரஸ் பரிசோதனை கருவிகளுடன் ஒப்பிடுகையில், இதற்காக ஆகும் செலவு மிகவும் குறைவு என அவர் மேலும் கூறினார்.

  9. TB தடுப்பூசியால் இந்தியர்களுக்கு கொரோனா வராதா?

    பிசிஜி தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என இதற்கு ஆதாரமாக அமெரிக்க கல்லூரி ஒன்றில் வெளியான ஆய்வையும் சுட்டிக்காட்டி சிரியா, இந்தியா என பல நாடுகளில் இப்போதும் ஒரு தகவல் உலவுகிறது. ஆனால் அந்த ஆய்வு சொல்வதென்ன? இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

  10. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் பலி

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக1429 பேருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 775 பேர் பலியாகியுள்ளனர்.

    சுமார் 18 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  11. பெண்கள் ஆளும் நாடுகளில் தொற்று கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

    நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.

    மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன.

  12. 'கொரோனா தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்'

    தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அனைவருக்கும் சென்று சேரும் மருந்தாக இருக்கவேண்டும் என ஐ. நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் கோவிட் 19 வைரசுக்கான சிகிச்சையாக இருக்கும் என்று கருதப்படும் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    "கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தி உலகளாவிய பொது நலத்தை கருத்தில் கொண்டு, அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதோடு குறைவான விலையில் கிடைக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

    ''தடுப்பு மருந்து குறித்த தரவுகள் பகிரப்பட்ட வேண்டும். அரசியல் மோதல்களுக்கு அப்பாற்பட்டு உலகளவில் அனைத்து நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இது மக்களின் உயிரை காப்பாற்ற நாம் நடத்தும் போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் வலிமையுடன் வெற்றி பெறுவோம்'' என்றும் அன்டோநியோ குட்டரஸ் கூறினார்.

    ''இந்த தடுப்பு மருந்து ஒரு நாட்டுக்காகவோ ஒரு பகுதி மக்களுக்கானதாகவோ இருக்கக் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையவேண்டும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

  13. "கிருமிநாசினி ஊசி" - அதிபர் டிரம்பின் யோசனை அபத்தமாக இருப்பதாக மருத்துவர்கள் கருத்து

    கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

    அதிபர் டிரம்பின் இந்த கருத்து அபத்தமாக இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தினால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில், அது “கிண்டலாக” சொல்லப்பட்டது என்று தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

    எனினும், அதிபரின் பேச்சை சிலர் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  14. மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள்

    கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பசியின் காரணமாக உலகம் முழுவதும் அடுத்த பெருந்தொற்று பரவல் போன்ற நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா பரவலால், உணவின்மை காரணமாக உலக அளவில் பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள நாடுகளாக ஐந்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை:

    • ஏமன்
    • காங்கோ ஜனநாயகக் குடியரசு
    • வெனிசுவேலா
    • தெற்கு சூடான்
    • ஆஃப்கானிஸ்தான்
  15. கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு

    கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய தனிப்பட்ட சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அந்நாடு கூறுகிறது.

    கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சீனாவின் கவனத்தை இது திசைத்திருப்பும் என்றும் இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பிரிட்டனுக்கான சீனாவின் துணை தூதர் சென் வென் பிபிசியிடம் தெரிவித்தார்.

    கோவிட் 19 தொற்று எங்கிருந்து தோன்றியது, முதலில் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த தகவல் தெளிவாக கிடைத்தால், இத்தொற்றை கையாள உலக நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்ற விவாதம் இருக்கிறது.

    கடந்த ஆண்டு சீனாவின் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு இறைச்சி சந்தையில்தான் முதன்முதலில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் தொற்று குறித்து சீனா தவறான தகவலை பரப்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அருகில் உள்ள நாடுகளை குறிவைத்து நடத்தப்பட்ட சதி இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பும், சீனா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

    ஆனால், இது வுஹான் ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வைரஸ் என்ற கூற்றுக்கு பல விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில்தான், சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பது குறித்து பேச்சு எழுந்தது.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள வருடாந்திர உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

    “இந்த விசாரணைக்கு ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தற்போது நாங்கள் வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வருகிறோம். அதில்தான் எங்கள் கவனம் உள்ளது. விசாரணை குறித்து தற்போது ஏன் பேச வேண்டும்? இதனால் எங்கள் கவனம் திசை திருப்பப்படும். விசாரணையால் எந்த பலனும் இல்லை” என்று சென் வென் கூறியுள்ளார்.

  16. கொரோனா வைரஸ்: நேற்று நடந்த சில முக்கிய விஷயங்கள்

    • கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் உயிரிழப்புகள் 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
    • கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டி வைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது.
    • சூரிய வெளிச்சமும், கிருமிநாசினியும், வைரஸ் தொற்றை கொல்லும் என்று அதிகாரி ஒருவர் கூறியதையடுத்து, கோவிட்-19 சிகிச்சைக்காக கிருமிநாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தும் வாய்ப்பை பரிந்துரைத்திருத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் அதிகம் செய்லபட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.
    • தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக சில நகரங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
  17. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.