தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?

தமிழ்நாடு - மாஸ்க் அணிந்த நபர்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்துவருகிறது. இந்தப் போக்கு தொடருமா?

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மாலைவரை, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629ஆக உள்ளது. ஆனால், கடந்த பத்து நாட்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது ஒன்றிரண்டு நாட்களைத் தவிர, சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதாவது Active நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவது தெரிகிறது.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இந்நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே (19ஆம் தேதி மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டார்கள்) இருந்துவருகிறது. 'ஆக்டிவ்' நோயாளிகள் எனப்படும் மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துவருகிறது.

தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையிலிருந்து குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைபோக மீதமிருப்பவர்கள் "ஆக்டிவ்" நோயாளிகள் என அழைக்கப்படுகிறார்கள்.

ஏப்ரல் 14ஆம் தேதி 1,111ஆக இருந்த இந்த எண்ணிக்கை, படிப்படியாகக் குறைந்து ஏப்ரல் 18ஆம் தேதி 992 இருந்தது. ஆனால், 19ஆம் தேதி 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் இந்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 1048ஆக உயர்ந்தது.

Banner image reading 'more about coronavirus'

அதற்குப் பிறகு, தொடர்ச்சியாகக் குறைந்து புதன்கிழமை நிலவரப்படி 946ஆக உள்ளது. இந்த 946 நோயாளிகளும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதுதான். துவக்கத்தில் தினமும் ஒன்றிரண்டு பேரே குணமடைந்து வெளியேறிய நிலையில், இம்மாத மத்தியிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. சில நாட்களில் 150க்கும் மேற்பட்டவர்கள்கூட குணமடைந்து வெளியேறினர்.

Sorry, your browser cannot display this map

இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

இப்படி நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதை வைத்து தமிழ்நாடு மெல்ல மெல்ல கொரோனாவின் பிடியிலிருந்து வெளிவருவதாகச் சொல்ல முடியுமா? தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் இது குறித்து மிகக் கவனத்துடன் பேசுகிறார்கள்.

கொரோனா வைரஸ்

"உடனே அப்படிச் சொல்லிவிட முடியாது. கடந்த வாரத்தில்கூட 30-40 என இருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென 70-100 என அதிகரித்தது. ஆகவே இப்போதே இந்நோயைக் கட்டுப்படுத்திவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைய முடியாது" என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் இந்நோயால் இறப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று என்கிறார்கள் அவர்கள். பெரும் எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் மாநிலங்களில், மரணடைவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இதுவரை மகாராஷ்டிராவில் 269 பேரும் குஜராத்தில் 103 பேரும் தில்லியில் 48 பேரும் ராஜஸ்தானில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 18ஆக உள்ளது. இந்திய அளவில் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 3.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.1ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கான சோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், அஞ்சத்தக்க அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லையென்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: