நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் உயிரிழப்புகள் 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக மரணங்கள் நடந்துள்ளன. மேலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து, 69 ஆயிரத்தை கடந்துள்ளது.
மார்ச் மாதம் வரை இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாத தொடக்கம் முதலே அமெரிக்காவில் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,691ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 88 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்த 121 கோவிட்-19 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 3,663 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும், இது பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 64.36 விழுக்காடு என்றும் மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது 1,932 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 114 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ளது.
1846 பேர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 114 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட பணிகளுக்காக பயன்படுத்துவதற்கான அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள், குவிந்ததால் பழைய நடவடிக்கையே தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஏற்கனவே பலருக்கும் அத்தியாவசியப் பணிகளுக்காக பாஸ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை வீதிகளில் அதிகரித்தது. ஆகவே, புதிதாக க்யூ - ஆர் கோடுடன் பாஸ்களைப் பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்த பாஸ் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்படுமென தகவல் வெளியானதும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.சமூக இடைவெளி ஏதும் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாலும் பலர் பாஸ்களை வாங்க முண்டியடித்தனர்.
காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் மேலும் மேலும் ஆட்கள் வாகனங்களுடன் குவிந்ததால், ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் அடைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, பழைய முறையே கடைப்பிடிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று ஒரு பெண் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை இரவு வரை எல்லாக் கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் 3 ஆண் காவலர்கள் மற்றும் 3 பெண் காவலர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக, வேறு இடத்தில் காவல்நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களோடு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1684 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,077-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்தியாவில் கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து குணமடைபவர்கள் 20.57 சதவீதமாக உள்ளதாக லாவ் அகர்வால் மேலும் தெரிவித்தார்.
கடந்த 28 நாட்களில் இந்தியாவில் 15 மாவட்டங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மாஸ்க், கையுறை, பிபிஇ என்றழைக்கப்படும் மருத்துவ பாதுகாப்பு சாதனம் போன்றவை முக்கியமாக தேவைபப்டும் நிலையில், பிரிட்டனுக்கு மிகவும் எதிர்பாராத வகையில் ஓர் உதவி கிடைத்துள்ளது.
வியட்நாமை சேர்ந்த இரண்டு குழந்தைகள் கிட்டத்தட்ட 20,000 மருத்துவ மாஸ்குகளை (முகக்கவசம்) பிரிட்டனுக்கு தானமாக அளித்துள்ளனர்.
வியட்நாம் தலைநகர் அருகே வசிக்கும் ஹான் மற்றும் கோய் என்ற அந்த குழந்தைகள் தாங்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் இந்த முககவசங்களை வாங்கியுள்ளனர்.
வியட்நாமுக்கான பிரிட்டன் தூதரான கேரத் வார்ட் இந்த குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாஸ்க்குகள் பத்திரமாக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் சிட்னி நகரில் மூன்று கடற்கரைகள் இந்த வாரத்தில் திறக்கப்பட்டன.
இந்நிலையில் அங்கு மக்கள்கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதை தொடர்ந்து, மீண்டும் அந்த கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மக்கள் அதிக அளவில் அலைச்சறுக்கு விளையாட வருவதாகவும், இதனால் தனிநபர் இடைவெளியை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது வரை அந்நாடில் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 79 விழுக்காடு தொற்றுகள் உள்ளூர் பரவல் மூலம் ஏற்பட்டவையாகும்.
இங்கிலாந்தின் கோடை காலமான மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதுண்டு.
இந்தாண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
தற்போது குறைந்தது ஜூலை 1 வரை ஆண்டுதோறும் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரியான டாம் ஹாரிசன் இது குறித்து கூறுகையில், ‘’கோடைக்காலம் முடியும் சமயத்திலாவது கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில், எந்த கிரிக்கெட் போட்டி நடத்தவும் சாத்தியமில்லை. விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் எந்த ஆபத்துமில்லை என்ற நிலையில் மட்டுமே விளையாடுவது நல்லது’’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக சில நகரங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமென அரசு கருதுவதால், குறிப்பிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும் 26ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை - காலை முதல் 29ஆம் தேதி - புதன்கிழமை - மாலை 9 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருப்பூர் பகுதிகளில் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படும்.
இந்த காலகட்டத்தில் மருத்துவமனை போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏடிஎம்கள் இயங்கும்.
உணவகங்களில் இருந்து தொலைபேசி மூலம் உணவுகளை ஆர்டர் செய்து பெறலாம்.
ஆதரவற்றோருக்காக இயங்கும் சமூக சமையல்கூடங்கள் தொடர்ந்து இயங்கும்.
கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் செயல்படும். காய்கறிகளை விற்க நடமாடும் காய்கறிக்கடைகள் அனுமதிக்கப்படும்.
மற்ற கடைகள், பணிகள் அனைத்தும் மூடப்படும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அடுத்த இரு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 29 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 14 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 25, 26 ஆகிய இரு நாட்களிலும் முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள கடைகள், சந்தைகள், உணவகங்கள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை முழுமையாக மூடப்படவிருக்கின்றன.
இந்த ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியில் வரக்கூடாது எனவும் மீறி வெளியில் வருபவர்கள் கைதுசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதற்குப் பிறகு திங்கட்கிழமை முதல் வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டுமென்றும் தவறினால் அபராதம், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டங்களைப் பறக்கவிடக்கூடாது என்றும் சலூனிலோ, தனியாகவோ சென்று முடி திருத்தம் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில், கோவிட் 19 நோயாளிகள் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுக்கான பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் முடிவுகள் ஊக்கமளிக்கும் விதத்தில் இருப்பதாகவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
குறைவான அளவில் மட்டுமே இந்த சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் கேஜ்ரிவால், அடுத்து வரும் தினங்களில் தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி பெறப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டி வைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது.
சீனாவில் ரெம்டிசிவிர் என்ற அந்த மருந்தை கொண்டு நடத்தப்பட்ட சோதனை, தோல்வியில் முடிந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
237 நோயாளிகளில் சிலருக்கு ரெம்டிசிவிர் மருந்தும், சிலருக்கு அதன் மாதிரியும் ஒரு மாத காலத்திற்கு செலுத்தப்பட்டது.
ஆனால் ரெம்டிசிவிர் மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளில் 13.9 விழுக்காட்டினர் மரணத்தை தழுவினர். அந்த மருந்தின் மாதிரி செலுத்தப்பட்டவர்கள் 12.8 விழுக்காட்டினர் மரணித்தனர்.
மேலும் பக்க விளைவுகள் காரணமாக இந்த சோதனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த மருந்திற்கு பின்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான கிலீட் சைன்சஸ் நிறுவனம், இந்த ஆய்வை உலக சுகாதர நிறுவனம் தவறாக சித்தரித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை கொரோனா வைரஸ் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் நடத்திய உரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"நம் பாதையில் கொரோனா வைரசால் பல சவால்களை சந்தித்து இருக்கிறோம். ஆனால், இதுபோன்ற சூழலில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை இந்த சூழல் கற்றுக் கொடுத்துள்ளது" என்று பிரதமர் மோதி கூறினார்.
நகரங்களை விட, கொரோனா வைரஸ் தொற்றை கிராமங்கள் சிறப்பாக கையாண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் அட்ஜே மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் ரமலான் மாத தொழுகைக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடினர்.
சமூக கட்டுப்பாடு வழிமுறைகளுக்கு எதிராக இடைவெளி இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அருகில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
"கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சம் இருந்தாலும், அதனால் என் தொழுகையை செய்யாமல் இருக்கமாட்டேன். நாம் சுத்தமாக இருந்து, தனிப்பட்ட சுகாதார முறையை பராமரிப்பது முக்கியம்" என்கிறார் பிபிசி இந்தோனீசிய சேவையிடம் பேசிய புட்ரி சாரா.
இந்தோனீசிய அரசு விதிக்கும் விதிமுறைகளை விட உள்ளூர் மதகுருக்குள் வெளியிடும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்குதான் அட்ஜே மாகாண மக்கள் கவனம் அளிப்பார்கள் என சியா குவாலா பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் மரினி கிரிஸ்டியானி கூறுகிறார்.
இந்தோனீசியாவில் இஸ்லாத்தின் ஷிரியா சட்டத்தை பின்பற்றும் ஒரே மாகாணம் அட்ஜே. இன்னும் அங்கு பொதுவெளியில் கசையடிகள் கொடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த செவ்வாயன்று கூட, இஸ்லாமிய விதிகளை மீறியதற்காக ஆறு பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தார்.
உண்மையில் ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து முழுமையாக மீள எவ்வளவு நாளாகும்? கொரோனாவால் உடலுக்கு நீண்டகால பாதிப்புகள் உண்டா?