You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உலகெங்கும் 20 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு

பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மசூதிகளில் தொழுகை - கட்டுப்பாடுகளை மீற பாகிஸ்தான் மதக்குருக்கள் முடிவு

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மசூதிகளில் தொழுகை நடத்துவது தொடர்பாக அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடத்தப்போவதாக அந்நாட்டின் சில முக்கிய மதகுருக்கள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட முக்கிய தொழுகை நிகழ்வுகளை புறக்கணிக்க இயலாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அரசு கூறியபடி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபாடு நிகழ்வுகள் நடக்கும் என்று அவர்கள் கூறினர்.

    5 பேருக்கு மேல் தொழுகை நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூடாது என்று அந்நாட்டின் அரசு விதித்த கட்டுப்பாட்டுக்கு நாட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தானில் இதுவரை 5800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

  2. கொரோனா வைரஸ்: ஏப்ரல் 20 அமலுக்கு வரும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் இவைதான்

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும், விலக்கு அளிக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  3. ஜெர்மனியில் மூன்றாயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் ராபோர்ட்கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இதுவரை ஜெர்மனியில் வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127,584 பேர் ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையில் பாதி பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவைரஸை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலாமெர்கல் அனைத்து மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

    ஆஸ்திரிய மற்றும் டென்மார்க் போன்ற சில ஐரோப்பிய நாடுகள் பள்ளிகள் மற்றும் சில கடைகளை வழக்கம் போல இயங்க அனுமதித்துள்ளனர்.

  4. பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

    இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

    மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

  5. டிரம்ப் அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அந்த அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை அமெரிக்கா நிறுத்துவதாக அந்நாட்டின் அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவரது அறிவிப்புக்கு எதிர்மறையான கருத்துக்கள் சில உலக தலைவர்களிடம் இருந்து வந்துள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொது செயலர் அன்டோன்யு குட்டாரெஸ், ‘’இந்த நோய்த்தொற்று எப்படி தொடங்கியது, எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது போன்றவற்றை புரிந்துகொள்ள, அலசி ஆராய ஒரு நேரம் வரும். அதற்கான நேரமும், சமயமும் இது அல்ல. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் நிதியை நிறுத்துவதற்கும் இது சரியான நேரம் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், ‘’தற்போதைய நிலையில் உலகத்துக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அளித்து வரும் உலக சுகாதார அமைப்பை நாம் தொடர்ந்து ஆதரிப்போம்’’ என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்கள் கமிட்டியின் தலைவரான இலியாட் கருத்து தெரிவிக்கையில், ‘’ஒவ்வொரு நாளும் நிலைமை மிகவும் மோசமாகி வரும் சூழலில், தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்களை, உலக சுகாதார அமைப்பை, சீனாவை என அனைத்து தரப்புகள் மீதும் குற்றம்சுமத்தும் தனது அரசியலை விளையாட்டை டிரம்ப் நடத்தி வருகிறார்’’ என விமர்சனம் செய்துள்ளார்.

  6. கொரோனா வைரஸ்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான பதிவுகள்

    ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான ஹாஷ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

    Chennai Corporation Remove Rss என்ற ஹாஷ்டேக் சென்னை ட்ரெண்டில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்த ஹாஷ்டேகின் கீழ் சென்னை மாநகராட்சி கொரோனா மீட்புப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்படக்கூடாது எனப் பதிவிட்டு வருகிறார்கள்.

  7. கொரோனா வைரஸ்: ஆசியாவில் முக்கிய செய்திகள் என்ன?

    ஒரு மாதத்துக்கு மேலான காலத்துக்கு பிறகு முதல்முறையாக தைவானில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை. தைவானில் அமல்படுத்தப்பட்ட கொரோனா பரவலா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று கூறப்படுகிறது.

    சிங்கப்பூரில் செவ்வாய்கிழமையன்று மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3252-ஆக அதிகரித்துள்ளது.

    கோவிட்- 19 நோய்தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளுடன் தென் கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 15) காலை முதல் நடந்து வருகிறது. முகக்கவசம், பிளாஸ்டிக் கையுறைகள் ஆகியவற்றை அணிந்த வாக்காளர்களின் உடல்வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகு அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சீனாவில் அண்மையில் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், அங்கு இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு வழங்கி பரிசோதனை செய்வதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  8. கொரோனா வைரஸ்: கோவிட் 19க்கு மத்தியில் நடக்கும் தென் கொரியா தேர்தல்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வரும் சூழலில், பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு தென் கொரியாவில் நாடளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 15) காலை முதல் நடந்து வருகிறது.

    வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட இந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

    மேலும் வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1952-இல் நடந்த கொரிய போரின்போதும் அங்கு தேர்தல் நடைபெற்றது.

    தென் கொரிய நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 43.9 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

  9. டிரம்ப் v/s உலக சுகாதார அமைப்பு - முற்றிய மோதல், நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

    உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடங்கிய சமயத்தில் அந்த பிரச்சனையை சமாளிப்பதில் தவறான நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார்.

  10. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே, கொரோனா தொடர்பாக பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    தி.மு.கவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

    2020ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எஃப்.

    ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் புயல் - அல்லல்படும் பசிபிக் தீவுகள்

    'மலேசிய பிரதமரின் அரசியலுக்கு உதவும் கொரோனா வைரஸ்'

    விழுப்புரத்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட வட இந்திய கொரோனா நோயாளி பிடிபட்டார்

    மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

    விரிவாகப் படிக்க: கொரோனா ஏப்ரல் 14 நடந்தவை