நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலை இத்துடன் முடிகிறது.
நாளை வேறொரு நேரலை செய்தியில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலதிக செய்திகளை பிபிசி தமிழின் முகப்பு பக்கத்தில் உள்ள இணைப்புகள் வாயிலாகப் படிக்கலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர்.
பிபிசி தமிழின் நேரலை இத்துடன் முடிகிறது.
நாளை வேறொரு நேரலை செய்தியில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலதிக செய்திகளை பிபிசி தமிழின் முகப்பு பக்கத்தில் உள்ள இணைப்புகள் வாயிலாகப் படிக்கலாம்.
பனாமாவின் அமல்படுத்தப்பட்ட பாலினம் அடிப்படையிலான தனிமைப்படுத்தும் நடவடிக்கையை பெருவும் அமல்படுத்தியுள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரு நாள் இடைவெளி விட்டு வீட்டை விட்டு வெளியேறலாம்.
அதாவது ஆண்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளியிலும் பெண்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வெளியே வரலாம்.
ஞாயிறன்று யாருக்கும் அனுமதி கிடையாது. பெருவில் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூ கூறுகையில் இரண்டு அல்லது மூன்று மாத முடக்கம் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் என கூறியுள்ளார்.
பிரேசில் மக்களை மாநில அரசுகள் விதித்த முடக்க சட்டத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கக் கூறுவதாக அவர் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்.
இதே சமயம் பிரேசிலில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது ஜனவரி மாதத்தில் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது.
இதுவரை பிரேசிலில் 8000 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அர்ஜெண்டினாவிலிருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈக்குவடாரின் அதிபர் லெனின் மொரெனோ, அதிகாபூர்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதை விட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பதாக நினைப்பதாக கூறியுள்ளார்.
இதுவரை அந்த நாட்டில் 3000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது. அங்கு இரண்டாவது பெரிய நகரமான குவாயகீலில் சாலையில் இறந்தவரின் சடலத்தை விடும் புகைப்படம் பகிரப்பட்ட பின்னர் இவ்வாறு கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரம், 2 மாதம் தனிமைப்படுத்தப்பட்ட பின் தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் மையப்பகுதியாக நியூயார்க் நகரம் உள்ளது என அதன் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இதுவரை இல்லாத அளவில் நியூயார்க்கில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது மேலும் உயரும் என்று தெரிவித்த அவர், கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றார்.
இன்றுவரை 21,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 217 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,333ஆக உள்ளது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. எனினும் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த மேலும் 60 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில் இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது 4.7 விழுக்காடாக உள்ளது. ஆனால் மலேசியாவில் இறப்பு விகிதமானது 1.7 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் மேலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளது.
யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.
இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால், ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த பகுதியில் இனி மனிதாபிமான மற்றும் அரசியல் விளைவுகள் மிகவும் தீவிரமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொரோனா நோய் தொடர்பாக தமிழ்நாட்டில் 90,412 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர், இன்று கொரோனா நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 309ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
தனது அரச பொறுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ராணி, தற்போது வின்ஸ்டோரில் உள்ள அரண்மனையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
68 ஆண்டுகால ஆட்சிக் பொறுப்பில், நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் அவர் உரையாற்ற உள்ளார்.
2002ஆம் ஆண்டு அவரது தாயின் மரணம், 1997ல் வேல்ஸ் இளவரசி டயானா மற்றும் 1991ல் முதல் வளைகுடா போர் ஆகிய மூன்று நிகழ்வுகளின் போது மட்டுமே இரண்டாம் எலிசபெத் ராணி இதுவரை உரையாற்றி உள்ளார்.
பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய புதிய மருத்துவமனையை அந்நாடு கட்டியுள்ளது.
கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேள் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டது.
வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்ட மருத்துவமனை, அந்நாட்டின் அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு கட்டப்பட்டது.
வெள்ளி உலோகத்தை உருக்கி குடித்தால் கொரோனா குணமாகுமா? உடலை சூடாக வைத்துக் கொண்டால் கொரோனா குணமாகுமா? பசு கோமியம் கொரோனாவுக்கு தீர்வளிக்குமா? பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி
தனக்கு இன்னும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், “நான் நன்றாக உணர்கிறேன். ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் எனக்கு வைரஸ் தொற்றுக்கான சில அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் அறிவுரைப்படி நான் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்” என்று அவர் தெரிவித்தார்
ஷென்ஸென் சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்தனர்.
ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதி நிலவரப்படி, 3684 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 411 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், 7 பேர் குணமடைந்துள்ளனர். 484 பேருக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது? ஏன் மரணம் கூட ஏற்படுகிறது? இதன் பின் உள்ள அறிவியல் என்ன?
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் இத்தொற்றால் 2301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் இறந்துள்ளனர். 157 பேர் குணமடைந்துள்ளனர்.
தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்ட அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்த 647 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த இரு நாட்களில் தெரிய வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், அசாம், டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தப்லிக் ஜமாத் தொடர்புடைய நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயினில் 932 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,935ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அம்மாநில அரசு அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் சிலர், பாதுகாவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி மத நிகழ்வில் கலந்து கொண்ட 156 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அவர்கள் சட்டங்களை பின்பற்றவும் மாட்டார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். மனிதத்தின் எதிரி அவர்கள். பெண் செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டது மிகப்பெரிய குற்றம். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறினார்.
ஆசியாவின் வளரும் நாடுகளில் 2020ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5.5 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்காததால் மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யும் திட்டம் ஏதும் இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.