You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்; மோதியை பாராட்டிய பில்கேட்ஸ், தமிழக செய்திகள் என்ன?

பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரொனா வைரஸ்: இன்று நடந்த சில முக்கிய விஷயங்கள்

    • வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விதிக்கப்பட்ட தடை 60 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் அந்த தடை அமெரிக்காவில் நிரந்தரக் குடியேற்றம் கோருவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    • வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு அடிப்படையற்றது என்று கூறியுள்ளது சீனா.
    • அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பைவிட இனிவரும் அடுத்தகட்ட வைரஸ் பரவல் இதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.
    • கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு மத்தியில் இந்த உலகம் தீவிரமான ஒரு சுற்றுச்சூழல் அவசர நிலையை மறந்துவிடகூடாது என ஐநாவின் பொதுச் செயலர் ஆண்டானியோ குவட்டரஸ் புவி தினத்தன்று தெரிவித்துள்ளார்.
    • கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ருவாண்டாவில் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் இதுவரை 20,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதில் 3959 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629ஆக அதிகரித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஐம்பது லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
  3. அரபு நாடுகளில் அயல்நாட்டு பணியாளர்கள் வேலை தப்புமா?

    வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் அயல்நாட்டு பணியாளர்கள் துரத்தப்படுகிறார்களா?

  4. கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு எப்போது நிகழ்ந்தது? குழப்பத்தில் அமெரிக்கா

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பல வாரங்களுக்கு முன் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் மரணம் எப்போது நிகழ்ந்தது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    பிப்ரவரி 26ஆம் தேதி அன்று வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டிலில் ஒருவர் உயிரிழந்ததுதான் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் மரணம் என்று நம்பப்பட்டது.

    ஆனால், தற்போது பிப்ரவரி 6 மற்றும் 17ஆம் தேதிகளில் கலிபோர்னியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில் வெளியூர் சென்று திரும்பிய நபர்கள் மற்றும் வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்த நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையை மேற்கொண்டது அமெரிக்கா.

    இந்நிலையில், கோவிட் 19 தொற்று குறித்த கூடுதல் மரணங்கள் கண்டறியப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. சிங்கப்பூரில் என்ன நிலை?

    சிங்கப்பூரில் புதிதாக 1,016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    புதிதாக நோய்த் தொற்றியோரில் 15 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்கள் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்குவிடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூகப் பரவலைப் பொறுத்தவரை புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்களின் சராசரி கடந்த வாரம் 39ஆக இருந்தது என்றும், தற்போது அது 28ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.

    ஊழியர் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விடுதிகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  6. தாயகம் அழைத்து வரப்பட்ட மலேசியர்கள்

    கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

    இன்னும் 22 நாடுகளில் 511 மலேசிய மக்கள் சிக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர்களை அழைத்து வர வெளியுறவு அமைச்சு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

    இதற்கிடையே மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே வேளையில் இன்று 103 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,532 என்றும், இவர்களில் 3,452 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

    பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு 35 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

  7. 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 763 பேர் பலி

    கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 763 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதனால் இதுவரை பிரிட்டனில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,100 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனால் தனியார் சுகாதார மையங்களில் உயிரிழத்தவர்களின் எண்ணிக்கை இதில் சேர்த்து கணக்கிடப்படவில்லை.

  8. கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றால் என்னாகும்?

    கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது? ஏன் மரணம் கூட ஏற்படுகிறது? இதன் பின் உள்ள அறிவியல் என்ன?

  9. இந்தியப் பிரதமருக்கு பில் கேட்ஸ் பாராட்டு

    இந்தியாவில் கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்து போராடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மைக்ரசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பிரதமர் மோதியை பாராட்டியுள்ளார்.

    கொரோனா தொற்றாளர்களை விரைவாக கண்டுபிடிக்கவும், மருத்துவ உதவிகளுக்கும், டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பில் கேடஸ், ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் இத்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

  10. கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?

    கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள்.

    சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?

  11. அமெரிக்கா தொடர்ந்த வழக்கு அபத்தமானது - சீனா

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக அமெரிக்க மாகாணமான மிசூரி, சீனா மீது வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு அடிப்படையற்றது என்று கூறியுள்ளது சீனா.

    கொரோனா வைரஸ் தொற்று குறித்த உண்மையை சீனா உலகத்திடம் இருந்து மறைத்ததாகவும், தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி மிசூரி மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "அமெரிக்கா தொடர்ந்த இந்த வழக்கில், உண்மை இல்லை என்றும் சட்ட ரீதியாக அடிப்படையற்றது" என்றும் கூறியுள்ளார்.

    "உண்மையில் இது அபத்தமானது. இறையாண்மை சமத்துவ கொள்கையின் அடிப்படையில், அமெரிக்க நீதிமன்றங்களுக்கு சீன அரசாங்கத்தின் மீது எந்த அதிகாரமும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று 5,978 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன. இதில் 33 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 15 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.

    இன்று புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் திண்டுக்கல்லில் ஒருவருக்கும் மதுரையில் 2 பேருக்கும் தொடர்புகள் மூலம் நோய்த் தொற்று ஏற்படவில்லையென்பதால், எப்படி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருகிறது.

    இன்று 27 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 662ஆக உயர்ந்துள்ளது.

    இன்று யாரும் உயிரிழக்கவில்லை. ஆகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 946ஆக உள்ளது. 1,878 பேர் நோய்க் குறிகளுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

  13. கொரோனாவை 60 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த பெண்

    கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை.

    உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட்து என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் 20,000த்தை கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

    இந்தியாவில் இதுவரை 20,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் 3959 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,486 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் ஏப்ரல் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலமாக கலந்தாலோசிக்க உள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  15. சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

    கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரின் பாதுகாப்பை உறுதிபடுத்த, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் தொற்று பரவல் அவரச சட்ட மசோதா 2020 உதவும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.

    சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை இந்த சட்டம் உறுதிபடுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் இந்திய அரசு தெரிவித்திருந்தது.

  16. கொரோனா வைரஸ் - சமீபத்திய நிலவரங்கள்

    • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 25,82,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 1,77,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு தீர்வாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகள், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
    • ஸ்பெயினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, ஒருவர் மீது ஒருவர் தக்காளி அடித்துக் கொண்டாடும் திருவிழா 1957ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
    • கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் இருந்ததாக வெளியான செய்தியையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை முடிவுகளுக்காக அவர் காத்திருக்கிறார்.
  17. கொரோனா வைரஸ்: ‘வென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி’

    கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா என்ற வித்தியாசத்தை வென்டிலேடர்கள் செயல்படுவது வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் சமயத்தில் இந்த செயற்கை சுவாசக் கருவிகளாலும் சிலரின் உயிரைக் காப்பாற்ற முடியாது.

    வென்டிலேட்டர்களை ஆஃப் செய்வது ஜுவானிதா நிட்லாவின் பணிகளில் ஒன்றாகும். லண்டனின் ராயல் ஃபிரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தலைமை செவிலியராக ஜுவானிதா பணிபுரிகிறார்.

    லண்டனின் தேசிய சுகாதார சேவையில் தீவிர சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்ற செவிலியராக 16 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

    இந்த பணி வலி மிக்கதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என 42 வயதாகும் ஜுவானிதா வருத்தம் தெரிவிக்கிறார்.

    ''சில நேரங்களில் ஒருவர் மரணிக்க நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று தோன்றுகிறது,'' என்கிறார்.

  18. உங்களுக்கு கொரோனா வந்தால் குணமாக எவ்வளவு காலமாகும்

    உண்மையில் ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து முழுமையாக மீள எவ்வளவு நாளாகும்? கொரோனாவால் உடலுக்கு நீண்டகால பாதிப்புகள் உண்டா?

  19. ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா?

    ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 435 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று முந்தைய தினத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகும்.

    இந்த வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் இதுவரை 21,717 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மே 9 வரை நீட்டிக்க வேண்டும் என்ற ஸ்பெயின் பிரதமரின் கோரிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

    உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு சுமார் 2,05,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  20. விழுப்புரத்தில் 7 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று

    விழுப்புரத்தில் 7 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட 7 மாதக் குழந்தையின் தந்தை, டெல்லி மாநாடு சென்று திரும்பியவர். இவரைக் கடந்த மாதம் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என உறுதியானதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினரை பரிசோதனை செய்தபோது அவரது 38 வயதுடைய மனைவிக்கும், 7 மாதப் பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தையை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா‌ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தாய் மற்றும் குழந்தைக்கு இந்நோய்த் தொற்றானது, அவரது தந்தை அல்லது அப்பகுதியில் அறிகுறிகள் காரணமாக இதற்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடமிருந்து வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

    விழுப்புரத்தில் இதுவரை இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 40 நபர்களில், இருவர் உயிரிழந்துள்ளனர், 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7 மாதக் குழந்தை உட்பட 24 நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது