கோவையில் கடந்த மாதம் 2ஆம் தேதி கல்லுாரி மாணவி ஒருவர், தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கார் கண்ணாடியை உடைத்து, நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இந்த வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன், குணா என்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கைதான 3 பேரும், செரையாம்பாளையம் பகுதியில் தேவராஜ் என்ற ஆட்டு வியாபாரியைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு அவர்கள் அதே நாளில், கோவை விமான நிலையம் அருகில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.
காவல்துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பின் இவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 3 பேரையும் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
"விசாரணையின்போது அன்னூர் அருகே செரையாம்பாளையம் பகுதியில் நவம்பர் 2ஆம் தேதி காலையில் தேவராஜ் என்ற ஆட்டு வியாபாரியை இவர்கள் மூவரும் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. வழக்கமாக தேவராஜ் ஓய்வ்எக்கும் இடத்தின் அருகில் 3 பேரும் அமர்ந்து மது அருந்திய நிலையில், தேவராஜ் இவர்களைக் கண்டித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தேவராஜை கட்டையால் தாக்கி விட்டு 3 பேரும் கிளம்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்" என்று காவல்துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, நவம்பர் 5ஆம் தேதி தேவராஜை காணவில்லை என்ற புகார் வந்திருப்பதும், 6ஆம் தேதி கோவில்பாளையம் காவல் எல்லையில் இருந்து தேவராஜின் சடலம் மீட்கபட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தேவராஜ் கொலை வழக்கில் மூன்று பேரையும் விசாரிக்க கோவில்பாளையம் போலீசார் முடிவு செய்துள்ளனர் என்றும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பாளையம் போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.