You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டியது

இந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உதவியை எதிர்நோக்கும் பாலியல் தொழிலாளர்கள், அனகா ஃபாடக், பிபிசி மராத்தி

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உதவிகள் சென்று சேரும் கடைசி சமூகக் குழுவினராக பாலியல் தொழிலை நம்பியுள்ளவர்களே இருக்கிறார்கள் என்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் நலனுக்காக இயங்கும் ஷ்ரம்ஜீவி சங்காதன் எனும் அமைப்பின் டாக்டர் ஸ்வாதி கான்.

    இதனால் இந்தியா முழுவதுமுள்ள பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தொண்டு நிறுவனங்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

    இந்தியப் பிரதமர் ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே, எங்கள் சிவப்பு விளக்கு பகுதியின் செயல்பாட்டை நிறுத்திவிட்டோம். பிறருக்கு நோய் பரவக்கூடாது என்பதால் அவ்வாறு செய்தோம். இப்போது எங்கள் குழந்தைகள் குறித்தும் நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது என்று பாலியல் தொழிலாளி ரேகா கூறுகிறார்.

  2. கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1100 பேர் மரணம்

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் இதுவரை 2935 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதால் மற்ற மாநிலங்களுடன் உதவி கோரியுள்ளார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ.

    “நியூயார்க் நெருக்கடியான நிலையில் உள்ளது. உதவி செய்யுங்கள்” என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் படி, அமெரிக்காவில் 2,78,458 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  3. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கினால், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்கள் மேலும் பல காலம் நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.

    இதுபோன்று பொருளாதாரம் ஸ்தம்பித்திருப்பதை எங்கள் வரலாற்றில் பார்த்ததே இல்லை என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிரிஸலினா தெரிவித்துள்ளார்.

    2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட இது பன்மடங்கு மோசமானது என்று அவர் கூறியுள்ளார்.

  4. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

    டெல்லி மாநாட்டிற்கு சென்று தமிழகம் திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    நேற்று இரவு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி, இன்று காலை 7.44 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. நேற்று சர்வதேச அளவில் நடந்தவை குறித்து அறிய

    தென் அமெரிக்காவின் நிலை, இயல்பு நிலைக்கு திரும்பும் வுஹான் என நேற்று சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகளை அறிய

  6. தேர்வுகளை ரத்து செய்த பிரான்ஸ்

    இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்த படியாக ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பிரான்ஸ்.

    ஒரே நாளில் கொரோனா தொற்றால் 588 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,520ஆக உயர்ந்திருக்கிறது.

    பள்ளிப்படிப்பை முடித்து வெளியேற எழுத வேண்டிய மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்பட்டாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. 1808ஆம் ஆண்டு நேபோலியன் போனாபார்ட் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தேர்வுகள் நடக்காமல் போவது இதுவே முதல்முறையாகும்.

  7. இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 355 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902ஆக உயர்ந்திருக்கிறது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்ந மாநிலத்தில் மட்டும் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  8. உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய சீனா

    வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர். அவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரித்த சீனாவில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் கார், ரயில்கள், கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து ஒலி எழுப்பப்பட்டது. நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டது.

    வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய வுஹான் நகரத்தில் போக்குவரத்து விளக்குகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் எறியவிடப்பட்டது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    சுகாதார அவசர நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக நம்பும் சீனா, கடந்த சில வாரங்களில், பயணக் கட்டுப்பாடுகள், மற்றும் சமூக விலகலுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. சனிக்கிழமையன்று சீனாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 18 பேர் வெளிநாட்டவர்கள்.

  9. கொரோனா வைரஸ் பாதிப்பை இந்தோனீசியாவால் சமாளிக்க முடியுமா?

    அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனீசியா மிக சமீபத்தில்தான் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியது. ஆனால் இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமானது என்கிறார்கள் வல்லுநர்கள் மார்ச் மாதத்தில்தான் அங்கு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது.

    ஆனால், தற்போது ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து அதிக மரணங்கள் பதிவான நாடாக அது இருக்கிறது. 17ஆயிரம் தீவுகளை அடங்கிய இந்தோனீசியா, பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.

    இந்த கொரேனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க அந்நாட்டின் சுகாதாரத்துறையால் முடியுமா என்பது கேள்விக்குறியே. மேற்கு ஜாவாவில் உள்ள பன்டுங்கில் பொது சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரியும் நோவிடா புர்வன்டி மற்றும் அவருடன் வேலை செய்பவர்கள் நிதித்திரட்டி மழையின் போது அணியப்படும் ரெயின் கோட்டுகள் மற்றும் மருத்துவ கண்ணாடிகளை வாங்கியுள்ளனர்.

    “கிருமி நாசினிகள் மூலம் ரெயின் கோட்டுகளை சுத்தம் செய்து அதனை மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறோம். அரசாங்கத்தின் பாதுகாப்பு கவசங்களுக்காகக் காத்திருக்கிறோம். என்னால் என்95 ரக முகக்கவசங்களை வாங்க முடியவில்லை. அது மிகவும் விலை உயர்ந்தது. அதோடு கிடைப்பது கடினமாக உள்ளது” என்கிறார் நோவிடா.

    இரண்டு குழந்தைளுக்கு தாயான அவர், “என்னால் தூங்க முடியவில்லை. மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே அவர்களை தொட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறுகிறார்.

    மேலும் அதிக மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திறனும் அந்நாட்டிடம் இல்லை. இறந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவர்களது உடல்கள் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு புதைக்க வேண்டும் என ஜகார்டா ஆளுநர் அனீஸ் பசவெடன் கூறியுள்ளார்.

    இந்தோனீசியிவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க அதில் குழந்தைகளும் இருக்கிறார்கள். 3 வயது குழந்தை உட்பட இதுவரை 4 குழந்தைகள் கொரோனா தொற்றால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனீசியாவில் வைரஸ் தொற்றின் மையமாக தலைநகர் ஜகார்த்தா விளங்குகிறது.

  10. கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?

    கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது தெரியுமா? உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும். பல நாடுகளில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் தேவையான பொருட்களை மக்கள் விரைவாக வாங்குகின்றனர்.

  11. "நான் முகக்கவசம் அணியமாட்டேன்"

    முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    தனது அலுவலகத்தில் "அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்" என யாரேனும் வருகைத்தரும்போது தன்னால் முகக்கவசத்தை அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது என்று அவர் கூறினார்.

    துணியால் ஆன முகக்கவசத்தை பொதுவெளியில் செல்லும்போது மக்கள் அணியலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி இருந்தது.

    "நீங்களும் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அணிய மாட்டேன் என்று நினைக்கிறேன்" என டிரம்ப் கூறினார்.

    விரிவாகப் படிக்க:

  12. கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து'

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.

    "பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம்," என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.

  13. சரியும் உலக பொருளாதாரம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 701, 000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்

    கடந்த பத்தாண்டுகளாக வளர்ச்சி முகத்தில் அமெரிக்காவிலிருந்த வேலைவாய்ப்புகள் மார்ச் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தடைப்பட்டு இருக்கிறது.

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 701, 000 பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதம் கணக்கின்படி 4.4 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.

    1975 ஆம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் நிலைமை இவ்வாறாக ஆகி இருப்பதாக அமெரிக்கத் தொழிலாளர் துறை தரவுகள் கூறுகின்றன.

    பொருளாதாரத்தைப் பொறுத்தவரைச் சர்வதேச நிலையும் இதுவாகத்தான் உள்ளது. 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச மந்தநிலையைவிட மோசமான நிலை ஏற்படும் என சர்வதேச மதிப்பீடு கூறுகிறது.

    பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்திய அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தித் துறை மிக மோசமாக சரிந்துள்ளது.

    நாம் கணிப்பதைவிட நிலைமை மேலும் மோசமாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.