You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. காந்திக்கு மரியாதை செலுத்திய புதின் - மோதி கூறியது என்ன?

    இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்தார். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ அவரை வரவேற்றார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் ஹவுஸிற்கு வந்தார் புதின். பிரதமர் மோதி அங்கு அவரை வரவேற்றார். இன்று ஹைதராபாத் ஹவுஸில் இருவருக்கும் இடையே முக்கியமான சந்திப்பு நடக்கிறது. பிரதமர் மோதி இந்த சந்திப்பை 'வரலாற்றுப்பூர்வமானது' என்றார்.

    யுக்ரேன் போர் பற்றி பேசிய பிரதமர் மோதி, "ஒரு உண்மையான நண்பரைப் போல நீங்கள் தொடர்ந்து தகவல் தெரியப்படுத்தி வந்தீர்கள், இந்த நம்பிக்கை தான் மிகப்பெரிய பலம். அமைதியின் பாதையில் தான் கடவுளின் நலன் உள்ளது. நாம் அமைதிக்கான பாதையை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. உலகம் அமைதியின் பாதைக்கு திரும்பும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது." என்றார்.

  2. யுக்ரேன் படைகள் டான்பாசிலிருந்து விலக வேண்டும் - புதின்

    மேற்கு யுக்ரேனில் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து யுக்ரேனிய படைகள் விலக வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் இதனைப் பின்பற்றவில்லை என்றால், ரஷ்யா அந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிவித்தார் புதின். யுக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த ஒப்பந்தத்தையும் புதின் நிராகரித்துள்ளார்.

    இந்தியா வந்தடைந்த பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் , "ஒன்று நாங்கள் இந்தப் பகுதிகளை படைகளைக் கொண்டு விடுதலை செய்வோம், அல்லது யுக்ரேன் படைகள் இங்கிருந்து விலகும்." எனக் கூறினார்.

    டான்பாஸின் 85% பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து விலக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்துவிட்டார்.

  3. வணக்கம் நேயர்களே!

    இன்று (05.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.

  4. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 3) காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  5. இலங்கை: மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஸ்பிரிங் வேலி பகுதியில் சிக்கியுள்ள மக்கள்

  6. இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின்: நேரில் வரவேற்ற பிரதமர் மோதி

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாட்கள் இந்திய பயணமாக இன்று (டிசம்பர் 4) மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அவரை இந்திய பிரதமர் நரேந்திர மோதி நேரில் வரவேற்றார்.

    கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

    இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்ட காலமாக ஒரு சிறப்பான உறவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் உச்சி மாநாடுகள் இந்த உறவின் அடையாளமாக உள்ளன.

    இந்த உச்சி மாநாட்டின்படி, இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுழற்சி முறையில் இரு நாடுகளிலும் சந்திக்கின்றனர். இதுவரை இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 22 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

    இரு நாடுகளின் தலைவர்களும் 2022இல் ஐந்து முறையும், 2023இல் இரண்டு முறையும் தொலைபேசியில் பேசினர். பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 2024இல் மாஸ்கோவுக்கு சென்றார்.

    இந்தியாவும் ரஷ்யாவும் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பிற துறைகளில் வணிக உறவுகளைக் கொண்டுள்ளன.

    அரசாங்க தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டில் இந்தியா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.

  7. ‘பாமக தலைவராக நானே தொடர்வேன்’- அன்புமணி ராமதாஸ்

    “பாமகவில் எந்தக் குழப்பமும் கிடையாது. பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன், மாம்பழம் சின்னமும் என்னிடம்தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் தொடரும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் இன்று (டிசம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாமகவின் தலைவராக 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடர, இந்திய தேர்தல் ஆணையம், விதிகளின்படி எனக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதை எதிர்த்து அவர்கள் (ராமதாஸ் தரப்பு) டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். தேர்தல் ஆணையம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது” என்று கூறினார்.

    மேலும், “எந்த பிரச்னை இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதைத்தான் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனும் தெரிவித்து இருந்தார்” என்றும் அவர் கூறினார்.

    'பாமக தலைவராகத் தொடர்ந்து நான் நீடிப்பேன்' எனக் குறிப்பிட்ட அன்புமணி, "மற்றபடி நீதிமன்றத்தை அவர்கள் (ராமதாஸ் தரப்பு) அணுகினால் நாங்கள் பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

  8. திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றுவதில் எழுந்த சர்ச்சை பற்றி உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?

  9. ‘இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் என்னைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை’- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    “இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் என்னைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை” என்று காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகையைத் தொடர்ந்து இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பொதுவாக, வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது பாரம்பரியம். வாஜ்பேயி, மன்மோகன் சிங் காலத்திலும் அந்த வழக்கம் பின்பற்றப்பட்டது. ஆனால், பிரதமர் மோதியும் வெளியுறவு அமைச்சகமும் அதைப் பின்பற்றுவதில்லை" என்றார்.

    "இப்போதெல்லாம், வெளிநாட்டுத் தலைவர்கள் அல்லது உயர் அதிகாரிகள் வரும்போதோ அல்லது நான் எங்காவது வெளியே செல்லும்போதோ, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்கக் கூடாது என்று அரசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறது."

    "இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மத்திய அரசு மட்டுமல்ல, நாங்களும்தான். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எதிர்க்கட்சியினர் சந்திப்பதை அரசாங்கம் விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

  10. இலங்கையில் பலி எண்ணிக்கை 479-ஆக உயர்வு

    இலங்கையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 479-ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

    மேலும், 350 பேரைக் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

    455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  11. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 3) காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  12. திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் என்ன நடந்தது?

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

    இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ராம. ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினர் அளிக்க வேண்டும்’ என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

    இந்நிலையில், இன்று ராம.ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார். அதில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், கோயில் தரப்பிலோ அல்லது அரசு தரப்பிலோ தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், “உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உத்தரவிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே தீபத் தூணில் வழக்கம் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக மனுதாரர் உள்பட 10 பேர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடப்படுகிறது. அவர்களுக்கு போதிய பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகம் பகுதியிலிருந்து ராம.ரவிக்குமார் உள்பட 10 பேர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 67 மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர்கள் இரு ராணுவ வாகனங்களில் அணி வகுத்துச் சென்றனர்.

    இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை பகுதியில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் பிறப்பித்தார்.

    மேலும், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

  13. திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றும் விவகாரத்தில் தள்ளுமுள்ளு - ஊரடங்கு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்

  14. திருப்பரங்குன்றம் மலையின் உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

    திருக்கார்த்திகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடமான உச்சிப் பிள்ளையார் கோவிலில் பலத்த காவல்துறை பாதுகாப்போடு இன்று (டிசம்பர் 3) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதேநேரம், மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன.

    மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப் பிள்ளையார் கோவில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழாவை முன்னிட்டு மலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக பொது மக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் மட்டும் செய்தியாளர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கேற்றாததால் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

  15. இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி மீண்டும் சதம்

    இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

    கோலி 90 பந்துகளில் 100 ரன்களை எட்டினார், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 53வது சதமாகும்.

    ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக உள்ளார்.

    50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்திலும், விராட் கோலியின் சதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அதில் அவர் 135 ரன்கள் எடுத்திருந்தார்.

  16. 'ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை' - மத்திய அரசு அறிவிப்பு

    சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த செயலி பாதுகாப்பானது என்பதைக் குறிப்பிட்டு, "அனைத்து குடிமக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்குவதற்காக, அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவதை அரசாங்கம் கட்டாயப்படுத்தி இருந்தது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் சைபர் உலகின் தீமைகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதே இதன் ஒரே நோக்கம்" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

    இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு நாளும் 2000 மோசடி சம்பவங்களைப் புகாரளிக்க அது உதவுவதாகவும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமைச்சகத்தின் கூற்றுப்படி, “இந்த செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த செயலி குறித்து அதிக விழிப்புணர்வு இல்லாத குடிமக்களுக்கும் இதை எளிதாக அணுகச் செய்வதற்காக, செயலியை முன்கூட்டியே நிறுவ முடிவு எடுக்கப்பட்டது.”

    "கடந்த ஒரு நாளில் மட்டும், 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யப் பதிவு செய்துள்ளனர். இது இந்த செயலி மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "சஞ்சார் சாத்திக்கு அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக, மொபைல் உற்பத்தியாளர்கள் அதை முன்கூட்டியே நிறுவுவதை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது."

    முன்னதாக, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில், 'சஞ்சார் சாத்தி' செயலி மூலம் உளவு பார்ப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

  17. இலங்கை: பலி எண்ணிக்கை 456-ஆக உயர்வு

    இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கைப் பேரழிவின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 465-ஆக (டிசம்பர் 2 மாலை 6 மணி நிலவரப்படி) உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 366 பேரைக் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

    4,37,507 குடும்பங்களைச் சேர்ந்த 15,58,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    783 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 31,417 வீடுகள் பகுதியளவு சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியிருக்கிறது.

  18. டி20 கிரிக்கெட்டில் சர்ஃபராஸ்கான் முதல் சதம்

    சையது முஷ்தாக் அலி போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் தன்னுடைய முதல் டி20 சதத்தை நிறைவு செய்தார். அவரது இன்னிங்ஸ் இந்திய அணித் தேர்வாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் வலுவான செய்தியாக கருதப்படுகிறது.

    அசாம் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 ரன்கள் அடிக்க, மும்பை அணி 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    210 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய அவர், தன்னுடைய இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடித்தார்.

    இந்திய அணிக்காக கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் ஆடியிருந்தார். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்குப் பிறகு அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

    நல்ல ஃபார்மில் இருந்தும், அவர் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் விவாதம் நடந்துவருகிறது.

  19. வணக்கம் நேயர்களே!

    இன்று (03.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.

  20. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை (டிசம்பர் 3) காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!