You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்; மோதியை பாராட்டிய பில்கேட்ஸ், தமிழக செய்திகள் என்ன?

பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, சுகாதார பணியாளர்களை தாக்கினால் ஏழாண்டு சிறை - இந்திய அரசு

    இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பொருத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார்.

    இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

    நோய்தொற்று பரவல் சட்டம்,1897ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அது விரைவில் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், இது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும் என்பதையும் குறிப்பிட்டார்.

    மேலும், விமான சேவைகள் இயங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், சேவைகள் தொடங்கும் முன் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்தார்

  2. கொத்து கொத்தாக உடல்களை புதைக்க தயாராகும் பிரம்மாண்ட இடுகாடுகள்

    கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பிரம்மாண்ட இடுகாடுகளை பல நாடுகள் உருவாக்கி வருகின்றன.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர்

    கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் இருந்ததாக வெளியான செய்தியையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பரிசோதனை முடிவுகளுக்காக அவர் காத்திருக்கிறார்.

    செவ்வாய்க்கிழமை அன்று பிரதமர் இம்ரான் கானுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், புதன்கிழமை அன்று அந்த முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, ஒருசில தினங்களுக்கு முன்பு பிரதமர் இம்ரான் கானை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்தார் அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர்.

    அதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான், அமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட பல ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

    இதுவரை பாகிஸ்தானில் 9000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

  4. கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்ததா?

    கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற தகவல் உலகை உலுக்கி வருகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் என்ன?

  5. ஆபத்தில் அமெரிக்கா: "கொரோனாவின் அடுத்த கட்ட பரவல் இன்னும் அபாயமானது"

    அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பைவிட இனிவரும் அடுத்தகட்ட வைரஸ் பரவல் இதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    "அடுத்த குளிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது நாம் சந்திப்பைதவிட மிகவும் மோசமாக இருக்கும் என்று" அந்த மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்ட் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

    காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் ஒரே நேரத்தில் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  6. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடலுக்கு உரிய மரியாதை

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஐம்பது லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களது சிகிச்சை முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் தரப்படுமென்றும் உயிரிழந்தால் பத்து லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படுமென்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் தனியார் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசுத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் உயிரிழக்கும்பட்சத்தில், அவர்களது உடல்கள் உரிய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழக்கும் பணியாளர்களைப் பாராட்டி விருதுகளும், பாராட்டுகளும் வழங்கப்படுமென்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

    தனியார் மருத்துவமனைகளில் யாருக்காவது நோய்த் தொற்று ஏற்பட்டால் அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுவதோடு, அந்தப் பிரிவு முழுக்க நோய்த் தொற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

    சென்னையில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் முழுமையாக நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் நோயுற்றவர்களின் தொடர்புகள் கண்டறியப்பட்டு, சோதனைகள் செய்யப்படும் என்றும் சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

  7. கொரோனா பாதிப்பு: 1.30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய்

    கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.

    தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 50 லட்சம், கேரள மாநிலத்திற்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

    தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி அமைப்பிற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் விஜய். அதேபோல பிரதமர் நிவாரண நிதிக்காக 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    பல நடிகர்களும் உதவி செய்த நிலையில் நடிகர் விஜயும், அஜித்தும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை எனப் பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் நிதியுதவி அளித்தார். அவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும், முதல்வர் நிவாரண நிதிக்கு ஐம்பது லட்ச ரூபாயையும் நிதியுதவியாக அளித்திருந்தார். மேலும், ஃபெப்ஸி ஊழியர்களுக்கு இருபத்தி ஐந்து லட்ச ரூபாயை வழங்கியிருந்தார்.

    இன்று நடிகர் விஜய் கொரோனா நிவாரணா நிதியாக 1.30 கோடி ரூபாயை நிதியாக வழங்கியிருக்கிறார்.

    இதுவரை பல நடிகர்கள் ஃபெப்ஸி ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கியிருந்தார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்ஸி ஊழியர்களுக்கும், முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  8. போராட்டத்தை கைவிட்டது இந்திய மருத்துவக் கழகம்

    வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் நடைபெற்ற உரையாடலுக்கு பிறகு போராட்டத்தை கைவிடுவதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து வெள்ளை கோட் அணிந்து கொண்டு , இன்று மெழுகுவர்த்தி ஏற்றுமாறு இந்திய மருத்துவக் கழகம் அடையாள போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவர்கள்மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் உரையாடினர்.

    அதன்போது அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

    அதனை தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

  9. கொரோனாவால் உலகம் அடைந்த நன்மைகள் என்னென்ன?

  10. தள்ளி வைக்கப்பட்ட காமன்வெல்த் மாநாடு

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ருவாண்டாவில் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மாதங்களில் ருவாண்டாவின் தலைநகர் ககாலியில் நடைபெறவிருந்த அந்த கூட்டத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைவர்கள் பங்கு பெறுவதாக இருந்தது.

    புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    பிரிட்டனின் காலனித்துவ தொடர்புகள் இல்லாத ஒரு நாட்டில் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெறவிருந்தது.

    பெல்ஜிய காலனித்துவ நாடாக இருந்த ருவாண்டா 2009ஆம் ஆண்டு காமன்வெல்த்தில் இணைந்தது.

  11. செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று

    சென்னையில் இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

  12. `புவியை நோக்கி வரும் தீவிரமான அவசர நிலையை நாம் மறந்துவிட கூடாது`

    கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு மத்தியில் இந்த உலகம் தீவிரமான ஒரு சுற்றுச்சூழல் அவசர நிலையை மறந்துவிடகூடாது என ஐநாவின் பொதுச் செயலர் ஆண்டானியோ குவட்டரஸ் புவி தினத்தன்று தெரிவித்துள்ளார்.

    தற்போது எழுந்துள்ள இந்த நெருக்கடி, எதிர்காலத்திற்கு நாம் செய்ய வேண்டியவற்றை நினைவுபடுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் கொரோனா வைரஸ் பரவல்தான் உலகளவில் எழுந்துள்ள மிகப்பெரிய சவாலாகும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐம்பதாவது பூமி தினத்தில், இந்த பூமியில் ஏற்படும் சுற்றுச்சூழல் நெருக்கடி ஒரு அவசரநிலை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பல்லுயிர் பெருக்கம் சரிவைச் சந்தித்துக் கொண்டு வருகிறது.

    காலநிலைகள் தடைப்படுவது முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

    நமது பூமியை கொரோனா தொற்றிலிருந்தும், காலநிலை மாறுபடுதலில் உள்ள அபாயத்திலிருந்தும் பாதுகாக்க நாம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    புவி வெப்ப மயமாதலை தடுக்க வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீண்டகாலமாகக்கூறி வரும் ஆண்டானியோ, மக்களின் பணம் சுற்றுச்சுழல் சார்ந்த தொழில்களை வளர்ப்பதற்கும் அதனால் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    புவி தினம் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஐம்பதாவது ஆண்டு விழாவில் காலப்போக்கில் புவிக்கான ஆபத்து எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

  13. இந்த ஊடரங்கு காலத்திலும் தெருநாய்களுக்கு தினசரி அன்போடு உணவளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

  14. நெட்ஃபிலிக்ஸ்: ஊரடங்கால் முன்றே மாதங்களில் அதிகரித்த புதிய சந்தாதாரர்கள்

    உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

    இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது குறைக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்திருந்தாலும் ஊரடங்கு காலத்திற்கு பிறகு அதன் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியுமா என்பதும் பெரிய கேள்விக்குறியே என்கிறார் பிபிசியின் தொழில்நுட்ப பிரிவு செய்தியாளர் ஜோ தாமஸ்.

    மேலும், டிஸ்னி ப்ளஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்டிரிமிங் சேவைகளும் புதிய சந்தாதாரர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் அதிகப்படியான போட்டியும் நிலவுகிறது என்கிறார் ஜோ தாமஸ்.

    உலகமுழுவதும் தற்போது நெட்ஃபிலிக்ஸிற்கு 182 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

    ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் அதிகப்படியாக 7 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

  15. தப்லீக் ஜமாத் தலைவரின் வேண்டுகோள்

    டெல்லியில் ஊரடங்கு சமயத்தில் மத நிகழ்வு நடத்தியதாக வழக்கை எதிர்கொண்டுள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா சாத் கந்த்லாவி, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமானவர்கள் தங்கள் ஊநீரை (பிளாஸ்மா) கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு தானமாக வழங்கவேண்டும் என்று நேற்று, செவ்வாய்க்கிழமை, வேண்டுகோள் விடுத்துள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.கோவிட்-19இல் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும்ஊநீர், கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்பொருள் என்பதால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

  16. 'கொரோனாவுக்கு இழப்பீடு வேண்டும்' - சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்

    வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுத்துள்ளது.

    சீன அரசு கோவிட்-19 தொற்று குறித்து உலகுக்கு பொய் சொன்னதாகவும், முன்னரே எச்சரிக்கை விடுத்தவர்களை மௌனித்ததாகவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

    சீனா இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தங்கள் மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு சீன அரசிடம் அந்த மாகாண அரசு இந்த வழக்கு மூலம் இழப்பீடு கோரியுள்ளது.

  17. தற்போதைய நிலவரம்

    ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி உலகளவில் கொரோனா தொற்றால் 25 லட்சத்து 64 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 25 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 445 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதில் சீனாவின் ஹூபே மாகணத்தில் 4 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 14 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர்.

  18. இந்தியா - 20 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19984 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 640ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை 3870 பேர் குணமடைந்துள்ளனர். 15474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

  19. ஊரடங்கு சமயத்தில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரசவ வலியில் நடந்து வந்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, இளம் காவலர் சையது அபுதாஹீர் வாகன ஏற்பாடு செய்து உதவியதோடு ரத்ததானமும் செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.

    “அந்த தருணத்தை நினைத்தாலே அழுகை வருகிறது. தக்க சமயத்தில் உதவிய காவலருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை,” என கண்கலங்குகிறார் சுலோச்சனா.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிந்து வரும் சையது அபுதாஹீர்தான் சுலோச்சனா கூறிய அந்த காவலர்.

  20. தடை 60 நாட்கள் மட்டுமே - டிரம்ப்

    வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விதிக்கப்பட்ட தடை 60 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் அந்த தடை அமெரிக்காவில் நிரந்தரக் குடியேற்றம் கோருவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றை தடுக்கவும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கவும் வெளிநாட்டினர் குடியேற்றம் இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் நேற்று, செவ்வாய்க்கிழமை , அவர் கூறியிருந்தார்.