சமீபத்திய செய்திகள் என்ன?
கோவிட்-19 குறித்த சமீபத்திய உலகளாவிய செய்திகள் குறித்து கீழே உள்ள இணைப்பின் மூலம் அறியலாம்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 குறித்த சமீபத்திய உலகளாவிய செய்திகள் குறித்து கீழே உள்ள இணைப்பின் மூலம் அறியலாம்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கோவிட்-19 நோய்த்தொற்றால் அமெரிக்காவில் இறந்த 100 வயது நபர், தனது இரட்டை சகோதரரை 1918 ஃப்ளு காய்ச்சலால் இழந்தது தெரியவந்துள்ளது.
தற்போது இறந்த பிலிப்பின் சகோதரர் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் ஃப்ளு என்றழைக்கப்படும் தொற்றால் இறந்ததை பிலிப்பின் பேரன் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
பிலிப் மற்றும் சாமுவேல் கான் என்ற இந்த இரட்டையர் 1919-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியன்று பிறந்தவர்கள் ஆவர்.
பிறந்து இரண்டே வாரத்தில் ஃப்ளு காய்ச்சல் பாதிப்பால் சாமுவேல் இறந்துள்ளார்.
‘’தனது இரட்டை சகோதரர், 1918 ஃப்ளு தொற்றால் இறந்ததை என்னிடம் கூறிய என் தாத்தா, தனது வாழ்நாளில் நிச்சயம் மீண்டும் ஒரு பெரும் நோய்த்தொற்று தாக்கம் இருக்கும் என்று கூறுவார்’’ என்று பிலிப்பின் பேரன் வாரன் ஜிஸ்மேன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் விமான போக்குவரத்து கட்டணம் கடுமையாக சரிந்துள்ளது.
மிக குறைந்த அளவே தற்போது அங்கு விமானங்கள் இயங்கி வரும் சூழலில், கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு விமான கட்டணங்கள் குறைந்துள்ளன.
அதேபோல் அமெரிக்காவை உள்ளடக்கிய வட அமெரிக்க கண்டத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் விமான சேவை நிறுவனங்கள் மிக பெரிய அளவில் கட்டணங்களில் சலுகைகளை அறிவித்துள்ளனர்.
இதேபோல், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலும் விமான கட்டணங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.

பட மூலாதாரம், EPA
ராமநாதபுரத்தில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணியாற்றிவந்த உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.இந்நிலையில் செவிலியர் ஒருவருக்கு இன்று (ஏப்ரல் 22) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தொற்று உறுதியான செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இதில் செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாவட்டத்தில் முதன் முறையாக மருத்துவப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சுகாதாரத்துறையினர் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சீல் வைத்தனர். மேலும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிக்கு போலீஸார் நிறுத்தப்பட்டனர். செவிலியருடன் பணிபுரிந்த இரண்டு செவிலியர்கள், ஒரு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியருடன் வீட்டில் தங்கியுள்ள உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
செவிலியர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது கணவரைப் பார்க்க சுகாதாரப் பணியாளர்களுக்காக விடப்பட்டுள்ள சிறப்பு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார்.
மேலும் நேற்று ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்த சுகாதாரப் பணியாளர்களுக்கான கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
எனவே இவருடன் பேருந்தில் பயணித்தவர்கள், சுகாதாரத்துறை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்ய ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்..

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் மேலும் 1,037 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இன்று நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 21 பேர் மட்டுமே சிங்கப்பூரில் நிரந்தர தங்கும் உரிமைப் பெற்றவர்கள் ஆவர். மற்ற அனைவருமே தங்குவிடுதிகளில் தங்கியுள்ள அந்நியத் தொழிலாளர்கள் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்குவிடுதிக்கு வெளியே தங்கியுள்ள தொழிலாளர்கள் மத்தியிலும் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் பலியானோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது என்றும், சமூக தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இந்தோனீசியாவில் இருந்து மெத்தை, கட்டில், தலையணை உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 4,500 மெத்தை, கட்டில்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் இன்று (ஏப்ரல் 22) இரவு அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது. முந்தைய அறிவிப்பின்படி, ஏப்ரல் 28ஆம் தேதியுடன் இந்த ஆணை முடிவுக்கு வர இருந்தது.
இந்நிலையில் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் இன்று இரவு உரையாற்றிய அவர், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பல்வேறு துறைகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றார்.
இதற்கிடையே மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 90 நோயாளிகள் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
"கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,603. தற்போது இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சென்னை நகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 54 பேரையும் சேர்த்து, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் குணமடைந்து மருத்துமனைகளில்இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, மாநிலத்தில் 752 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சிறிய அளவில் குறைந்துள்ளது. புதன்கிழமைவரை 948 பேர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 908ஆகக் குறைந்துள்ளது.
இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. 23,303 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 106 பேர் அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
கொரோனா நோய் இருக்கலாம் என்ற அறிகுறிகளுடன் 1787 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் செய்யப்படும் சோதனைகளின் அளவு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இன்று 6,954 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.இதுவரை 65,977 மாதிரிகள் தமிழகத்தில் சோதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்த தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு இந்நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்துவருகிறது. இந்தப் போக்கு தொடருமா?
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மாலைவரை, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629ஆக உள்ளது.
ஆனால், கடந்த பத்து நாட்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது ஒன்றிரண்டு நாட்களைத் தவிர, சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவது தெரிகிறது.
இதுகுறித்து மேலும் படிக்க, இங்கே சொடுக்கவும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான அடுத்த கட்டத்தில் நாட்டின் அனைத்து தரப்பினரும் “புத்திசாலித்தனமான, எச்சரிக்கையுடன்” கூடிய அணுகுமுறையை தொடர வேண்டுமென்று ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்
இன்று (வியாழக்கிழமை) ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இது கொரோனா வைரஸுக்கு எதிரான போரின் முடிவல்ல, வெறும் தொடக்கம்தான். இதை எதிர்த்து நாம் நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
"கட்டுப்பாடுகள் எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும், இது ஜனநாயகத்திற்கு ஒரு சவால், இது நமது ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகிறது" என்று அவர் கூறினார். ஆனால், பத்திரிகை சுதந்திரம் போன்றவை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தது, சூழ்நிலையை சகித்துக்கொள்ள உதவியது என்று அவர் கூறினார்.
மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பிய கண்டம் சந்தித்து வரும் இந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், AFP
இன்றைய நிலவரப்படி, நாட்டின் 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்கு கூட கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போன்று, 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
"மார்ச் 23ஆம் தேதி வரை, இந்தியா முழுவதும் 14,915 கோவிட்-19 நோய்த்தொற்றை உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இன்றைய நிலவரப்படி, அது ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, கடந்த 30 நாட்களில் 33 மடங்கு பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். இதை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் நடைமுறையில் உள்ள சில சமூக விலக்க கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிவரை தொடர கூடும் என்று அந்த நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்ப்பது “முழுக்க, முழுக்க சாத்தியமில்லாதது” என்று கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.
“மிகவும் பயன்தரத்தக்க தடுப்பூசி” அல்லது மருந்துகளே தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றக் கூடியது என்றும், ஆனால் அது அடுத்த ஆண்டிற்குள் நடப்பதற்கான வாய்ப்பு “மிகவும் குறைவு” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததால், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்நிலையில், சன்னா மரினுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லையென்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
34 வயதான சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளவயது அரசு நிர்வாக தலைவராக உருவெடுத்தார்.

பட மூலாதாரம், EPA
கோவிட்-19 நோய்த்தொற்றால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000 கடந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஸ்பெயினில் கொரோனா வைரஸால் 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, ஸ்பெயினில் 2,13,024 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 22,157 உயிரிழந்துள்ளனர்; 89,250 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவது போல் இருந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், LI ZEHUA / YOUTUBE
வியாழக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைதாகி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வலம்வந்த 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.2 கோடியே 68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.1 கோடியே 46 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது குறித்தும் டிவிஎஸ் குழுமம், முருகப்பா குழுமம், ராம்கோ சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், CII, தோல் ஏற்றுமதி குழுமம் ஆகிய தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

பட மூலாதாரம், @CMOTamilNadu
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை அன்று 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,094ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அங்கு 1,48,046 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை.
உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட்து என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு